

திருப்பூரின் விவேகானந்த சேவாலயம் காப்பகத்தில் குழந்தைகள் மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உட்கொண்ட உணவு, மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 11 குழந்தைகள் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் காப்பகங்களின் முறைகேடான செயல்பாடுகள் தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறிவருகின்றன. 2021இல் மதுரை மாவட்டத்தில், இதயம் அறக்கட்டளை காப்பகத்தில், ஒரு வயதுக் குழந்தை இறந்ததாகப் பொய்ச் சான்றிதழ் பெறப்பட்டு, அந்தக் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட செய்யப்பட்ட விவகாரம் கவனத்துக்கு வந்தது. 2017இல் ராமநாதபுரத்தில் ஆதார் டிரஸ்ட் காப்பகத்தில் ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படவிருந்த குழந்தை மீட்கப்பட்டது. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் ஒரு தனியார் காப்பகத்திலிருந்து 14 வயதுச் சிறுமி கர்ப்பிணியாக மீட்கப்பட்டார். களியாக்காவிளை, வில்லிவாக்கம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உரிய அடிப்படை வசதி, ஊட்டச்சத்து இன்றித் தவித்த குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். களியாக்காவிளையில் 25-க்கு 15 அடி அளவு கொண்ட ஓர் அறையில் 76 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த துயரமும் வெளிச்சத்துக்கு வந்தது.
தமிழ்நாடு முழுவதும் அனுமதி பெற்றும், பெறாமலும் பல ஆயிரம் காப்பகங்கள் செயல்பட்டுவருகின்றன. ‘சில்ரன் ரைட்ஸ் கேம்பைனர்ஸ்’ அமைப்பின் கூற்றுப்படி, இரண்டு லட்சம் குழந்தைகள் இப்படி வளர்ந்துவருகின்றனர். அனுமதிபெற்ற காப்பகங்களில்கூட குழந்தைகளின் பாதுகாப்புக்கான திட்டங்களோ குழந்தைகள் நல ஆலோசகர்களோ இல்லை. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தான உணவும் அளிக்கப்படுவதில்லை. அதனால் சிறு நோய்த் தொற்றைக்கூடத் தாங்க முடியாத நிலைக்குக் குழந்தைகள் ஆளாகிறார்கள். திருப்பூர் காப்பகக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்திருக்கிறார்கள் என்பது கவனம் கொள்ள வேண்டியதாகிறது. குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்புச் சட்டம் 2015இன்படி மாநிலக் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் தொடங்கப்பட்டு, இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பதிவுசெய்யப்பட்ட குழந்தைகள் காப்பகங்களை ஆய்வுசெய்வதும் அங்கு உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் இவர்களது கடமை. ஆனால், இந்தக் கடமை உரிய வகையில் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கான சான்றுதான், இந்த உயிரிழப்புகள். குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்புச் சட்டம் 2000, பிரிவு 34, 35இல் குழந்தைகள் இல்லப் பராமரிப்பில் மாநில அரசு வகிக்க வேண்டிய பொறுப்பு குறித்து திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. சம்பவத்துக்குக் காரணமான திருப்பூர் காப்பகத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகு தடைசெய்வதைக் காட்டிலும் வருமுன் காப்பதுதான் பொறுப்புமிக்க அரசுக்கு அழகு. மாவட்ட வருவாய்த் துறை, குழந்தைகள் நலத் துறை ஆகிய அமைப்புகள் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பைக் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொண்டு மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். திருப்பூர் குழந்தைகளின் உயிரிழப்பு அரசுக்குச் சொல்லும் தெளிவான சேதி இது.