Published : 12 Oct 2022 07:01 AM
Last Updated : 12 Oct 2022 07:01 AM

சுருக்குமடிப் பிரச்சினை: களநிலவரமும் தீர்வும்!

ஆர்.என்.ஜோ டி குருஸ்

தமிழகக் கடலோரங்களில் பாரம்பரிய மீனவரின் சுருக்குமடி மீன்பிடித்தல் முறை, அந்தந்தப் பிராந்தியங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைக்குக் காரணமாகியிருப்பது நாம் அறிந்ததே. தென்பகுதியில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாரிழைப் படகுகள் மூலம் நடக்கும் இந்தத் தொழில், வடக்கு மாவட்டங்களில் அனுமதி கிடைத்தால், மீன்பிடி தடைக்காலம் தவிர்த்த மற்ற காலத்தில் நாரிழைப்படகுகள், விசைப்படகுகள் மூலம் இணைந்து நடத்தப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆட்சியதிகாரத்தில் இருப்போரின் புரிதலின்மை காரணமாகவும், பிராந்தியத்தின் தனிநபர் விருப்பு, வெறுப்புகளாலும் இத்தொழில் பிரச்சினைக்குள்ளாகி கரைக்கடல், அண்மைக்கடல் நீரோட்டத்தில் தற்காலிகமாய்ப் பயணிக்கும் மீன்வளம் ஒருவருக்கும் பயன்படாமல், வீணாய்க் கடலில் மடிந்துவிடுகிறது.

சுருக்குமடித் தொழில்: பட்டறிவின் துணைகொண்டு, பாரம்பரிய மீனவர்கள் மேற்கொண்ட அடுத்தகட்டத் தொழில்நுட்ப நகர்வே சுருக்குமடி. கைக்கு அடக்கமான மணிவலையை வீசிவந்த மீனவர்கள், பங்காளிகளாய்ப் பலரையும் இணைத்துக்கொண்டு, நீரோட்டத்தில் பயணிக்கும் மீன்கூட்டத்தை விரட்டி மடிவளைத்துப் பிடிப்பதுதான் சுருக்குமடித் தொழில். வணிக விசைப்படகு மீனவரின் இழுவைமடிபோல், சுருக்குமடி கடலடிப் பாறைகளைப் பாழ்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலுக்கோ, மீன்களின் இனவிருத்திக்கோ எந்த விதத்திலும் ஊறுவிளைவிக்காத இத்தொழில், நீரோட்டத்தில் மேலெழுந்து பயணிக்கும் மீன்கூட்டத்தையே குறிவைக்கிறது. சூரிய உதயத்துக்குப் பின் கரைக்கடல் நீரோட்டத்தைக் கணித்த பிறகே, இவர்களது மீன்வேட்டம் தொடங்குகிறது. விரட்டப்படும் மீன்கள் பிடிபடாமல் வேட்டம் பலமுறை தோல்வியடைவதும் உண்டு. உணவுக்காகவும் நீரின் வெப்பநிலை மாற்றத்தின் காரணமாகவும் தென் ஆப்பிரிக்கக் கடலடிப் பாறைப் பகுதியிலிருந்து தொடங்கும் மீன் கூட்டத்தின் பயணம், எதிரெதிராக இயங்கும் கரைக்கடல் நீரோட்டங்களால் ஆங்காங்கே கட்டுப்படுத்தப்பட்டு, அப்பகுதி கடற்கரையூர்களின் வரப்பிரசாதமாக மாறிவிடுகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றின் ஆயுளை முடித்துக்கொள்ளும் தன்மை புரிந்தே, பாரம்பரிய மீனவர்கள் கரைக்கடலிலும், அண்மைக்கடலிலும் அவற்றை விரட்டிப் பிடிக்கிறார்கள்.

பிரச்சினையின் அடிநாதம்: வழக்கமான செவுள்வலைகளைப் போலல்லாமல் சுருக்குமடி அதிக முதலீட்டைக் கோருவதால், பாரம்பரிய மீனவரில் பல குடும்பங்கள் இணைந்து இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். ஆனால், சாதாரண செவுள்வலைத் தொழில் செய்பவரும், சுருக்குமடி வைத்துப் பெருவேட்டம் செய்பவரும் பிடிக்கும் மீன் அளவிலும், தரத்திலும் வித்தியாசம் இருப்பதால், இத்தொழில் கடலோர ஊர்களில் தனிநபர் விருப்பு, வெறுப்புகளுக்குக் காரணமாகிவிடுகிறது. இதுவே சுருக்குமடிப் பிரச்சினையின் அடிநாதம். பெருவாரியான மீன்கள் கரைக்குக் கொண்டுவரப்பட்டு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளுக்குக் காரணமாகும் இச்சுருக்குமடித் தொழில், உள்ளூர் - பிராந்திய அரசியலில் சிக்கிச் சீரழிவதும் உண்டு. அடிப்படையில் ஆதார விலை ஏதும் இல்லாத இந்த மீன்களின் விலையைப் பெரும்பாலும் உள்ளூர் வியாபாரிகளே தீர்மானிக்கிறார்கள். கடலில் பிடிபடும் மீன்களுக்கு அடிப்படையான ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டுமென்ற கோரிக்கை கடற்கரையூர்களில் இருந்தாலும், மீன் விலையை உள்ளூர் சந்தையே நிர்ணயிக்கிறது.

சுருக்குமடிக்குப் போகும் நாட்களில் சாதாரண செவுள்வலைக்குப் போகும் மீனவர்கள் கொண்டுவரும் மீன்களுக்கான விலை, சுருக்குமடி மீன்களை எதிர்பார்த்தே வியாபாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. சுருக்குமடியால் கரைக்குக் கொண்டுவரப்படும் பெருவாரியான மீன்களால், விலை இறங்கிவிடுவது ஒருபுறமென்றால், தரம் காரணமாகச் சுருக்குமடி மீன்களையே விரும்பி எடுக்கும் உள்ளூர் வியாபாரிகளின் போட்டியே, பிரச்சினை தீவிரமடைவதற்கான முக்கியக் காரணம். இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் மிகவும் பிரபலமாய் இருக்கும் இத்தொழிலை, இங்கு ஏன் தடைசெய்ய வேண்டும் என்பது சுருக்குமடி மீனவரின் எளிமையான கேள்வி. மேற்குக் கடற்கரையில் குஜராத் தொடங்கி கேரளம் வரை, செழுமையான அரபிக் கடலில் மீன்பாட்டுக்குக் குறைவில்லை. பரந்த கண்டத்திட்டுக் கடல் பரப்பில் தொழில் போட்டியில்லை. சுருக்குமடி மீனவருக்கும், செவுள்வலை மீனவருக்கும் சண்டைச் சச்சரவுகள் இல்லை. ஆனால், தமிழகத்தில் பிரச்சினைகள் பூதாகரமாகி, பிராந்தியத்தைக் கலவரநிலைக்குத் தள்ளிவிடுகின்றன.

களநிலவரமும் தீர்வும்: தமிழகத்தின் குறைவான கண்டத்திட்டுக் கடல்பரப்பில் தொழில்போட்டி அதிகம். ஒரே கடல்பரப்பில் தொழில் செய்து, ஒரே கடற்கரைக்குத் தாங்கள் பிடித்த மீன்களை இரண்டு தரப்பும் கொண்டுவரும் வேளையில், கண் முன்னே தெரியும் சுருக்குமடியின் அதீத மீன்வரத்தும், அதன் தரமும் செவுள்வலை மீனவரைக் கோபமுறச் செய்துவிடுகிறது. ஒப்பீட்டில் சுருக்குமடி மீனவர்கள் சிறுபான்மையாகி; செவுள்வலை மீனவர்கள் பெரும்பான்மையாகி, இழப்பும் அவர்கள் பக்கமே இருப்பதால் அரசுக்கு அவர்களோடு நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. தமிழகத்தின் குறைவான கண்டத்திட்டுப் பகுதியில், அதிகமான இழுவைவலை மீன்பிடிப்பே கடல் மலடானதற்கான அடிப்படைக் காரணம். மத்திய - மாநில அரசுகளின் ஆழ்கடல் மீன்பிடிப்பு, ஊக்குவிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்குப் பின்னும் இழுவைமடி மீன்பிடிப்பை இங்கு நிறுத்த முடியவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் தானாகவே அழிந்துவிடும் மீன்வளத்தைச் சுருக்குமடி மீனவர்கள் பிடிப்பதைத் தடுப்பதில் நியாயமில்லை என்னும் வேளையில், அவர்களுடன் வாழும் செவுள்வலை மீனவரின் பொருளாதார இழப்பையும் கருத்தில் கொண்டாக வேண்டும். இதன் காரணமாகவே மாநில அரசின் மீன்வளத் துறை, இடத்துக்குத் தகுந்தாற்போல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

களநிலவரம் சார்ந்து அக்கறையோடு ஆய்வு நடத்தினால், சுருக்குமடிப் பிரச்சினைக்கான தீர்வு அரசின் மீன்வளத் துறையிடமோ, அதிகார மையங்களிடமோ இல்லை. மாறாக, பாரம்பரிய மீனவரின் ஒற்றுமையிலேயே இருக்கிறது. சுருக்குமடிக்குப் போகும் நாட்களில், செவுள்வலை மீனவர்களின் மீன்களுக்கு ஏலத்தில் முன்னுரிமை கொடுத்து விற்றுத் தீர்ந்தபின், சுருக்குமடி மீன்கள் ஏலத்துக்கு வரும் ஏற்பாட்டுக்குச் சுருக்குமடி மீனவர்களும் வியாபாரிகளும் உடன்பட வேண்டும்.

அடுத்ததாகச் சுருக்குமடியின் வலைக்கண்ணியின் அளவிலும் பிரச்சினைகள் இருப்பதாகச் செவுள்வலை மீனவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அளவில் குறைந்த நெத்திலி போன்ற பொடிமீன்கள் சுருக்குமடிக் கண்ணிகளிலிருந்து வெளியேற முடியாததால், பெருங்கூட்டமாய் வரும் இணைமீன்களுக்கும், துணைமீன்களுக்கும் வழித்தடத்தில் உணவில்லாமல் பாதையை மாற்றி ஆழ்கடல் நோக்கிப் பயணித்துவிடுவதால் தொழில்வளம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். கடல்வளத்தைப் பாழ்படுத்தும் வணிக மீனவரின் இழுவைமடியின் தூர்மடிக் கண்ணிகள் 12 மி.மீ-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், சுருக்குமடிக் கண்ணிகளின் அளவு 18/20 மி.மீ. அளவிலேயே இருக்கின்றன. சுருக்குமடிக் கண்ணிகளின் அளவை, அதன் உற்பத்தி - விநியோக நிலையிலேயே அரசு தீவிரமாய்க் கண்காணிக்க வேண்டும். இதன்மூலமே கரைக்கடலில் வீணாய் அழியும் மீன்வளம் பயன்பாட்டுக்கு வந்து, சுருக்குமடிப் பிரச்சினையும் தீர்வை நோக்கி நகரும்.  இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் மிகவும் பிரபலமாய் இருக்கும் இத்தொழிலை, இங்கு ஏன் தடைசெய்ய வேண்டும் என்பது சுருக்குமடி மீனவரின் எளிமையான கேள்வி.

ஆர்.என்.ஜோ டி குருஸ்
‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’
உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x