

தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த வாரம் காலமாகிவிட்டார். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தகுந்தது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சக்திமண்டலமான கண்ணூருக்கு அருகில் கொடியேரியில்பிறந்தவர் பாலகிருஷ்ணன். பள்ளிக் காலத்தில் மாணவர் அமைப்பின்வழி தன் அரசியல் செயற்பாட்டைத் தொடங்கினார். 1973இல் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐயின் மாநிலச் செயலாளரானார். காங்கிரஸின் மாணவர் அமைப்பான கே.எஸ்.யூ. மிக வலுவாக இருந்த காலகட்டத்தில் தன் ஒருங்கிணைப்பில் எஸ்.எஃப்.ஐயைத் திடகாத்திரப்படுத்தினார். நெருக்கடிநிலை காலத்தில்எஸ்.எஃப்.ஐ. செயலாளர் என்ற ரீதியில் கைதுசெய்யப்பட்டார். அந்த ஒன்றேகால் வருஷச் சிறைவாசத்துக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியில் மதிப்புக்குரிய தோழரானார். நெருக்கடிநிலைக்குப் பிறகு உருவான வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கட்சியை வலுவாக்கியதில் கொடியேரியின் பங்கு கணிசமானது.
1985இல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் எம்.வி.ராகவன், பதல்ரேகையைச் சமர்ப்பித்தார். சாதி, மத அமைப்புகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது என்று அதிருப்தியாளர்கள் முன்வைத்த மாற்று ஆவணம் அது. 1968 நக்சல் அச்சுறுத்தலுக்குப் பிறகு மிகப்பெரிய பின்னடவைக் கட்சிக்குள் உண்டாக்கிய விவகாரம் இது. இ.கே.நாயனார், புத்தலத்து நாராயணன் உள்ளிட்ட பலரும் இதை ஆதரித்தனர். கொடியேரிக்கும் அதே நிலைப்பாடுதான். ஆனால், கட்சி ஒரு தீர்மானம் எடுத்ததும் அவர் கட்சிக்காகத் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மட்டுமல்ல, பதல்ரேகைக் காலத்தில் கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்த கொடியேரி முக்கியப் பங்கு வகித்தார்.
கொடியேரியின் செயல்பாட்டில் முக்கியமானதாகப் பார்க்கப்படுவதும் இந்த அம்சம்தான். கட்சியின் அடித்தளத்தை, மார்க்சிஸ்ட் கட்சிக்கே உரிய கட்டுப்பாட்டுடன் நிலைநிறுத்துவது, அதுபோல் அதை வெளியே எடுத்துச்செல்வதில் செயற்பாட்டாளர்களின் பொறுப்பு, இவை அவர் வகுத்துக் கொண்ட தலையாய கட்சிப் பணி என வரையறுக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமை வகிக்கும் இடது முன்னணி கூட்டணிக்குள் பல சமயங்களில் இந்த விஷயத்தில் தர்க்கம் உருவானதுண்டு. அவ்வேளைகளில் முன்னணி, கட்சியைப் நீர்த்துப்போகச் செய்யும் என்ற பொது அபிப்ராயத்தை, இது இடதுசாரி அரசியலின் விரிவாக்கத்துக்குத் துணைபுரியும் எனச் செய்து காண்பித்தவர் கொடியேரி. கட்சிக்கு உள்ளே, கூட்டணிக்கு இடையில், மக்கள் முன் என எல்லாத் தரப்பினரிடமும் உரையாடிய மார்க்சிஸ்ட் கட்சியின் புஞ்சிரி (புன்சிரிப்பு) உள்ள முகமாக அவர் இருந்தார்.
வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும் (வி.எஸ்.) பினராயி விஜயனுக்கும் மோதல் முற்றிய காலத்திலும் பினராயி ஆதரவாளர் என்றாலும் வி.எஸ்ஸால் தவிர்க்க முடியாத ஒரு தோழராக இருந்தவர். புஞ்சிரியுடன் இவர் நடத்திய தீப்பொறிப் பிரசங்கங்கள் கேரளத்தில் ஒரு இடதுசாரி அரசியலுக்கான எதிர்காலச் சந்ததியை உருவாக்கின எனலாம். ராகுல் காந்தி, நரேந்திர மோடி, அமித் ஷா என எல்லோரையும் கிண்டலுக்குள்ளாக்கும் இவரது நகைச்சுவைப் பேச்சுக்குக் கட்சி தாண்டிய ரசிகர்கள் கேரளத்தில் உண்டு. 1982இல் இவர் நுழைந்த பிறகுதான் சட்டமன்றம் சிரிக்கத் தொடங்கியது என மிகுபுகழ்ச்சிக் கூற்று கேரளத்தில் உண்டு. 2001இல் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகக் காத்திரமாகச் செயல்பட்டார். 2015இல் உள்துறை அமைச்சராக காவல் துறை சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். போராட்டக்காரர்களைக் கையாள்வதில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். கோதுமை உருண்டைக்குப் பதிலாகக் கைதிகளுக்குச் சப்பாத்தி போட்டது கொடியேரிதான்.
தங்கக் கடத்தல் வழக்கு, மகன்கள் மீதான வழக்குகள் என சர்ச்சைகளுக்கு உள்ளானபோதும் கொடியேரி தைரியமாக அவற்றை எதிர்கொண்டார். அவரைத் தாக்கிய புற்றுநோயையும் அதே போலேயே பாவித்தார். கட்சிப் பணிகளுக்கு இடையில் காலம் தவறிய சிகிச்சை, அவரைக் காலத்தில் உறையவைத்துவிட்டது. அடிப்படைவாத அமைப்புகள் வலுப்பெற்றுவரும் சூழலில் இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்திய ஒரு தலைவரின் மரணம் என்பதுஇந்திய ஜனநாயகத்துக்குப் பெரும் இழப்புதான்.
மண்குதிரை
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in