ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு
Updated on
1 min read

ஃபிடல், ஃபிடல்,

செயலாக மாறிய சொற்களுக்கும்

பாட்டாக ஒலிக்கும் செயல்களுக்கும்

நன்றிகாட்டுகிறார்கள் மக்கள்,

காணாத தூரத்தைக் கடந்து நானொரு கோப்பையில்

என் நாட்டின் மதுவோடு வந்திருப்பதும் அதனால்தான்:

நிலத்தடி மக்களின் உதிரம் அது

இருட்டிலிருந்து புறப்பட்டு உனது தொண்டையை

வந்தடைகிறது,

உறைந்துகிடந்த நிலத்திலிருந்து

நூற்றாண்டுகளாய்த் தீயைப் பிழிந்து

வாழ்ந்த சுரங்கத் தொழிலாளிகள் அவர்கள்.

கடலின் ஆழத்திலும்

நிலக்கரியைத் தேடும் அவர்கள்

பேயுருகொண்டு கரையேறுகிறார்கள்:

முடிவில்லா இரவுக்குப் பழகிக்கொண்டுவிட்டார்கள் அவர்கள்,

பகல் வேளையின் வெளிச்சம் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது,

ஆயினும், இதோ, இந்தக் கோப்பை.

சொல்லொணாத் துயரத்தினதும்,

கண்காணாத தூரத்தினதும் கோப்பை.

இருளும் பிரமைகளும்

பேயாய்ப் பற்றிக்கொண்ட,

சிறைப்பட்ட அந்த மனிதர்களின்

மகிழ்ச்சி அது.

சுரங்கங்களின் உள்ளே இருந்தாலும்

வசந்தத்தின் வரவையும்

அந்த வரவோடு வந்த சுகந்தங்களையும்

உணர்கிறார்கள் அவர்கள்.

தெளிவின் உச்சத்துக்காக மனிதன் போராடுகிறான்-

இதனை அறிந்தவர்களல்லவா அவர்கள்.

தெற்குப் பிரதேசத்தின் சுரங்கத் தொழிலாளிகளும்,

பரந்த புல்வெளிப் பிரதேசத்தில் தனியர்களாய் இருக்கும் மைந்தர்களும்,

படகோனியாவின் குளிரில் வாடும் மேய்ப்பர்களும்,

தகரத்துக்கும் வெள்ளிக்கும் பிறப்பளிக்கும் தகப்பன்களும்,

காதில்யெரா மலைத் தொடர்களுக்கு வாழ்க்கைப்பட்டு

சூகீக்கெமாதெ சுரங்கங்களிலிருந்து செம்புத் தாதுவை அகழ்பவர்களும்,

பேருந்துகளின் கூட்டமும்,

நேற்றைய நினைவிலேயே நிலைத்துவிட்ட நெரிசலும்,

வயல்கள் பட்டறைகளில் உழைக்கும் பெண்களும்,

குழந்தைப் பருவத்தை அழுதே கழித்த குழந்தைகளும்,

க்யூபாவைப் பார்க்கிறார்கள்:

இதுதான் அந்தக் கோப்பை, எடுத்துக்கொள் ஃபிடல்.

அவ்வளவு நம்பிக்கையால் நிறைந்திருக்கும் கோப்பை இது!

அருந்தும்போது நீயறிவாய்

ஒருவரால் அல்ல, பலராலும்

ஒரு திராட்சையால் அல்ல, பல தாவரங்களாலும் உருவான,

எனது தேசத்தின்

பழம் மதுவைப் போன்றது உனது வெற்றி என்பதை.

ஒரேயொரு துளியல்ல; பல நதிகள்:

ஒரேயொரு படைத்தலைவன் அல்ல, பற்பல போர்கள்.

நீண்ட, நெடிய போராட்டம் நம்முடையது,

அதன் ஒட்டுமொத்த மகத்துவத்தின் முழு உருவம் நீ.

அதனால்தான் அவர்களின் ஆதரவெல்லாம் உனக்கு.

க்யூபா வீழுமென்றால் நாங்களும் வீழ்வோம்,

அவளைக் கைதூக்கிவிட நாங்கள் வருவோம்,

அவள் பூத்துச் சொரிந்தால்

நாம் வென்றெடுத்த தேன்கொண்டு செழித்திடுவாள்.

உன் கைகளால் கட்டவிழ்ந்த

க்யூபாவின் நெற்றியை யாராவது தொடத் துணிவார்களென்றால்,

மக்களின் முஷ்டிதான் அவர்களுக்கு பதிலளிக்கும்,

புதைந்திருக்கும் நமது ஆயுதங்களைக் கைக்கொள்வோம்:

எங்கள் நேசத்துக்குரிய க்யூபாவைப் பாதுகாக்க

எங்களுக்குத் துணையாய் வரும்

உதிரமும் மாண்பும்!

- பாப்லோ நெருதா (1904-1973), சிலே நாட்டைச் சேர்ந்தவர்; இருபதாம் நூற்றாண்டின் மகாகவிகளுள் ஒருவர்.

(ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in