அலுவல் மொழி மேம்பாடு ஏன் அவசியம்?

அலுவல் மொழி மேம்பாடு ஏன் அவசியம்?
Updated on
3 min read

இந்த ஆண்டு விடுதலை நாளின் பவள விழா ஆண்டு, தமிழக அரசுத் துறை ஒன்றுக்குப் பொன்விழா ஆண்டாகவும் அமைந்தது. அது தமிழ் வளர்ச்சித் துறை. கொண்டாட்டம் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. எனினும் பொன்விழாவை நினைவில் நிறுத்தும் விதமாகக் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் துறையின் சார்பாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

‘தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்படும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். காட்சி ஊடகர்களுக்கு மொழிப் பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் அமைக்க நல்கைகள் வழங்கப்பட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்’ போன்றவை உள்ளிட்ட 17 அறிவிப்புகளோடு 18 ஆவதாக ஓர் அறிவிப்பையும் சேர்த்திருக்கலாம். அதற்கான அவசியமும் இருக்கிறது. தமிழ் ஆட்சி மொழியாகிவிட்டது. அலுவல் மொழியாகவும் வளர்ந்துவருகிறது. அந்த வளர்ச்சி போதுமானதாக இருக்கிறதா?

அலுவல் மொழியின் அவசியம்: ஓர் அரசின் அலுவல் மொழி என்பது யாது? அரசுத் துறைகள் தங்களுக்குள் எழுத்துபூர்வமான பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தும் மொழி மட்டுமல்ல; அரசு மக்களோடு உரையாடும் மொழியும்கூட. அதாவது, அரசு வெளியிடும் அரசாணைகள், அறிவிப்புகள், செய்திக் குறிப்புகள் முதலானவற்றின் மொழி. அரசுத் துறை இணையதளங்களில் பதிவாகியிருக்கும் மொழி. சொத்துப் பத்திரங்கள், படிவங்கள், கோரிக்கைகள் முதலானவற்றில் புழங்கும் மொழி. இவையெல்லாம் தமிழில்தானே இருக்கின்றன? ஆம். அதேவேளையில் அலுவல் மொழி என்பது எளிமையாகவும் நல்ல மொழிநடையிலும் ஜனநாயக மாண்புகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். இதில் போதாமை நிலவுகிறது. முக்கியமாக இரண்டு பிரச்சினைகளைச் சொல்லலாம். முதலாவது, நமது அலுவல் மொழியில் ஒரு மேலாதிக்க மனோபாவம் நிலவுகிறது. இரண்டாவது, அதில் ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும் செல்வாக்கோடு திகழ்கின்றன.

அலுவல் மொழி அழிக்கும் சுயம்: நமது அலுவல் மொழி காலனிய காலத்து அதிகாரப் படிநிலையிலிருந்து விடுபடவில்லை. ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். ஒரு விபத்து நடக்கிறது. பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். நீதிமன்றத்தையும் நாடுகிறார். அப்போது காவல் துறை ஆய்வாளர் தனது முதல் தகவல் அறிக்கையையும் பாதிக்கப்பட்டவரின் புகாரையும் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிப்பார். அவரது அறிக்கை இப்படி முடிந்திருக்கும்: ‘இந்த முதல் தகவல் அறிக்கையின் அசலை வாதியின் புகார் மனுவுடன் இணைத்து கனம் முதன்மைக் குற்றவியல் நடுவர், இன்ன நீதிமன்றம், இன்ன ஊர், அவர்களுக்கும் இதன் நகல்கள் இன்னின்ன அதிகாரிகளுக்கும் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.’

ஆய்வாளரின் அறிக்கையில் அதீத பணிவு இருக்கிறது. நீதிமான் கனம் பொருந்தியவராக இருக்கிறார். வாக்கியம் செயப்பாட்டு வினையில் இருக்கிறது. ‘நான் சமர்ப்பிக்கிறேன்’ என்றல்ல, ‘சமர்ப்பிக்கப்படுகிறது’ என்று எழுதுகிறார் ஆய்வாளர். அதாவது, மேலதிகாரிகளுக்கு முன் தனது சுயத்தை அழித்துக்கொள்கிறார். வெள்ளை அதிகாரிகளுக்கு இந்த மொழி உவப்பாக இருந்திருக்கும். அவர்கள் போய்விட்டார்கள். எனினும் 75 ஆண்டுகளாக அதிகாரிகள் இதைச் சிக்கெனப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

உயிர்ப்புடன் மணிப்பிரவாளம்: திராவிட இயக்கத்தின் முயற்சியால் அக்கிரசானரும் காரியதரிசியும் பொக்கிஷதாரும் முறையே தலைவர், செயலர், பொருளாளர் என்று மாறிவிட்டார்கள். ஆனால், சம்ஸ்கிருதம் சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டிருக்கும் இடமொன்று இருக்கிறது. இந்தப் பத்தியைப் பாருங்கள்: ‘ஷை சொத்தை இரண்டாவது பார்ட்டி இதுமுதல் அடைந்துகொண்டு தானாதி வினிமய விற்கிரையங்களுக்கு யோக்கியமாய் இஷ்டப்படி சர்வ சுதந்திர பாத்தியங்களுடன் ஆண்டனுபவித்துக்கொள்ள வேண்டியது.’

இது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சொத்துப் பத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட வாக்கியமல்ல. 2022இல் எழுதப்பட்ட ஒரு பத்திரத்திலிருந்து எடுக்கப்பட்டது. பத்திர எழுத்தர்கள் காலத்தால் பின்தங்கிய மணிப்பிரவாள நடையைத் தங்கள் கணினியில் சேமித்து வைத்திருக்கிறார்கள். விலை உயர்ந்த முத்திரைத் தாள்களில் அதை நாள்தோறும் அச்சடிக்கிறார்கள். இந்தப் பத்திர எழுத்தர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுசெய்து கொண்டவர்கள். அரசு இவர்களுக்குப் பதிவு எண்ணும் வழங்கியிருக்கிறது. இவர்களுக்கும் நவீன உரைநடைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. குடிநபர்கள் தமது பத்திரங்களுடன் இந்த அலுவல் மொழியையும் பெட்டகங்களில் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றுகிறார்கள். சிலர் தாங்கள் எழுதும் கோரிக்கை மனுக்களில் பயன்படுத்தி அதை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கிறார்கள்.

காலூன்றி நிற்கும் ஆங்கிலம்: அறிவுத் துறைகள் அனைத்தும் ஆங்கிலம் வழியாகவே நமக்கு வந்துசேர்கின்றன. ஆகவே, எல்லா அறிவியல் துறைகளிலும் புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். ஆனால் நான் சமீபத்தில் வாசித்த ஓர் அரசாணையில் பைப்லைன், மோட்டார், பம்புசெட் முதலான எளிய சொற்கள்கூட மொழிமாற்றம் செய்யப்படவில்லை. வேறு சில இடங்களில் ஆங்கிலச் சொற்கள் கருத்தூன்றி மொழிபெயர்க்கப்படவில்லை. கட்டுமானத் துறை சார்ந்த அரசின் இணையதளம் ஒன்றில் Base Cost என்பது ‘அடிப்படை செலவுத்தொகை’ என்று தமிழாக்கப்பட்டிருக்கிறது. செலவழித்தால்தான் அது செலவு, அதற்கு முன்பு அது பொருளின் விலை அல்லவா? இதே போல, Contract Management என்பது ‘ஒப்பந்தக் கட்டுப்பாடு மேலாண்மை’ ஆகியிருக்கிறது. இதில் கட்டுப்பாடு எங்கிருந்து வந்தது? கட்டுமான ஒப்பந்தங்கள் குறித்த புரிதல் உள்ள ஒருவர் இப்படி மொழிபெயர்த்திருக்க மாட்டார். சென்னை மெட்ரோ ரயிலின் செய்திக் குறிப்புகளில் elevated rail என்பதற்கு ‘உயர்த்தப்பட்ட ரயில்’ என்கிற தொடரைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் வளர்ச்சித் துறை சார்ந்த ஓர் அமைப்புதான் இந்தத் தொடரை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த மொழிபெயர்ப்பு இயந்திரத்தனமானது. இந்தத் தொடர் மொழிக்குப் புதியது. மாறாக மேம்பாலம் என்பது புழக்கத்திலுள்ள சொல். ‘மேம்பால ரயில்’ என்பது மக்களிடம் விரைவாகப் போய்ச் சேரும்.

என்ன செய்யலாம்?: தமிழ் வளர்ச்சித் துறை, கல்வி நிலையங்களோடும் ஆய்வு நிறுவனங்களோடும் துறை சார்ந்த வல்லுநர்களோடும் இணைந்து தமிழுக்கு இசைவான கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். அவற்றை ஒவ்வொரு மாதமும் பதிப்பிக்கலாம். கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் வழியாக அவற்றைப் பரப்பவும் புதுப்பிக்கவும் செய்யலாம். மேலும், அலுவல் மொழிக்கான சொல்லாடல்களை மேம்படுத்த வேண்டும். இப்போது நிலவும் அதீதக் கீழ்ப்படிதலை அகற்ற வேண்டும். இதற்காகப் புதிய வழிகாட்டுக் கையேடுகள் வெளியிடலாம். இதைப் போலவே பத்திர எழுத்தர்களுக்கும் கையேடுகள் வெளியிடலாம். பழமை நெடி அடிக்கும் மணிப்பிரவாள நடையில் பத்திரங்களை எழுதலாகாது என்று விதி செய்தாலும் பிழையில்லை. இந்தக் கையேடுகளைப் பொதுவெளியில் ஏற்றி வைத்தால், அவை குடிநபர்களுக்குக் கோரிக்கை மனுக்கள் எழுதப் பயன்படும். நமது அலுவல் மொழி, எளிமையாகவும் நவீனமாகவும் இருக்க வேண்டும். எவரின் சுயமரியாதைக்கும் கேடு விளைவிக்காமல் இருக்க வேண்டும். நமது பண்பாட்டின் சிறப்பையும் மொழியின் மேன்மையையும் புலப்படுத்த வேண்டும். தமிழ் வளர்ச்சித்துறை இதற்கு ஆவன செய்ய வேண்டும். அலுவல் மொழி என்பது எளிமையாகவும் நல்ல மொழிநடையிலும் ஜனநாயக மாண்புகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். இதில் போதாமை நிலவுகிறது!

மு.இராமனாதன்
எழுத்தாளர் , பொறியாளர் .
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in