

‘கொடிகாத்த குமரன்’, ‘திருப்பூர் குமரன்’ என்ற பெயர்களால் அழைக்கப்படும் குமாரசாமி, சென்னிமலையில் 1904இல் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக 12 வயதிலிருந்து சுமார் ஐந்து ஆண்டுகள் பள்ளிப்பாளைத்தில் நெசவு வேலைக்குச் சென்றார். 1922இல் திருப்பூரில் தரகுமண்டியில் வேலை பார்த்துவந்த குமரனுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது திருப்பூரில் இயங்கிவந்த ‘தேசபந்து வாலிபர் சங்க’த்தில் உறுப்பினராகப் பதிவுசெய்துகொண்டு, பொதுத்தொண்டு ஆற்றிவந்தார் குமரன். கள்ளுக்கடைகளின் முன்பு போராடுவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
கள் குடிப்பவர்களிடம் அதன் தீமையை விளக்கிக் கூறுவார் குமரன். அதனால் கடைக்காரர்கள் கள் மொந்தையை இவரது தலையில் வீசி அவமானப்படுத்துவார்கள். அந்நியப் பொருளான ‘வெடியை வாங்காதீர், காசைக் கரியாக்காதீர்’ என பட்டாசுக் கடைகளின் முன்னால் நின்று முழங்குவார். கடைக்காரர்கள் வெடியைக் கொளுத்தி வீசினாலும், தீப்புண்களை வாங்கிக்கொண்டு விடாமல் போராட்டத்தைத் தொடர்வார் குமரன்.
குமரனின் பொதுத்தொண்டுக்குத் தடைபோட நினைத்த அவரது பெற்றோர், திருமணம் என்கிற கூண்டில் அவரை அடைக்க முற்பட்டனர். பெண்ணின் பெயர் இராமாயி அம்மாள். குமரன் - இராமாயி தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. திருமணத்துக்குப் பிறகு குமரனின் மனம் சுதந்திரப் போராட்டச் சிந்தனைகளைச் சேமிக்கத் தொடங்கியது. சேவாதளத் தொண்டராகத் தம்மை இணைத்துக்கொண்டு செயலாற்றிவந்த குமரன், 18.03.1925 அன்று திருப்பூர் ஆஷர் மில்லின் அதிபரான பி.டி.ஆஷரின் இல்லத்தில் காந்தியைக் கண்டு வணங்கி மகிழ்ந்தார்.
04.01.1932 அன்று காந்தி கைது செய்யப்பட்டது நாட்டைக் கொந்தளிக்க வைத்தது. ஜனவரி 11 அன்று தேசபந்து வாலிபர் சங்கம் ஊர்வலம் நடத்துவதில் தீவிரமாக இருந்தது. கொடி ஊர்வலம். பி.எஸ்.சுந்தரம் என்பவரின் தலைமையில் கையில் மூவண்ணக் கொடியுடன் குமரன், ராமன் நாயர், பொங்காளி முதலியார் உள்ளிட்ட ஒன்பது பேர் தயாரானார்கள். “வந்தே மாதரம்.. மகாத்மா காந்திக்கு ஜே...” என்கிற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வீதியின் இருபுறமும் மக்கள் வெள்ளம். காவல்நிலையம் அருகே ஊர்வலம் வந்ததும், திபுதிபுவென போலீஸ் பட்டாளம் வெளியே வருகிறது.. போலீஸ்காரர்கள் அடித்தார்கள். குமரனின் மண்டை பிளந்தது. மீண்டும் மீண்டும் அடித்தார்கள், கடைசிவரை தம் கைகளில் இருந்த கொடியை விடாமல் பிடித்திருந்தார் குமரன். ராமன் நாயர், பி.எஸ்.சுந்தரம், குமரன் ஆகியோரின் உயிருள்ள உடல்கள் ஓட்டைப் பேருந்தில் தூக்கிவீசப்பட்டன. குமரனைச் சோதித்த மருத்துவர் கோபாலமேனன், குமரனின் மண்டை பிளந்து ரத்தம் கொட்டியதால் மூளைக்குள் ஏதோ புகுந்துவிட்டது என்றார். குமரனின் உயிர் பிரிந்தது. வாழ்வா... சாவா... ஒரு கை பார்ப்போம் என்று துணிந்து நின்ற அந்தச் சுதந்திர வீரனுக்கு நமது வணக்கத்தைச் செலுத்துவோம்.
(அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தேசியக் கொடியின் தந்தை திருப்பூர் குமரன்’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.)
திருப்பூர் குமரன் பிறந்தநாள்: அக்டோபர் 4