‘சிட்டி ஆஃப் காட்’-20: குற்றங்களின் அரசியல்
நீதிமன்றங்கள் குற்றங்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டவை என்பது பிரான்ஸ் காஃப்காவின் ‘விசாரணை’ நாவலின் கூற்று. சர்வதேச சினிமாவில் ‘சிட்டி ஆஃப் காட்’ ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை இந்தப் பின்னணியுடன் அணுகலாம். படம் வெளிவந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 20 ஆண்டுகளில் ஒரு கேங்ஸ்டர் படத்துக்கான இலக்கணமாக இந்தப் படம் முன்னிறுத்தப்படுகிறது; திரும்பத் திரும்பப் பார்க்கப்படுகிறது.
பல நாடுகளில் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு ஜனக்கூட்டத்தின் வெளிப்பாடு என இதன் வன்முறையையும் இதன் சர்வதேசப் பொருத்தப்பாட்டையும் புரிந்துகொள்ளலாம். பிரேசிலில் வெளியான அடுத்த ஆண்டே அமெரிக்காவில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றதையும் இத்துடன் சேர்த்து கவனத்தில் கொள்ளலாம்.
காலனிய பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவின் பதிவுசெய்யப்படாத வாழ்க்கையை இந்தப் படம் மையமாகக் கொண்டிருந்தது. இதே பெயரில் வெளியான நாவல்தான் இக்கதைக்கான அடிப்படை. நேர்க்கோட்டில் எழுதப்பட்ட நாவலை, படத்தின் திரைக்கதை ஆசிரியர் பெளரலி மந்தாவானி, இயக்குநர்கள் ஃபெர்னாந்து மெய்ராலிஸ், காத்யா லுண்ட் ஆகியோர் நான்-லீனியராகத் தொகுத்திருக்கிறார்கள். அமெரிக்க சினிமாவில் பல கேங்ஸ்டர் கிளாஸிக்குகள் வெளிவந்துள்ளன. ‘காட் ஃபாதர்’, ‘பல்ப் ஃபிக் ஷன்’ உள்ளிட்ட பல படங்களும் சர்வதேச சினிமாவில் பாதிப்பை விளைவித்திருக்கின்றன. ஆனால், ‘சிட்டி ஆஃப் காட்’ இவற்றிலிருந்து அதன் அரசியலால் வேறுபட்டு நின்றது.
ஒரு கேங்ஸ்டர் படம் எனக் குறுக்கிப் பார்க்கக்கூடியது அல்ல, ‘சிட்டி ஆஃப் காட்’. ஒரு நகரத்துக்குள் இருக்கும் இரு வேறு விநோதக் கலாச்சாரங்களை யதார்த்தத்துடன் காட்சிப்படுத்திய படம். கறுப்பின மக்களின் வாழிடம், கலாச்சாரம், காதல், கண்ணீர், கல்வி, வெளி ஆட்கள் அதில் நிகழ்த்தும் குறுக்கீடு என அந்த உலகத்தை விரிவாக இயக்குநர் காண்பித்திருப்பார். நாயகன் எனத் தனி ஒருவனை மையப்படுத்தாமல் பல நூறு கதாபாத்திரங்களைக் கொண்டது ‘சிட்டி ஆஃப் காட்’ நாவல். ஆனால், படத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும் இரு தலைமுறைகளின் சாரமாக எடுத்தாளப்பட்டிருக்கும். நாயகன் என்று சொல்லத்தக்க ராகெட் கதாபாத்திரம் படத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும். ராகெட்டின் வழி படம் விரிவுகொள்ளும். இந்தக் கதாபாத்திரத்தின் வழி பார்வையாளர்கள் நுழைவதற்கான சாத்தியத்தை இயக்குநர் ஏற்படுத்தியிருப்பார்.
கத்தி தீட்டல், கோழி உரித்தல், சமைத்தல் எனப் பல கட் ஷாட்டுகளுடன் படம் தொடங்கும்.
கொல்லப்பட இருக்கும் கோழி கயிற்றை அவிழ்த்துக்கொண்டு ஓட, அந்த மெலிந்த கோழியைத் துரத்திப் பத்திருபது பேர் துப்பாக்கியுடன் ஓடுவார்கள். பத்திலிருந்து இருபது சொச்சம் வயசு உள்ள சிறுவர்கள் அவர்கள். அந்தக் கும்பல் தலைவன் லிடைசியின் அசுரத்தனத்தைக் காண்பிக்க இயக்குநர் வெகு அண்மைக் கோணத்தைப் பயன்படுத்தியிருப்பார். இந்தத் துரத்தலில் லிடைசியும் போலீஸும் எதிரெதிரில் சந்தித்துக்கொள்கிறார்கள். இடையில் ராகெட். இந்த இடத்தில் ஒரு மேச் கட் ஷாட்டில் படம் ராகெட்டின் குரலில் பின்னோக்கிப் பயணிக்கிறது.
ஒரு தனித்த பகுதியின் நிழல் வாழ்க்கையைச் சொல்கிறது. போதைப் பொருள் வியாபாரம், கொள்ளை எனக் கொடிகட்டிப் பறக்கும் இளைஞர்கள், சிறுவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதைத் திருத்தமாகச் சொல்கிறது படம். மனிதாபிமானமற்ற சிறுவன் தலைவனாக உருவாவதை, பைத்தியக்காரத்தனமான சிரிப்புடன் அவன் சுட்டுத்தள்ளும் மேச் கட் ஷாட்டில் படம் காண்பிக்கிறது. காலத்தை முன்னேயும் பின்னேயும் நகர்த்திக் காண்பிக்க இந்தப் படத்தில் மேச் கட் ஷாட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கேங்ஸ்டர் உலகத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையையும் இந்தப் படம் இணையாக ஓர்மையுடன் சித்தரித்துள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்றில் போதைப் பொருள் வியாபாரத்துக்காகச் சண்டை நடக்கும்போது, அதற்கு அருகிலுள்ள வீட்டில் துணி துவைத்துப் போடும் ஓர் அன்றாடமும் வருகிறது. இந்த முரண் வசீகரிக்கக்கூடியது. இந்த அம்சத்தையும் சர்வதேச அளவில் வைத்துப் பார்க்கலாம். வடசென்னைப் பகுதியை, ஃபோர்ட் கொச்சியை, தாராவியை எனப் பல இந்தியப் பகுதிகளை இந்த ‘சிட்டி ஆஃப் காட்’ நகரத்துடன் ஒப்பிட முடியும்.
இந்த சினிமாவின் பாதிப்பு, இப்படியான ஒருவகையில் புறவயமானது; மற்றொரு வகையில் இதன் கூற்றுமொழியின் நவீனத்துவம் சார்ந்த அகவயமானது. இந்த இரண்டு வகைகளிலும் சர்வதேச சினிமா, இதன் பாதிப்பை உள்வாங்கிக்கொண்டுள்ளது. திரைக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நான்-லீனியர் ஒழுங்கும் படத்தொகுப்பின் புதுமையும் இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பாதிப்பு எனலாம். தொழில்முறை நடிகர்களைத் தவிர்த்துவிட்டு, அந்த மக்களைக் கொண்டு அவர்கள் வாழ்வைச் சித்தரித்த பாங்கும் ஒரு முன்னுதாரணமானது. இந்த அம்சம், படத்துக்கு ஒரு கச்சாதன்மையைக் கொடுத்துள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு பிரேசில் ஆட்சியாளர்கள் அந்தப் பகுதியின் வாழ்க்கை மேம்பாட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள். அவர்களது வளர்ச்சிக்கான கல்வி, வேலை போன்ற அடிப்படைகளுக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டன என இதன் இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஒரு விறுவிறுப்பான வணிகப் படம் என்கிறரீதியில் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட இந்தப் படம், தன் சொந்த நாட்டில் பெற்ற உண்மையான வெற்றி இதுதான்.
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
