கிராம சபைத் தீர்மானங்கள்: மெய்ப்படுவதும் முக்கியம்!

கிராம சபைத் தீர்மானங்கள்: மெய்ப்படுவதும் முக்கியம்!
Updated on
2 min read

உள்ளாட்சிகளின் ஜனநாயகப் பண்பைத் தக்கவைப்பதற்குப் பெரும் வாய்ப்பளிக்கும் கிராம சபைக் கூட்டங்கள், சமீப காலமாகச் சடங்குபோல் நடைபெற்றுவருவது, அவற்றின் நோக்கத்தையே நீர்த்துப்போக வைப்பதாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அதிகாரிகள் மட்டுமே கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றுவந்தனர்.

2020 ஜனவரி 26 அன்று உள்ளாட்சி அமைப்புக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றனர். அந்தந்தக் கிராமங்களின் சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் தீர்மானங்கள், தீர்க்கப்படும் நோக்கில் கிராம சபையில் அனைத்துத் தரப்பினர் முன்னிலையிலும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், தீர்க்கப்படாமல் மீண்டும் மீண்டும் தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்படுவது, எளிய மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலேயே உள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, 2020-க்குப் பிறகு, ஏழு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கடை இன்னும் அகற்றப்படவில்லை. பழையகோட்டைப்புதூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 172 மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்கள் 8ஆம் வகுப்புக்குப் பிறகு உயர்நிலை, மேல்நிலைக் கல்வி பயில வெளியூர்தான் சென்றாக வேண்டும். நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப் பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அது நடைமுறைக்கு வரவில்லை.

ஊருக்குச் சுற்றுச்சூழல் பாதிப்பை உண்டாக்கும் தென்னை நார்க்கழிவுத் தொழிற்சாலையின் இயக்கத்தை நிறுத்த மருதுறை கிராம சபையில் தீர்மானங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படுகின்றன. மேற்கண்டவை திருப்பூர் மாவட்ட கிராம ஊராட்சிகள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள்; இப்படித் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், ஊராட்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கணக்கில் அடங்கா. கிராம சபைக் கூட்டங்களில் தற்போது கிராமத்தின் சுகாதாரம் பற்றி அதிகம் பேசப்படுவது நல்ல விஷயமே. அதே நேரம் மக்கள் முன்வைக்கும் மற்ற விஷயங்களையும் முழுமையாகக் கவனத்தில் கொண்டால், கிராம சபைகள் உண்மையான மக்கள் சபைகளாக மாறும். இல்லையெனில், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினங்களில் அனுசரிக்கப்படும் ஒரு வழக்கமான கூட்டமாகவே நடந்து முடியும். சட்டம் இயற்றும் அதிகாரம்பெற்ற மத்திய - மாநில அரசுகள் இவை செயலாக்கம் பெறுவதிலும் முனைப்புக் காட்ட வேண்டும். எளிய மக்களின் அதிகார சபையை, வெறும் அலங்காரச் சபையாக மாற்றிவிடக் கூடாது என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் எண்ணம். கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படுவதற்குக் காலம் நிர்ணயித்து, மக்களுக்குப் பயனுள்ள சபையாக மாற்ற வேண்டும்.

கிராம சபை ஒவ்வொன்றிலும் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. அந்தத் தீர்மானங்கள்மீது நடவடிக்கை எடுத்து, அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே கிராம சபையின் நோக்கம் நிறைவேறும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கிராமங்கள்தோறும் பயணித்துக் கிராம சபையைக் கூட்டி, அதன் அதிகாரத்தை அனைத்துத் தரப்புக்கும் தெரியப்படுத்தியவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அதே உத்வேகத்துடன் கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சுணக்கத்தைப் போக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

இரா.கார்த்திகேயன்
தொடர்புக்கு: karthikeyan.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in