

“விவசாயிகளாக இருந்த என் பாட்டி-பாட்டன், ஓய்வில்லாமல் உழைத்த என் தாய்-தந்தை ஆகியோர் எப்போதுமே என்னுள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். அதுபோல் பொருளாதாரம் பற்றிய பாதுகாப்பின்மையும் என்னுள் எப்போதுமே உண்டு. என்னைப் போன்ற உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவர்களுக்கு, இது வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் அச்சம். நான் என் ஆசிரியர் பணியைத் தொடர்வதற்கு இது மட்டுமே காரணம்” என்கிறார், இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசைப் பெற்ற ஆனி எர்னோ (Annie Ernaux).
இந்தப் பயம், தான் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தின் காரணமாகத் தனக்கு ஏற்பட்ட, இன்னமும் ஏற்படுகிற தயக்கங்கள், நம்பிக்கையின்மை ஆகியவற்றையெல்லாம் தன் எழுத்தும் சுமந்து நிற்கிறதென்று எர்னோ கருதுகிறார். இதனால் அவரது எழுத்து வாசகர்களை இதமாக அரவணைத்துச் செல்லாது; உண்மைகளை அப்பட்டமாகப் பேசிச் சங்கடப்படுத்துவதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாதவராக உள்ளார் 82 வயதான எர்னோ. அலங்காரங்கள் அற்று, கூர்மையான கத்தியின் துல்லியத்துடன் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய மொழிக்குச் சொந்தக்காரர் எர்னோ.
நிதர்சனங்களின் கசப்பு: ஆனி எர்னோ 1940ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நார்மண்டி மாகாணத்தில் லீல்பான் நகரத்தில் பிறந்தவர். பக்கத்து ஊரான வீதாத்தில் வளர்ந்தவர். 15 வயதிலேயே தந்தையை இழந்தவர். மளிகைக் கடையும் ஒரு சிறிய கஃபேயும் நடத்திவந்த அவரது தாயின் உந்துதலால், படித்துப் பட்டம் பெற்று இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 2019இல் ஆனியின் ‘லெஸ் அன்னே’ நாவல் புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றது. 1970 முதல் 2006 வரையிலான தன் வாழ்வைச் சமூக, பொருளாதார, அரசியல், வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்குறிப்புகளைப் போல எழுதப்பட்ட படைப்பு இது. சுயசரிதையாக மட்டும் நின்றுவிடாமல், சமகாலத்தைப் பேசும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய முயற்சியாக இது பாராட்டப்பட்டது. அதில் தன்னுடைய அந்தரங்கத்தையும் சமகால அரசியல், சமூக நிகழ்வுகளையும் இணையாக வைத்து ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் இருக்கிறார் ஆனி. அந்நாட்டின் அதிபர் மக்ரூன், எர்னோவின் படைப்புகளைப் “பிரான்ஸ் நாட்டின் 50 வருட கால நினைவுகளின் தொகுப்பு” என்று பாராட்டியுள்ளார்.
ஆனி எர்னோவின் ஆக்கங்கள் நம்மை வாழ்வின் அவலங்களிலிருந்து தப்பிச்செல்ல எவ்வகையிலும் உதவாதவை. மாறாக, நம்மை நிதர்சனங்களின் விழுங்கமுடியாத கசப்புகளில் மூழ்கடிப்பவை. அவமானங்களே தன்னை மேலும்மேலும் எழுதத் தூண்டியதாகச் சொல்கிறார் எர்னோ. “எவ்வளவு எழுதிய பின்னும் அவமானங்கள் தீர்ந்து போவதில்லை. மனத்தின் உள்ளேயே வேர்பிடித்து நின்றுவிடுகின்றன. என்றாலும், எழுதுவதால் ஒரு பகிர்ந்துகொள்ளுதல் சாத்தியமாகிறது. அந்தப் பகிர்ந்துகொள்ளுதலின் வாயிலாக வேறொருவருக்கு ஆசுவாசம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணம் மட்டுமே சமாதானம் தருவதாக உள்ளது” என்று தன் எழுத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் அவர்.
உரத்துச் சொல்லும் பாங்கு: ‘லேஸ் ஆமுவா வீத்’ என்ற முதல் நாவலை எழுதுகையில் எந்தப் பயமும் தயக்கமும் இன்றி மிகத் துணிச்சலாக எழுத முடிந்ததென்றும், அது பிரசுரமான பின் தான் சந்தித்த கடுமையான விமர்சனங்களின் தாக்கத்தால் தன் இரண்டாவது புத்தகத்தை எழுதுவது பெரும் சவாலாக இருந்ததென்றும் எர்னோ கூறியிருக்கிறார். இதில் தனக்கும் தன் தந்தைக்குமான உறவைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இரண்டு புத்தகங்களும் சுயசரிதையின் கூறுகள் நிரம்பியவை. இதனாலேயே வாழ்க்கைக் குறிப்பு எழுதுபவராக எர்னோ அறியப்பட்டார். அவர் இந்தப் புத்தகத்தை எழுதிய காலத்தில், தான் பிறந்து வளர்ந்த உழைக்கும் வர்க்கத்தின் மீதே கடுமையான விமர்சனங்களை வைப்பவராக கம்யூனிஸ்ட்டுகளால் சாடப்பட்டார். வர்க்க விரோதியாகவும் பார்க்கப்பட்டார். ‘மெமோர் துஸ்சி’ என்ற படைப்பில் ஐம்பதுகளில் பெண்களின் நிலையைப் பற்றி விவரித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் ஹிஜாப் தடைசெய்யப்பட்டபோது, அதைக் கடுமையாக விமர்சித்தார். எக்காலத்திலும் பெண்களின் தனிப்பட்ட வாழ்வில் அரசு, மதம், பள்ளி, கல்லூரி போன்ற எல்லா நிறுவனங்களும் தலையிட்டுச் சட்டாம்பிள்ளையாக விதிமுறைகள் வகுப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் தெளிவாகப் பேசியுள்ளார்.
பொருத்தமான பரிசு: நாற்பதாண்டுகளாகத் தெடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் எர்னோ, தன் படைப்புகளின் வாயிலாகத் தன் அனுபவங்களை மட்டுமல்லாது, பொதுவெளிகளில் நாம் எதிர்கொள்ளும் முகமறியாத பெண்களின் உடல், உள்ளம் சார்ந்த சிக்கல்களை அரசியல் பின்புலத்தோடு ஆவணப்படுத்தியிருக்கிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது, இஸ்ரேலுக்கு எதிராகப் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார் எர்னோ. வெளிச்சத்துக்கு வராத மக்களின், இனங்களின் கேட்காத குரல்களை, பேசாப் பொருட்களைப் பேசத் துணியும் படைப்பாளர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பண்பட்ட சமுதாயமாக மாறுவதன் அறிகுறி அதுவே. அந்த வகையில் ஆனி எர்னோவுக்கு அறிவிக்கப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசு மிகவும் பொருத்தமானதே. ஆனி எர்னோவின் ஆக்கங்கள் நம்மை வாழ்வின் அவலங்களிலிருந்து தப்பிச்செல்ல எவ்வகையிலும் உதவாதவை. மாறாக, நம்மை நிதர்சனங்களின் விழுங்கமுடியாத கசப்புகளில் மூழ்கடிப்பவை.
அனுராதா ஆனந்த்
மொழிபெயர்ப்பாளர், கவிஞர்
தொடர்புக்கு: anuradha_anand@yahoo.com