தொ.மு.சிதம்பர ரகுநாதன் நூற்றாண்டு: நவீனத்துவம் வாய்ந்த எழுத்து!

தொ.மு.சிதம்பர ரகுநாதன் நூற்றாண்டு: நவீனத்துவம் வாய்ந்த எழுத்து!
Updated on
2 min read

தமிழில் அதிகம் வாசிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நாவல்களில் மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலே முதலிடத்தில் இருக்கக்கூடும். பொதுவுடைமை இயக்கம் வீடுதோறும் அந்நாவலைக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது. திராவிட இயக்கத் தலைவர் மு.கருணாநிதியும் தனக்குப் பிடித்த நாவல் என்று ‘தாய்’ நாவலைக் குறிப்பிட்டதோடு, அதைக் கவிதை நடையிலும் எழுதினார், அக்கதையைத் தழுவித் திரைப்பட ஆக்கமும் செய்தார். இன்றும், ‘உணர்ச்சிமிகு தருணங்க’ளில் இந்நூல் பரிசளிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

கார்க்கியின் தமிழ்க் குரல்: காந்தியரும் தமிழில் பௌத்தம் குறித்த சிறந்த அறிமுக நூல்களை எழுதியவருமான ப.ராமஸ்வாமியும் கார்க்கியின் அந்நாவலை, ‘அன்னை’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். என்றாலும், தொ.மு.சிதம்பர ரகுநாதனின் தமிழ் மொழியாக்கமே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கார்க்கியின் ‘மூன்று தலைமுறைகள்’, ‘தந்தையின் காதலி’ உள்ளிட்ட படைப்புகளையும் தொ.மு.சி. தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கார்க்கியின் சில சிறுகதைகள் ‘சந்திப்பு’ என்ற தலைப்பில் அவரது மொழியாக்கத்தில் தொகுப்பாக வெளியாகியுள்ளது. தமிழில், லியோ டால்ஸ்டாய், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோருக்கு இணையாக கார்க்கியும் அறிமுகமானதில், தொ.மு.சி.க்குப் பெரும் பங்குண்டு.

பஞ்சும் பசியும்: தொ.மு.சி. மிகச் சில நாவல்களையே எழுதியிருக்கிறார் என்றபோதும் அவரது ‘பஞ்சும் பசியும்’ நாவல் இன்றளவும் பேசப்படும் நாவலாக இருந்துவருகிறது. கைத்தறித் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்களின் இலக்கிய ஆவணமாக அந்நாவல் அமைந்துள்ளது. வெளிவந்தபோதே, செக் மொழியில் அந்நாவலைக் கமில் சுவலெபில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அம்மொழியிலும், இந்நாவல் வரவேற்பைப் பெற்றது. ஆங்கிலம் இல்லாத ஐரோப்பிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் தமிழ் நாவல் அதுவே. புனைவுகளில் மட்டுமின்றி கவிதையிலும் தொ.மு.சி.யின் முத்திரைகள் உண்டு. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகள் மரபின் அடியொற்றி அமைந்தவை. அவற்றில் சில, புரட்சிக் கனலாகத் தகிப்பவை. கம்பன் விழா கவியரங்கங்களிலும் கவி பாடியுள்ளார்.

இலக்கியப் பரம்பரை: தொ.மு.சி.யின் கவியாற்றல் அவரது பரம்பரைச் சொத்து. அவரது பாட்டனார் சிதம்பரத் தொண்டைமான், ‘ஸ்ரீரங்கநாதர் அம்மானை’ப் பாடல்களும் ‘நெல்லைப் பள்ளு’வும் பாடியவர். அவரது தந்தையார் தொண்டைமான் முத்தையன், பிரமமுத்தன் என்ற புனைபெயரில் ‘33 தியானச் சிந்தனைகள்’ என்ற நூலையும் மூன்று தனிப் பாசுரங்களையும் இயற்றியவர். ஆங்கிலத்திலும் கவிதைகள் இயற்றியவர். ஆங்கிலத்திலிருந்து கவிதைகளை மொழிபெயர்த்தவர். அவரது அண்ணன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாடல் பெற்ற தலங்கள் அனைத்தையும் நேரில் சென்று தரிசித்து ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற தலைப்பில், ஐந்து பெருந்தொகுதிகளாக எழுதியவர்.

டி.கே.சி.யின் வட்டத்தொட்டி இலக்கியக் குழாமைச் சேர்ந்தவர். எனவே, தொ.மு.சி. ஒரு எழுத்தாளரானது ஏதோ ஒரு விபத்தாக நேர்ந்தது அல்ல. குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக எழுத்தாற்றலைப் பெற்ற அவர், சமூக உணர்வோடு, புரட்சிகர இலக்கியத்தை நோக்கி நகர்ந்ததே முக்கியமான திருப்புமுனை. திருநெல்வேலியில் இயங்கிவந்த மதுரை தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துவந்த தொ.மு.சி., 1942இல் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டதால், படிப்பைத் துறந்தவர். கல்லூரி விழா மலர்களிலேயே அவரது எழுத்துகள் பிரசுரமாகத் தொடங்கிவிட்டன. 1944இல் ‘தினமணி’யில் துணை ஆசிரியராக இதழியல் பயணத்திலும் அவர் பங்கேற்றார். தொடர்ந்து, ‘முல்லை’ இதழின் ஆசிரியராகவும், ‘சக்தி’ இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1954 டிசம்பரில் ‘சாந்தி’ இதழைத் தொடங்கி 1956 வரையிலும் நடத்தினார்.

கட்டுரை இலக்கியம்: தமிழில் புரட்சிகர இலக்கிய வகைமையோடு பாரதியை முடிச்சிட்ட ஜீவாவின் வழியில், தொ.மு.சி.யின் பங்களிப்புகள் முக்கியத்துவம் கொண்டவை. தாகூருடன் பாரதியை ஒப்பிட்டு அவர் எழுதிய ‘கங்கையும் காவிரியும்’ நூல் சிறப்பிடம் பெறுவதாகும். ‘பாரதி காலமும் கருத்தும்’, ‘பாரதியும் ஷெல்லியும்’ என்று பல தலைப்புகளில் அவரது பாரதி ஆய்வுகள் வெளிவந்துள்ளன.புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தொ.மு.சி., அவரது வரலாற்றை எழுதி அவருக்குப் பெருமை சேர்த்ததோடு, தமிழ் வாசகர்களுக்கு அரும்பெரும் கொடையாக அந்நூலை வழங்கிச் சென்றுள்ளார். புதுமைப்பித்தன் கதைகள் மீதான அவதூறுகளுக்குப் பதிலாய் அமைந்தது, அவரது மற்றொரு நூலான ‘புதுமைப்பித்தன்: சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்’.

பாரதி, புதுமைப்பித்தன் ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் வரலாற்றுப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அந்நோக்கிலிருந்து தொ.மு.சி.யின் பங்களிப்புகள் குறித்து தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறார். ‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூலினை விரிவான ஆய்வுரையோடு பதிப்பித்தும் உள்ளார். தமிழில், மார்க்ஸிய இலக்கியத்தின் முன்னோடியாக அமைந்தவர் என்ற நோக்கில் தொ.மு.சி. குறித்து பொன்னீலன் தொடர்ந்து நூல்களையும் சிறப்பு மலர்களையும் வெளியிட்டுவருகிறார். தொ.மு.சி.யின் தொகுக்கப்படாத பல கட்டுரைகளை இளசை மணியன் தொகுத்து நூலாக வெளிக்கொண்டுவந்துள்ளார். தொ.மு.சி.யின் பரந்து அகன்ற வாசிப்பும் நவீனத்துவம் வாய்ந்த எழுத்து நடையும் அக்கட்டுரைகளை வாசிக்கும் இன்றைய தலைமுறை இளம் வாசகர்களுக்குப் பெரும் கண்திறப்பாக அமையக்கூடும்.

தொ.மு.சி. நூற்றாண்டு தொடக்கம்: அக். 20

தொடர்புக்கு: ilavenilse@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in