

அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு சிறையில் உள்ள மனித உரிமைப் போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும் ரஷ்யாவில் உள்ள ‘மெமோரியல்’ எனும் மனித உரிமை அமைப்புக்கும் உக்ரைனையும் ரஷ்யாவையும் ஒட்டியுள்ள பெலாரஸ் எனும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இயங்கும் ‘சிவில் உரிமைகளுக்கான மையம்’ (Centre for Civil Liberties) எனும் அமைப்புக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
1980-களின் மத்தியில் பெலாரஸில் ஜனநாயக இயக்கம் ஒன்றை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவரான பியாலியாட்ஸ்கி ஒரு ஜனநாயகப் போராளி. ‘விஸ்னா’ எனும் அமைப்பை உருவாக்கி, சர்வாதிகாரத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை எதிர்த்து நின்று போராடி, 2011 முதல் 2014 வரை சிறையில் அடைக்கப்பட்டவர். விடுதலையான பிறகும் தொடர்ந்து சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்ற அவர், மீண்டும் 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெலாரஸ் புதினின் ரஷ்யாவுக்கு மிக அருகிலும் அரசியல்ரீதியாகவும் நெருக்கமாக உள்ள ஒரு நாடு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் இயங்கும் ‘மெமோரியல்’ அமைப்பு, ஸ்டாலின் காலத்து அத்துமீறல்களை ஆவணப்படுத்தியதோடு, தொடர்ந்து இன்று வரை ரஷ்ய அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த விரிவான ஆவணப்படுத்தலையும் மேற்கொண்டுவருகிறது. சட்டத்தின் ஆட்சி, ராணுவமயமாதலுக்கு எதிர்ப்பு என இயங்கிவரும் அமைப்பு அது. 2009இல் இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான நடாலியா எஸ்டெமோரியா கொல்லப்பட்டார். பரிசளிக்கப்பட்ட இன்னொரு அமைப்பான ‘சிவில் உரிமைகளுக்கான மையம்’ 2007 முதல் செயல்பட்டுவருகிறது. உக்ரைனில் சிவில் சமூகத்தை வலிமைப்படுத்துதல், அதன் ஜனநாயக உரிமைகளுக்காக நிற்றல், உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை ஆவணப்படுத்தல், ரஷ்யாவின் போர்க் குற்றங்களை உலகறியக் கொண்டுசெல்லல் எனச் செயல்படும் ஒரு அமைப்பு இது. இப்படி மனித உரிமைப் போராளிகளுக்கும் அமைப்புகளுக்கும் பரிசளிப்பதைப் பாராட்டியபோதும் இந்த மூன்று தேர்வுகளின் பின்னணியிலும் முழுக்க முழுக்க ஒரு ரஷ்ய எதிர்ப்பரசியல் வெளிப்படுவதை நாம் கவனிக்காது இருக்க இயலாது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் எழுபதாவது பிறந்தநாளன்று இந்தப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை உலகளவில் முக்கியமான மனித உரிமை அமைப்பான ‘மனித உரிமைக் கண்காணிப்பக’த்தின் (Human Rights Watch) முன்னாள் தலைவர் கென்னத் ரோத் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ரஷ்யா ஒரு யோக்கியமான நாடு என்று கூற முடியாது. ஆனால், உக்ரைன் மீதான அதன் படையெடுப்பு முதலியவற்றில் நியாயமே இல்லை எனச் சொல்லிவிட இயலாது. சோவியத் ஒன்றியம் சிதறியபோது, இப்படிப் பிரிந்த நாடுகள் அமெரிக்கக் கைப்பாவையான ‘நேட்டோ’ அமைப்பில் இணைக்கப்படக் கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால், சோவியத் அணியிலிருந்த 12 நாடுகள் ‘நேட்டோ’வில் அடுத்தடுத்து இணைக்கப்பட்டுள்ளதை நாம் மறந்துவிட முடியாது. ‘நேட்டோ’வில் அங்கமாகியுள்ள அனைத்துக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இன்று முழுமையாக அமெரிக்க மற்றும் ‘நேட்டோ’ நாடுகளின் போர்க் காலனிகளாக மாற்றப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவைப் பொறுத்தமட்டில் உக்ரைன் பல வகைகளில் மிக முக்கியமானது. தன் எல்லை ஓரத்தில் உள்ள உக்ரைனை அது அமெரிக்கக் கூட்டணியிடம் அளிப்பது என்பது, அதன் தற்கொலைக்குச் சமம். எல்லை ஓரத்தில் உள்ளது என்பது மட்டுமல்ல, ‘நேட்டோ’வின் வீச்சிலிருந்து தற்போது அதை விலக்கி நிறுத்தியுள்ள நாடும் அதுதான். அதுவும் ‘நேட்டோ’வின் கையில் சிக்கினால் ரஷ்யா கிட்டத்தட்ட நிரந்தர முற்றுகை இடப்பட்ட நாடாக மாறிவிடும். இதைக் காரணமாகக் கொண்டு இன்று ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை ஏற்க முடியாத ஒன்று.
நோபல் பரிசு என்பது முழுக்க முழுக்க அரசியல் நோக்கிலேயே மேற்கொள்ளப்படும் ஒன்று. உலகமே போற்றி வணங்கிய மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்காக 1937, 38, 39, 47, 48 ஆகிய ஆண்டுகளில் முன்மொழியப்பட்டபோதும் அவருக்கு இறுதிவரை பரிசளிக்க மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசுத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இருந்ததே கிடையாது. இன்று பரிசு வழங்கப்பட்டுள்ள பியாலியாட்ஸ்கி ஒரு கடும் புதின் எதிர்ப்பாளர் என்பதும் இங்கு கவனத்திற்குரியது. பரிசு வழங்கப்பட்டுள்ள இரு அமைப்புகளும் இன்று புதினுக்கு எதிராக இயங்கிவருபவைதான். புதினுக்கு எதிராக யாரும் இயங்கக் கூடாது என நான் சொல்ல வரவில்லை. இன்றைய இந்தப் பரிசளிப்பின் உள்நோக்கத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். ஜனநாயகப் போராளி என்பதற்காக இந்தப் பரிசுகள் இன்று இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அப்படியான ஜனநாயகப் போராளிகள் இன்று இந்தியாவிலும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக உரிய விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் எல்லாம் ஏன் இவர்களின் கண்களில் படவில்லை?
சோவியத் ஒன்றியம் சிதைந்தது என்பது இருக்கட்டும். அதில் நியாயங்களும் இருக்கலாம். ஆனால், எல்லா நாடுகளிலும்தான் பிரிவினைக் கோரிக்கைகள் உள்ளன. அங்கெல்லாமும் இப்படி உலக நாடுகள் முன்கை எடுத்து அந்தப் பிரிவினைகள் செயல்படுத்தப்பட்டனவா? பியாலியாட்ஸ்கிக்கும் மற்ற இரண்டு அமைப்பு களுக்கும் விருது வழங்கப்பட்டதை வரவேற்கும் அதே நேரத்தில், இந்தப் பரிசளிப்பு வழக்கம்போல உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதைப் பதிவுசெய்யாமலும் இருக்க இயலாது.
அ.மார்க்ஸ்,
பேராசிரியர்,
மனித உரிமைச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: writermarx1949@gmail.com