

உயிரின் இயல்பை விளக்குகையில், அது ‘அறிவிக்க அறியும்’ என்றுசைவசித்தாந்தம் விளக்குகிறது. உயிர் அறியும் திறம் உடையதுதான் என்றாலும், அறிய வேண்டியவற்றை அது தானாக அறியாது; அவற்றை யாராவதுஅதற்கு அறிவிக்க வேண்டும். அறிய வேண்டியவற்றை யாரும் சொல்லித் தர முன்வராவிட்டால், யார் துணைகொண்டாவது கற்றுத் தெரிந்துகொள்ளாவிட்டால், கற்க வேண்டிய நூல்களை ஓதி உணராவிட்டால், உயிரின் அறிவு விளங்காது.
பொறிஇன்றி ஒன்றும் புணராத புந்திக்கு / அறிவுஎன்ற பெயர்நன்று அற. (திருவருட்பயன், 15)
‘உயிருக்கு அறிவு என்று பெயர். ஆனால் உரிய அறிகருவிகள், அறிவு நூல்கள், அறிவிக்கும் குருமார்கள் இல்லாவிட்டால், உயிரால் எதையுமே அறிய முடியாது. பிறவற்றின் துணையின்றித் தானாக எதையுமே அறிய முடியாத இந்த உயிருக்கு அறிவு என்று பெயர் வைத்தவர் யார்?’ என்று கேலித் தொனியில் உயிரின் இயல்பை உணர்த்துகிறார் உமாபதி சிவம். உயிர் ஒன்றை அறிய வேண்டுமானால் உரிய நூல்களை, உரிய ஆசிரியர்களிடம் ஓதி உணர வேண்டும். ஆகவே, ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’. இதுதான் வாடிக்கையான கல்விக் கொள்கை. ‘கிளி வாடிக்கைபோல’ ஓதிஓதி உணரும் இந்தப் பழைய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, ஓதாது உணர்தல் என்ற புதிய கல்விக் கொள்கையின் திறத்துக்குச் சான்றாகத் தன்னையே வைக்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.
...முனைப்பள்ளி பயிற்றாதுஎன் தனைக்கல்வி பயிற்றி / முழுதுஉணர்வித்து உடல் பழுதுஎலாம் தவிர்த்தே / எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி... (திருவருட்பா VI, திருப்பள்ளி எழுச்சி, 7)
‘‘ ‘நான், எனது’ என்று முனைப்பு ஏற்றி என்னைப் பிறரோடு முட்டவிட்டு, முந்தவும் பிந்தவும் விடுகிற முறைசார்ந்த கல்வியைப் பயிற்றுவிக்காமல், என்னையே நான் கற்கச் செய்து, என் இயல்பை முழுதும் உணர்வித்து, அறியாமை உறக்கத்திலிருந்து என்னை எழுப்பிய அருட்பெருஞ்சோதியே!’’ என்று ஓதாமலே தான் உணர்ந்த வகை சொல்கிறார் வள்ளலார். பாட்டிலே சொன்னது போதாது என்று கருதி, ‘...தனித் தலைமைக் கடவுளே! குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியில் பயிற்றும் ஆசிரியர் இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது உள்அகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர்’ என்று உரைநடையிலும் சொல்கிறார். வள்ளலார் முன்வைக்கும் ஓதாமல் உணர்தல் என்கிற இந்தப் புதிய கல்விக் கொள்கையைப் பொறுக்கமாட்டாமல் வள்ளலாரின் சமகாலத்தவரும், மரபுச் சைவருமான ஆறுமுக நாவலர் கொதிக்கிறார். ஓதாமல் எப்படி உணர முடியும்? இதென்ன பொய்ம்மை?
“இராமலிங்கம் பிள்ளையும் அவர் மாணாக்கரும் ஓதாது உணர்ந்தது சத்தியமே ஆயின், அவர்கள் யார் ஒருவரிடத்தும் சுவடி ஏந்திப் படிக்கவில்லையா? படித்ததைப் பலர் காணவில்லையா? முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாமா? ஓதாது எல்லாம் உணர்ந்தேம்... என்றது எல்லா பாஷைகளையுமா? சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இரண்டு பாஷைகளை மாத்திரமா? தமிழை மாத்திரமா? தமிழில் உள்ள எல்லா நூல்களையுமா? அவற்றுள் இலக்கணம், இலக்கியம், ஞானசாத்திரம் என்னும் இம்முத்திறத்து நூல்கள் எல்லாவற்றையுமா? அப்படியாயின், தாம் பதிப்பித்த புத்தகங்களில் உள்ள பிழைகளுக்கு யாது சமாதானம் சொல்லுவர்?” (ப.சரவணன், ப.ஆ., அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு, ப.700) - என்று கொந்தளித்திருக்கிறார்.
வள்ளலாரின் கல்விக் கொள்கையில் நாவலருக்கு என்ன சிக்கல்? ஓதாமலே உணரலாம் என்று எல்லாரும் துணிந்தால் மரபார்ந்த முதுபெரும் சமயநூல்கள் ஓத ஒருவருமில்லாமல் பயனற்றுப் போகும். போகட்டுமே, அதனால் என்ன? சமய நூல்கள் பயனற்றுப் போனால், அவற்றால் கட்டி எழுப்பப்பட்ட சமய, சமூக, சடங்காசார அமைப்புகள் பொருளற்றுப் போகும். போகட்டுமே, அதனால் என்ன? சமய, சமூக, சடங்காசார அமைப்புகள் பொருளற்றுப் போனால், அவற்றால் நிலைநிறுத்தப்பட்ட அதிகாரங்களும் தகர்ந்துபோகும்; புதியவை புகும். புகட்டுமே, அதனால் என்ன என்று விட முடியாது என்று சமய அமைப்பைத் தரப்படுத்தியும், ஒருங்குவித்தும் கெட்டிப்படுத்தி, அதன்வழியாக அதிகாரத்தைத் திரட்டி மையப்படுத்தும் கருத்தியல் தரப்பினர் ஆறுமுக நாவலர் (Srilata Raman, ‘Unlearnt Knowing...’, The Journal of Hindu Studies, 2017).
அது ஒருபுறமிருக்க, ஓதி உணரும் மரபார்ந்த கல்விக் கொள்கையோடு வள்ளலாருக்கு என்ன பிணக்கு? மரபார்ந்த கல்விக்கு ஊற்று என்று காட்டப்படும் நூல்கள் சமயநெறியில் நம்மைச் செலுத்துகின்றன; சாதி, குலம் முதலியவற்றை நியாயப்படுத்துகின்றன; ஒன்றோடொன்று கலந்துகொள்ள முடியாமல் உயிர்களை வகைமைப்படுத்தித் தனித்தனித் தீவுகளாக்குகின்றன. உண்மைநிலை காட்டுவதும் இல்லை; பொதுமைநெறி கூட்டுவதும் இல்லை. குருமார்கள் என்று தலையணி பூண்டு ஓதுவிக்க வந்தவர்களோ விடுபடக் கற்பிக்காமல் அகப்படவே கற்பிக்கிறார்கள். இந்தப் படிப்பு சந்தைப் படிப்பு; நம் சொந்தப் படிப்பா என்னும் கேள்வியோடு மரபார்ந்த கல்வியின் கூட்டை உடைத்து வெளியேறுகிறார் வள்ளலார். நம்மைத் தலைபிடித்து உலுக்கும் அதிகாரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நாம் இன்னொரு அதிகார மையம் ஆகிவிடாமலும் இருக்க வேண்டும் என்கிற, மையம் சிதைக்கும், அதிகாரம் சிதைக்கும் கருத்தியல் தரப்பினர் திருவருட்பிரகாச வள்ளலார்.
இவை நிற்க, ஓதாமல் ஒருவர் எப்படி உணர முடியும் என்ற ஐயம் நமக்குமே இருக்கிறது. பொறிஇன்றி ஒன்றும் உணர முடியாதுதானே? உமாபதி சிவம் சொல்வதும் அதைத்தானே? வள்ளலார் ஓதாமல் உணர்ந்தேன் என்றது எதை? பொறிஇன்றி, நூல் இன்றி, ஓதுவித்து உணரச்செய்ய ஒரு சற்குருநாதர் இன்றி, வள்ளலார் உணர்ந்ததாகக் கூறுவது எதை? அருளை. அறிவைப் போலவே அருளும் உயிரின் உண்மை இயல்புதான். அறிவுக்குத்தான் ஓதி உணரும் கல்வி வேண்டுமே தவிர, அருளுக்கு வேண்டியதில்லை. அருள் ஓதிஓதி உணரும் கிளி வாடிக்கைக் கல்வியால் உருவாக்கப்படுவதில்லை. அறிவுக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு? அறிவு உலகத்து உயிர்களை எல்லாம் உயர்வு x தாழ்வு என்றும், சாரத்தக்கது x சாரத்தகாதது என்றும் வகைப்படுத்திப் பிரிக்கும். அருளோ எல்லா உயிரும் தன் உயிர் எனவே பொதுமைப்படுத்தும்; அணைத்துக்கொள்ளும்; அகண்டமாக்கும்; உயிர்த் திரள் நான் என்று கூவும்.
சமயம் குலம்முதல் சார்புஎலாம் விடுத்த / அமயம் தோன்றிய அருட்பெருஞ் சோதி. (அ.பெ.சோ.அகவல் 294)
ஓதாது உணர்ந்திட ஒளிஅளித்து எனக்கே / ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் சோதி. (மேற்படி 24).
கரு.ஆறுமுகத்தமிழன்,
‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com