Last Updated : 30 Jul, 2014 09:16 AM

Published : 30 Jul 2014 09:16 AM
Last Updated : 30 Jul 2014 09:16 AM

கும்பகோணம் கொடுமை: தீயில் தப்பிய மாணவர்கள் சொல்வதென்ன?

ஜூலை 16, 2004, கும்பகோணம் கொலைத் தீயின்போது ஏற்பட்ட ஆறா வடுக்களைச் சுமந்தபடி, கும்பகோணத்திலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் வசித்துவரும் உயிர் தப்பிய குழந்தைகளை, இந்த வழக்கின் தீர்ப்புக்கு முந்தைய நாளில் சந்தித்தபோது அவர்கள் தெரிவித்தது:

ஜி. ராகுல்

அப்ப நான், இங்கிலீஷ் மீடியத்துல 3-வது படிச்சிக்கிட்டுருந்தேன். ஷூ, சாக்ஸ், டை எல்லாத் தையும் கழட்டிட்டு மேல கூட்டிப்போய் ஒக்கார வச்சிட்டு, கிரில் கதவப் பூட்டிட்டு டீச்சருங்க எல்லாம் கோயிலுக்குப் போய்ட்டாங்க. தீப் புடிச்ச ஒடனேயே, புள்ளைங்க கத்துனாங்க. நான் பெஞ்சுக்குக் கீழ புகுந்துட்டேன். ஒரே புகைமூட்டம். வெளியில இருந்தவங்க வந்து காப்பாத் துனாங்க. ஸ்கூல்காரங்க கரெக்டா இருந் திருந்தா இது நடந்திருக்காது. ஆரம்பத்துல டிரீட்மென்ட்டுக்கு அரசாங்கம் உதவிச்சு. இப்ப, ப்ளஸ் டூ கம்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். தீர்ப்பு நல்லதா வரணும். நடந்த கொடுமைக்குக் காரணமா இருந்தவங்களுக்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்கணும். இதுமாதிரி வேற யாருக்கும் இனிமே நடக்கக் கூடாது.

அ. கௌசல்யா

நான் மூணாம் கிளாஸ் படிச்சிக்கிட்டுருந்தேன். நான், கீழ கிளாஸ்ல இருந்தேன். மேல அழைச் சிட்டுப்போய் ஒக்கார வச்சாங்க. திடீர்னு தீ புடிச்சிகிச்சு. நான், எங்க மாமா பையன், பக்கத்து வீட்டுப் பசங்க நாலஞ்சி பேர என்னோட கூட்டிக்கிட்டுப்போயி, பெஞ்சுக்குக் கீழ நொழஞ்சிகிட்டேன். ஆனா, அதுக்குள்ள அந்தப் பசங்க என் கண் முன்னாடியே கூரை விழுந்து எரிஞ்சிபோய்ட்டாங்க. பக்கத்து வீட்ல வேல செஞ்சிக்கிட்டுருந்த கொத்தனாரு என்னயக் காப்பாத்தினாரு. என்னை மாதிரி உலகத்துல வேறு எந்தப் புள்ளையும் கஷ்டப்படக் கூடாது. அப்பா, அம்மாவுக்கு தினமும் வேதனதான். எங்கயுமே நான் வெளிய போக முடியாது. இந்தப் புள்ளக்கி என்ன ஆச்சி? கை ஏன் இப்படி இருக்குனு கேக்குறாங்க. இதுபோல இனிமே எங்கயும் நடக்கக் கூடாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கணும். நான் நெறையப் படிக்கணும்னு ஆசப்படுறேன். ஆனா, எங்க அப்பா கூலி வேலதான் பாக்குறாங்க. அதனால, அரசாங்கம்தான் என்னப் படிக்க வெக்கணும்.

பா. விஜய்

அத எப்படி மறக்கறது. மறக்க நெனச்சாலும் முடியல. சின்னதா ஃபயர் சர்வீஸ் சத்தம் கேட்டாக் கூட ஸ்கூலோட ஞாபகம்தான் வருது. அன்னைக்கிக் காலையில படிச்சிக்கிட்டு இருந்தோம். தனபால்னு ஒரு சாரு வந்து, எல்லாரும் மாடிக்குப் போங்கனு சொன்னாரு. அப்ப எங்கள அந்த சாரு, மாடி கொட்டாயில தள்ளி, கிரில் கேட்ட இழுத்து மூடிட் டாரு. அப்புறம்தான் சமையக்கூடத்துல தீப்புடிச்சு எரிஞ்சிச்சி. அப்ப அந்தக் கொட்டாயும் தீப்புடிச்சி எரிஞ்சதால, எங்களால ஒண்ணும் செய்ய முடியல. நான், பெஞ்சுக்குக் கீழ ஒளிஞ்சிக்கிட்டேன். அப்பறம் என்னக் காப்பாத்தி ஆஸ்பத்திரில சேத்தாங்க. சென்னை அப்போலோவுலயும் சேத்தாங்க. கேஸ் நடந்தப்ப, வக்கீலுங்க அப்படி ஒரு ஸ்கூலே கும்பகோணத்துல இல்ல. நீ பொய் சொல்றன்னுல்லாம் சொன்னாங்க. அவங்க புள்ள இப்படிப் பாதிக்கப்பட்டிருந்தா இப்படிக் கேப்பாங்களா? எங்களைப் பேசவே விடல. நான் மட்டும் இல்ல. இதுல பாதிக்கப்பட்ட 18 பேரு உயிரோடதான் இருக்கோம். எல்லாருக்கும் ஒரு நியாயமான தீர்ப்பு வேணும். எங்க அப்பா கூலி வேலதான் பாக்குறாங்க. நாங்க படிக்கிறதுக்குத் தேவையானத அரசாங்கம் செய்யணும். படிச்சு நல்ல வேலைக்குப் போகணும். அதுதான் என்னோட ஆசை.

தொகுப்பு: சி. கதிரவன்.

தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x