நோபல் 2022 மருத்துவம் | மனிதர்களை மனிதர்களாக ஆக்குவது எது?

நோபல் 2022 மருத்துவம் | மனிதர்களை மனிதர்களாக ஆக்குவது எது?
Updated on
3 min read

மனிதகுலத்தின் தோற்றம் குறித்து அறிவியலாளர்கள் எப்போதும் பெருவேட்கை கொண்டிருக்கிறார்கள். நவீன மனிதர்களான ஹோமோ சேப்பியன்ஸ் எங்கு, எப்போது தோன்றினர்? ஹோமோ என்ற பேரினத்தின் (Genus) மற்ற இனங்களிலிருந்து (Species) மேம்பட்டு முன்நிகழ்ந்திராத ஒன்றாகச் சமூகத்தையும் பண்பாட்டையும் நவீன மனிதர்கள் (சேப்பியன்ஸ்) கட்டமைத்தது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு அறிவியலாளர்களும் அறிஞர்களும் தத்துவவியலாளர்களும் பல நூறு ஆண்டுகளாக விடை தேடிவருகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஓவியர் பால் கோகன், ‘Where Do We Come From? What Are We? Where Are We Going?’ என்ற ஓவியம்வழி கலையிலும் இக்கேள்வியை எழுப்பியிருக்கின்றார்.

இந்தப் பின்னணியில், சாத்தியமில்லாதது என்று கருத்தப்பட்ட, ‘அற்றுப்போய்விட்ட மனித இனங்களின் மரபணுத்தொகுதி சார்ந்தும் மனிதப் பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும்’ ஸ்வீடனைச் சேர்ந்த மரபணுவியலாளர் ஸ்வாந்தே பேபுவுக்கு (Svante Pääbo) இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பெரும் கேள்விகளுக்கான பதில்களை நாம் நெருங்கிவிட்டோம் என்பது இதன் மூலம் துலக்கமாகிறது.

பின்னோக்கிப் பாய்ந்த ஸ்வாந்தே: ஸ்வாந்தே பேபு 1955இல் ஸ்டாக்ஹோமில் பிறந்தார். இவரது தந்தை ஸ்வீடனைச் சேர்ந்த உயிரிவேதியியலாளரான (1982இல் மருத்துவ நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட மூவரில் ஒருவர்) சூன் பெர்க்ஸ்ட்ரோம்; தாய், ஸ்வீடனில் குடியேறிய எஸ்டோனியாவைச் சேர்ந்த வேதியியலாளர் கரின் பேபு. 1980களின் தொடக்கத்தில் நியாண்டர்தால்கள் பற்றிய ஆய்வில் பேபு இறங்கியபோது, அறிவியல் உலகிலேயே நியாண்டர்தால் பழங்கதையாகி இருந்தது. எனினும், நவீன மரபணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நியாண்டர்தால்களின் டி.என்.ஏ-வை ஆராயும் சாத்தியங்கள் குறித்து பேபு பேரார்வம் கொண்டிருந்தார். ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் சிறு துண்டுகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் டி.என்.ஏ-வின் தடங்கள் பாக்டீரியா, பூஞ்சையின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கும் என்பது அவரது ஆராய்ச்சிக்குப் பெரும் சவாலாக அமைந்தது. பேபு மனம் தளரவில்லை. 1984இன் தொடக்கத்தில், உப்பசாலா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த பேபு, 2,400 ஆண்டுகள் பழைமையான எகிப்திய மம்மியிலிருந்து டி.என்.ஏ-வைப் பிரித்தெடுத்தது அவருடைய துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தன் ஆய்வைத் தொடரவிடாமல் நெறியாளர் தடுத்துவிடுவார் என்கிற அச்சத்தில் இந்த ஆராய்ச்சிகளை இரவுகளிலும் வார இறுதியிலும் மேற்கொண்டதாகப் பின்னாட்களில் பேபு கூறினார். எனினும் ‘நேச்சர்’ ஆய்விதழ் பேபுவின் ஆய்வு முடிகளை ஏற்றுக்கொண்டது; படிவத் திசுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட டி.என்.ஏ. பற்றிய ஒரே ஆய்வுக் கட்டுரை, அந்தக் காலகட்டத்தில் இது மட்டுமே.

மரபணு திறந்த வாசல்கள்: கலிஃபோர்னியா பெர்கெலி பல்கலைக்கழகத்தின் அலான் வில்சன் குழுவில் அதன் பிறகு பேபு சேர்ந்தார். இங்கு மற்ற ஆய்வுகளுடன், அற்றுப்போன உயிரினங்களின் மரபணுத் தொகுதி சார்ந்து ஆய்வு மேற்கொண்டார். ஆனால், நியாண்டர்தால்கள் குறித்த ஆய்வில்தான் அவர் முதன்மை ஈடுபாடு கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை மனிதர்களாக ஆக்குவது எது என்பதையும், மனிதப் பரிணாமத்துக்குப் பங்களித்த மரபணு மாற்றங்கள் யாவை என்பதையும் கண்டறிய அவர் முற்பட்டார். 1990இல் இந்த ஆய்வை மியூனிக் பல்கலைக்கழகத்தில் பேபு தொடர்ந்தார். அங்கு அவருடைய கவனம் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ-வில் குவிந்தது. இதன் விளைவாக, 1850-களில் ஜெர்மனியின் துஸ்ஸெல்தாஃப் (Düsseldorf) அருகே கண்டறியப்பட்ட சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் எலும்புக்கூட்டிலிருந்து மரபணுவை வெற்றிகரமாக 1997இல் பிரித்தெடுத்தார். ஆதி மனிதரிடமிருந்து மரபணு பிரித்தெடுக்கப்பட்டது உலகில் அதுவே முதல் முறை.

இந்தக் காலகட்டத்தில்தான், ஜெர்மனியின் லைய்ப்ஸியில் (Leipzig) பரிணாம மானுடவியலுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைத் தொடங்கி, ஆய்வு மேற்கொள்ள பேபுவுக்கு அழைப்புவந்தது. அந்த அழைப்பை ஏற்று, தனது குழுவினருடன் இங்கு தீவிர ஆய்வில் இறங்கிய பேபு, ஆதி மனிதர்களின் எலும்பு எச்சங்களிலிருந்து டி.என்.ஏ-வைப் பிரித்தெடுத்துப் பகுப்பாயும் முறைகளைச் சீராக மேம்படுத்தினார். ஆய்வில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து டி.என்.ஏ வரிசைப்படுத்துதலைத் திறன்மிக்கதாக மேம்படுத்தினார். பேபுவின் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தது; சாத்தியமற்றது என்று கருதப்பட்ட நியாண்டர்தால்களின் மரபணுத் தொகுதி வரிசைப்படுத்துதலை 2010இல் பேபு சாத்தியமாக்கிக் காட்டினார். இது ஒரு பெரும் சாதனை. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி நியாண்டர்தால்களுக்கும் ஹோமோ சேப்பியன்களுக்கும் மிக அண்மைய முன்னோர் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. நியாண்டர்தால்களின் மரபணுக்கள் நவீன மனிதர்களுக்குக் கடத்தப்பட்டிருப்பதை பேபு குழுவினர் உறுதிசெய்தனர்.

இனத்தூய்மைவாதம் பொய்யே!: பேபுவும் அவரது குழுவினரும் நியாண்டர்தால்களுக்கும் உலகெங்கிலும் பரவியுள்ள நவீன மனிதர்களுக்குமான தொடர்பை ஆராய்ந்தனர். விளைவாக, சமகால ஆப்பிரிக்க மனிதர்களைவிட ஐரோப்பிய அல்லது ஆசிய மனிதர்களின் மரபணுத் தொகுதியுடன் நியாண்டர்தால்களின் மரபணுத் தொகுதி வரிசை அதிகளவு ஒத்துப்போவதைக் கண்டறிந்தனர். நவீன கால மனிதர்களில் ஐரோப்பிய அல்லது ஆசிய வம்சாவளியினர் நியாண்டர்தால்களின் மரபணுக்களில் தோராயமாக 1-4%-ஐக்கொண்டிருப்பதற்கு இதுவே காரணமாக அமைகிறது.

சைபீரியாவின் தெற்குப் பகுதியில் அல்தாய் மலையின் டெனிசோவா குகையில் 40 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான விரல் எலும்பு 2008இல் கண்டறியப்பட்டது. பனியால் சூழப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த அதன் டி.என்.ஏ-வைவரிசைப்படுத்திய பேபுவின் குழுவினர், அதன் முடிவுகளைக் கண்டு திகைத்துப் போயினர். நியாண்டர்தால் தொடங்கி நவீன மனிதர் வரையிலான எவருடைய மரபணுத் தொகுதியுடனும் சேராத புதிய மரபணுத் தொகுதியை அது கொண்டிருந்தது. அறிவியல் உலகம் அதுவரை அறிந்திராத புது இனம் ஒன்றை பேபு குழுவினர் கண்டறிந்தனர்; அதற்கு டெனிசோவா என்று பெயரிட்டனர். தொல்மரபணுவியல் (Paleogenetics) என்கிற புதிய துறை பிறந்தது.

இப்படியாகப் பேபுவின் கண்டுபிடிப்புகள் பரிணாமவியல் வரலாற்றில் புதிய புரிதல்களை உருவாக்கின. மனிதகுலத்தின் பெரும் இடப்பெயர்வு குறித்த புதிய அறிதல்களை அறிவியல் சமூகத்துக்கு வழங்கின. பேபுவின் கண்டுபிடிப்புகள் கடந்த காலத்தின் மீது மட்டும் வெளிச்சம் பாய்ச்சவில்லை; நியாண்டர்தால்களின் சில மரபணுக்கள் நவீன மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் செலுத்தும் தாக்கத்தையும் விளக்குகின்றன. எடுத்துக்காட்டாக, மூன்றாம் குரோமோசோமில் நியாண்டர்தால் வேற்றுரு கொண்டிருப்பவர்கள் தீவிர கோவிட்-19க்கான அதிக ஆபத்தைக் கொண்டிருப்பதாக, 2021இல் பேபுவும் அவரது குழுவினரும் அறிவித்திருந்தனர்.

ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் இனத்தூய்மைவாத அரசியல் தீவிரமடைந்துவரும் சூழலில், ஸ்வாந்தே பேபுவின் கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகில் மட்டுமின்றி, சமூகவியலிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஹோமோ பேரினத்தில் நவீன மனிதர்களான சேப்பியன்ஸ் இனம் மட்டுமே பரிணாம வளர்ச்சியில் இன்று பிழைத்திருக்கிறது; சேப்பியன்ஸின் மரபணுக்களில் காணப்படும் நியாண்டர்தால், டெனிசோவா இனங்களின் மரபணுக்கள் உலகெங்கிலும் உயர்வு-தாழ்வு பேசும் இனத்தூய்மைவாதத்தைப் பட்டவர்த்தனமாக இல்லாமல் ஆக்குகின்றன. அரசியல்வாதிகள் இதை உணர்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது; ஆனால், மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!


தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in