

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர், உத்தரப் பிரதேச அரசியலில் தனக்கும் தனது கட்சிக்கும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுத்தந்தவர் முலாயம் சிங் யாதவ் (82).
விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், விவசாயிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுடன் எப்போதும் தொடர்பைப் பேணும் தலைவராக இருந்தார். சோஷலிச தலைவர் ராம் மனோகர் லோஹியாவின் சீடராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய முலாயம், முற்பட்ட வகுப்பினரின் நலன்களை முதன்மைப்படுத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்டோரை அணிதிரட்டிய அரசியல் தலைவர்களில் முக்கியமானவர். ராம ஜென்ம பூமி விவகாரத்தில், குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இஸ்லாமியர்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராகவும் உயர்ந்தார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் இஸ்லாமியரையும் மதம் கடந்து ஒரு அரசியல் சக்தியாக இணைப்பதில் வெற்றிகரமான முன்மாதிரியை அவர் ஏற்படுத்திக் காண்பித்தார். 1992இல் சமாஜ்வாதி கட்சியைத் தொடங்கினார். கட்சியின் செல்வாக்குமிக்க தலைவர்களைச் சார்ந்திராமல் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த முலாயம், மாணவர் அரசியல் தளத்தில் துடிப்புடன் இயங்கிய பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய இளைஞர்கள் பலர் அரசியலில் வளர்வதை உறுதிப்படுத்தினார். முதல்வராக இருந்த காலத்தில் சாலைகள் அமைப்பது, நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தித் தருவது என கிராமப்புறங்களின் மேம்பாட்டில் அக்கறை செலுத்தினார்.
மூன்று முறை உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவிவகித்து, ஒன்றரை ஆண்டுகள் பாதுகாப்பு அமைச்சராக மத்திய அமைச்சரவையிலும் செயல்பட்டுள்ள முலாயமின் நீண்ட அரசியல் பயணத்தில் அவர் மேற்கொண்ட சமரசங்கள் சமாஜ்வாதி கட்சியின் நலன்களையே முதன்மைப்படுத்தி இருந்தன. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, 1993இல் ஆட்சியமைத்தார். இதன் மூலம் ராம ஜென்ம பூமி இயக்கத்தால் பாஜகவுக்குக் கிடைத்த அரசியல் செல்வாக்கைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். அடுத்த ஆண்டிலேயே மாயாவதி அவருடைய அரசியல் எதிரியானார். 1999இல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு, சோனியா காந்தி பிரதமராவதைத் தடுப்பதில் பங்குவகித்தார். அதே நேரம், 2008இல் இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குத் துணையாக நின்றார். 2012இல் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரச்செய்தார். மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கி கட்சியின் தலைவராகத் தொடர்ந்தார். வாரிசு அரசியல் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். 2017இல் பாஜக உ.பியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. பிறகு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து முலாயம் பேசினார். மத்தியப் புலனாய்வு அமைப்புகள் அவரை நெருங்கவில்லை. இறுதிக் காலத்தில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காகத் தன்னுடைய அரசியல் எதிரியான மாயாவதியுடன் கூட்டணிக்கும் ஒப்புதல் அளித்தார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை மோசமடைந்து அரசியலிலிருந்து விலகியிருந்தார்.
இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் சமரசத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் தவிர்த்து நீண்ட காலம் அரசியலில் நிலைப்பது சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொண்டால், இந்திய அரசியலில் முலாயம் சிங்கைப் போன்ற ஒரு தலைவரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.