நோபல் 2022 வேதியியல் | ‘கிளிக்’ வேதிவினை திறந்துள்ள புதிய வாசல்!

நோபல் 2022 வேதியியல் | ‘கிளிக்’ வேதிவினை திறந்துள்ள புதிய வாசல்!
Updated on
2 min read

வேதி வினைகளில் உள்ள பொதுவான சிக்கல்களைக் குறைத்து, எளிய முறையில் பயன்மிகு வேதிப்பொருட்களைக் கட்டமைத்தல் தொடர்பான ‘கிளிக்’ வேதியியல் (Click chemistry), பயோ ஆர்தாகனல் வேதியியல் (Bio orthogonal chemistry) ஆகிய புதிய துறைகளை உருவாக்கியமைக்காக, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கரோலின் ஆர்.பெர்டோசி, பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா), மோர்டன் மேல்டால் (டென்மார்க்) ஆகிய மூன்று வேதியியலாளர்களுக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து, விவசாயம் சார்ந்த மூலக்கூறுகள் தயாரித்தலில் புதிய கோணத்தில் பயனுள்ள மூலக்கூறுகளை உருவாக்க உதவும் கிளிக் கெமிஸ்ட்ரி என்கிற வேதிவினைக்கு அடித்தளமிட்ட பேரி ஷார்ப்லெஸ், வேதியியலுக்காகப் பெறும் இரண்டாவது நோபல் இது. 2000-ஐ ஒட்டிய ஆண்டுகளில் எளிய, துரிதமான, தேவையற்ற துணைப்பொருட்களை அதிகம் உருவாக்காமல் தேவையான மூலக்கூறுகளை உற்பத்திசெய்யும் வேதிவினை தொடர்பான ஆராய்ச்சியில் பேரி ஈடுபட்டிருந்தார். அதே ஆண்டுகளில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேதியியலாளர் மோர்டன் மேல்டாலும் கிளிக் வேதிவினை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் இருவரும் தனித்தனியாக எளியமுறை கிளிக் வேதிவினையான தாமிர அயனியை வினையூக்கியாகச் செயல்படுத்தி அசைடு (N3) - அல்கைன் சுழற்சி சேர்க்கை என்ற புதிய முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். கொக்கிகளைப் பூட்டுதல் முறையை உருவகப்படுத்தும் இந்த எளிமையான வேதிவினையால், ஒரு வேதிப்பொருளின் ஒரு முனையில் உள்ள கொக்கி போன்ற மூலக்கூறு (N3) மற்றொரு வேதிப்பொருளின் முனையில் உள்ள பூட்டு போன்ற மூலக்கூறுடன் தாமிர அயனி வினையூக்கி உதவியுடன் இணைத்து எளிய - பல்வேறு வேதிப்பொருட்கள் இணைக்கப்பட்ட சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்க முடியும்.

நோய்களைத் துல்லியமாகக் குணப்படுத்த...: வேதியியல் ஆராய்ச்சிகள் பல உச்சங்களைத் தொட்டு, அதன் மூலம் அற்புதமான மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் வேதிவினைகளில் உள்ள சிக்கல்கள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக இயற்கையில், தாவரம் - இதர உயிரினங்களில் உள்ள பயனுள்ள மருத்துவ மூலக்கூறுகளைச் செயற்கை முறையில் உற்பத்திசெய்வதில் சிக்கல்கள், நேர விரயம், பொருள் செலவு, தேவையற்ற துணைப்பொருட்களைப் பிரித்தெடுப்பது போன்ற சிரமங்கள் அதிகம். இந்தச் சிக்கல்களைக் கடந்து பயனுள்ள மூலக்கூறுகளை அதிகளவில் உற்பத்திசெய்வது பெரும் சவால். இந்தச் சிரமங்களுக்கெல்லாம் தீர்வாக எளிய முறையில் சிறிய, பெரிய மூலக்கூறுகளை உருவாக்க உதவும் கிளிக் வேதிவினையானது, வேதியியல் உலகில் மிகப் பெரிய முன்னகர்வாகக் கருதப்படுகிறது. கிளிக் வேதிவினையானது சாதாரண சூழ்நிலையில் தண்ணீரில் இரண்டு மூலக்கூறுகளை இணைத்துத் தரமான பொருட்களை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதால் மருந்து தயாரித்தல், பாலிமர், உயிரி இணைப்பு ஆகிய துறைகளில் இந்த வேதிவினை அளப்பரிய பங்காற்றிவருகிறது.

கிளிக் வேதிவினையின் பயன்பாட்டினை மூலக்கூறுகள் தயாரிப்பதைத் தாண்டி உயிருள்ள செல்களின் செயல்பாடு, பண்பு போன்றவற்றைக் கண்டறியப் பயன்படுத்தியமைக்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழக வேதியியலாளர் கரோலின் ஆர்.பெர்டோசி நோபல் பரிசு பெற்றுள்ளார். செல்களின் இயல்பான இயக்கத்தை இடையூறு செய்யாமல், அதன் செயல்பாட்டைக் கண்டறிவது அரிதாக இருந்த காலத்தில், ஷார்ப்லெஸும் மேல்டாலும் கண்டுபிடித்த கிளிக் வேதிவினையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி, செல்லின் செயல்பாட்டினைக் கண்டறியும் வியத்தகு ‘உயிரி செங்கோண வேதிவினை’ (Bio orthogonal chemistry) முறைக்கு பெர்டோசி வித்திட்டார். செல்லின் செயல்பாட்டை அறியும் முந்தைய முறைகளைவிட அதிகப் பாதுகாப்பு கொண்ட இந்த முறை, பெருமளவு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. கிளைகன் மூலக்கூறு புற்றுநோய் செல்களுக்கு ஆதரவாக இருந்து, அச்செல்களை அழிப்பதற்குத் தடையாக இருப்பதால், கிளைகனின் செயல்பாட்டைக் குறைக்கும் புற்றுநோய் மருந்தைப் பெர்டோசியும் அவரது குழுவும் உயிரி செங்கோண வேதிவினை முறையில் உருவாக்கியுள்ளனர். நுண்ணுயிரியல், உயிர் மூலக்கூறியல், டி.என்.ஏ. வரிசைப்படுத்துதல் போன்ற துறைகளில் கிளிக் வேதிவினையின் பயன்பாடு இப்போது நீட்சி அடைந்திருக்கிறது. ஆற்றல்மிகு கிளிக் வேதிவினையால் மருந்தியல், சிகிச்சை முறைகள், மரபணுவியல் போன்ற துறைகளில் ஆச்சரியமூட்டும் வளர்ச்சியைப் பெற்று, அவை மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது. இது வேதியியல், உயிரியல் துறைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்றும் நம்பப்படுகிறது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் கரோலின் பெர்டோசி இப்படிக் கூறியிருக்கிறார்: “உலகம் பிரச்சினையுடன் இருக்கும்போது, வேதியியல்தான் உலகத்தைக் காப்பாற்றுகிறது.” இது மிக மிக உண்மையான கூற்று. - ஒளிப்பட உதவி - ஜோஹன் ஜார்னெஸ்டாட்/ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்.

கோவர் அந்தோணி ராஜ்
இஸ்ரேல் பென்-குரியான் பல்கைலக்கழக மருந்தியல்
துறையில் முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: gover.anto@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in