

பெரும் போர் வெற்றிகளைக் கொண்டவன் என்றாலும், போருக்கு எதிரான மனநிலை கொண்டவன் ராஜராஜன்
சோழப் பெருமன்னன் சுந்தரசோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் குலத்துதித்த வானவன் மகாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன் அருண்மொழி எனும் ராஜராஜன். ஆதித்த கரிகாலன் எனும் மூத்தோன் கொலையுண்டு இறந்த பிறகு, நாட்டு மக்கள் அனைவரும் இளைஞன் அருண்மொழியே முடிசூட ஏற்றவன் என விரும்பினர். அப்போது தனது சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழருக்குத் தானே ஆள வேண்டும் என்ற விருப்பம் இருந்ததை அறிந்த அருண்மொழி, அவர் விருப்பப்படியே அவரை அரியணையில் அமரச் செய்தான். அவர் இருந்தவரை ஆட்சியை மனத்தாலும் நினைக்காமல் இருந்தான்.
மதுராந்தக உத்தம சோழர் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அப்போது அருண்மொழி இளவரசாகத் திகழ்ந்தான் கி.பி.985-ல் மதுராந்தக உத்தம சோழர் மறைந்த பிறகு, சோழப்பேரரசனாக மணிமுடி சூடினான். முடிசூட்டு விழாவின்போது அவனுக்குச் சூட்டப்பட்ட சிறப்புப் பெயரே ராஜராஜன்!
இளம்பருவ வாழ்க்கை
இளம் வயதிலேயே தாய், தந்தையரை இழந்த ராஜராஜன், தன் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியார், தமக்கை குந்தவைப் பிராட்டியார் ஆகியோர் அரவணைப்பில் பண்புடைய பெருமகனாக வளர்ந்தான்.
ராஜராஜனுக்குப் பல மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்தி விடங்கி எனும் லோக மாதேவியே பட்டத்தரசியாக விளங் கியவர். மாமன்னனுக்கு வானவன் மாதேவியின் மூலம் பிறந்த ஒரே மகன் மதுராந்தகன் எனும் ராஜேந்திர சோழன். இவனுக்கு இரண்டு தங்கையர் இருந்தனர். மூத்தவள் மாதேவ அடிகள், இளையவள் குந்தவை.
ராஜராஜன் தன் பாட்டி செம்பியன் மாதேவியார் நினைவாக ஒரு பெண்ணுக்கு மாதேவ அடிகள் என்றும், சகோதரி குந்தவை பிராட்டியார் நினைவாக மற்றொரு பெண்ணுக்கு குந்தவை என்றும் பெயரிட்டதோடு சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழர் நினைவாக மகனுக்கு மதுராந்தகன் என்றும் பெயரிட்டான்.
மணிமுடி சூடிய ராஜராஜன் பல்லவர் ஆட்சியில் போர்களின் மிகுதியால் தமிழகத் தின் செல்வ வளங்கள் எல்லாம் சீரழிந்ததை உணர்ந்தான். ஒரு நாடு செழிக்க வேண்டுமெனில், அந்நாடு போர்க்களமே காணாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, சோழ நாட்டைச் சூழ்ந்த எல்லா நாடுகளுக்கும் தூதர்களை அனுப்பி நட்புக்கரம் நீட்டினான். எதிர்த்தவர்களை வென்று தன்னடிப்படுத்தி, அவர்களால் மேலும் போர் தொடராதவாறு தன் படைகளையும், தானைத் தலைவர்களையும் அந்நாடுகளில் நிலையாய் இருக்குமாறு செய்தான். இதனால் சோழநாட்டுக்குள் போர் கிடையாது, செல்வ அழிவு கிடையாது. மாறாகப் பெருஞ்செல்வம் குவிந்தது. மக்கள் வாழ்க்கை அமைதியாக இருந்தது. கவின்கலைகள் வளர்ந்தன. சைவத்தின்பால் ஏற்பட்ட தோய்வின் காரணமாகச் ‘சிவபாதசேகரன்’ எனப் பட்டம் சூடி மகிழ்ந்தான்.
ராஜராஜனின் பெரு வெற்றிகள்
போருக்கு எதிரான மனநிலையைக் கொண்டவன் என்றபோதிலும், போர்த் திறனில் எவருக்கும் சளைக்காதவனாகவே ராஜராஜன் இருந்திருக்கிறான். தன் தூதனைச் சிறையிலிட்ட சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனைத் திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள காந்தளூர் எனும் இடத்தில் வெற்றிகண்டதோடு, அவனது கடற்படையைக் கைப்பற்றியது ராஜராஜனின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இவ்வெற்றியைக் குறிப்பிடும் வண்ணம் ‘கேரளாந்தகன்’(கேரள மன்னனுக்கு இயமன் போன்றவன்) சிறப்புப் பட்டம் அவனுடையதாயிற்று.
வேங்கிநாடு எனும் கீழைச் சாளுக்கியர்களின் நாடு (ஆந்திர மாநிலம்) ராஷ்டிர கூடர்களின் கங்கபாடி எனும் மைசூர் பகுதி, நுளம்பர்கள் ஆட்சி செய்த நுளம்பபாடி எனும் பெங்களூர், பெல்லாரி பகுதிகள், குடகுநாடு, சேரநாட்டுக் கொல்லம், ஒரிஸா மாநிலத்துக் கலிங்கம், இலங்கைத் தீவான ஈழ மண்டலம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி எனும் வட கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள், அரபிக் கடலிலுள்ள லட்சத்தீவு, மாலத்தீவு போன்ற தீவுகள், பாண்டிய நாடு ஆகியவை அனைத்தும் ராஜராஜனால் வெற்றிகொள்ளப்பட்டவை என்பது இங்கு நினைவில்கொள்ள வேண்டியது.
ராஜராஜனின் பட்டத்தரசி லோக மாதேவி யைத் தவிர சோழமாதேவி, திரைலோக்கி யமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமான வல்லி, இலாடமாதேவி, பிருதி விமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன் மாதேவி, வானவன் மாதேவி என்ற 10 பேர் ராஜராஜனுக்கு மனைவியராகத் திகழ்ந்தனர். இவையெல்லாம் நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும், அண்டை நாடுகளின் நட்புறவை மேம்படுத்தவும் செய்துகொண்ட அரசியல் திருமணங்கள் என்ற கருத்தும் வரலாற்று அறிஞர்களிடம் உண்டு.
கச்சிப்பேட்டுப் பெரியதளி
காஞ்சி மாநகரில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பெற்ற கயிலாசநாதர் கோயிலின் பேரழகில் ராஜராஜன் பெரிதும் மயங்கி, அக்கோயிலைக் ‘கச்சிப்பேட்டுப் பெரியதளி’என்று போற்றினான். இக்கோயில் அவனது உள்ளத்தில் ஓர் அக எழுச்சியைத் தூண்டியது. அதன் விளைவாகவே தஞ்சையில் ராஜராஜீச்சரம் எனும் பெருங்கோயில் எழுந்தது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இவ் வாலயத்தை ‘ராஜராஜே ஈஸ்வர முடையார் கோயில்’ என்று குறிப்பிடுகிறது. ‘ராஜராஜேச்சரம்’ எனும் பெயர் இலக்கணப்படி சரியாயினும் ‘ராஜராஜீச்சரம்’ என்றுதான் கல்வெட்டுகளில் ராஜராஜன் குறிப்பிடுகின்றான். பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர் எனும் ஊரில் இக்கற்கோயிலை எடுப்பித்தேன் என்று ராஜராஜன் கல்வெட்டுகளில் கூறுவதையும் இக்கோயிலில் காணலாம்.
வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல
தஞ்சை பெரிய கோயிலை உருவாக்கிய கட்டிடக் கலைஞனின் பெயர் வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பதாகும். மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற இரண்டு தச்சர்களும் குஞ்சரமல்லனின் பெரும் பணிக்குத் துணை நின்றவர்களாவர். மேலும், ராஜராஜனின் மனைவியரும் தஞ்சைக் கோயிலுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளனர்.
கி.பி.985-ல் முடிசூடிய ராஜராஜன் 1012-ல் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டிவிட்டு 1014-ல் மறைந்தான். இவன் எடுத்த தஞ்சை ராஜராஜீச்சரம் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமன்று. அது தமிழக வரலாறு, கலை, பண்பாடு ஆகியவற்றுடன் பிரிக்க முடியாத பெட்டகமும் ஆகும். தஞ்சையில் வானுயர உயர்ந்து நிற்கிறது பெரிய கோயில். அதையும் தாண்டி வரலாற்றில் நிற்கும் அதைக் கட்டியெழுப்பிய ராஜராஜனின் பெயர்!
குடவாயில் பாலசுப்ரமணியன், வரலாற்றாய் வாளர், ‘தஞ்சாவூர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர் . தஞ்சை பெரிய கோயிலைப் பற்றிய அவருடைய ‘இராஜராஜேச்சரம்’ நூலிலிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட ஒரு பகுதி இங்கே கட்டுரையாகத் தரப்பட்டுள்ளது.
இராஜராஜேச்சரம்
குடவாயில் பாலசுப்ரமணியன்,
விலை: ரூ.700
அன்னம் வெளியீடு,
தொடர்புக்கு: 9843666921
- குடவாயில் பாலசுப்ரமணியன், தொடர்புக்கு: kudavayil@yahoo.com