இடையிலாடும் ஊஞ்சல் 2: ஈரானியப் பெண்கள் வெல்லட்டும்!

இடையிலாடும் ஊஞ்சல் 2: ஈரானியப் பெண்கள் வெல்லட்டும்!
Updated on
2 min read

ஹிஜாப் பிரச்சினையால் நாடே கொந்தளிப்பிலும் குழப்பத்திலும்சிக்கிக் கொண்டுள்ளது. நான் இந்தியாவைச் சொல்லவில்லை; ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள், நாட்டின் அரசதிகாரத்தையே ஆட்டம்காண வைத்துள்ளன. செப்டம்பர் 13 அன்று மாஹ்சா அமினி (22), தலைநகர் தெஹ்ரானைச் சுற்றிப்பார்க்கச் சகோதரனுடன் தன் கிராமத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். போன இடத்தில் தன் தலைமயிர்க்கற்றைகளை முழுமையாக ஹிஜாப்பினால் அவர் மூடாத ‘குற்ற’த்துக்காக ‘ஒழுக்கப் போலீ’ஸாரால் கைதுசெய்யப்பட்டார். ‘மார்க்கக் கல்வி’ புகட்டப்படுவதற்காகப் போலீஸ் வேனில் அழைத்துச்செல்லப்பட்டபோது தாக்கப்பட்டிருக்கிறார். பின்னர், அவர் இறந்துவிட்டதாகச் சிறைத் துறை அறிவித்தது.

இளம் பெண்ணின் மரணம் ஈரான் முழுக்கப் போராட்ட அலைகளைக் கிளர்த்திவிட்டது. சமூக வலைதளங்கள் போராட்டத்தின் பிரச்சார மேடைகளாக ஆகிவிட்டன. தங்கள் தலைமுடியைக் கத்தரிக்கும் காட்சிகளையும் தங்கள்ஹிஜாபை எரிக்கும் காட்சிகளையும் பெண்கள் ஒளிப்படங்களாகவும் காணொளிக்காட்சிகளாகவும் பதிவிட்டு, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். ஈரானின் இஸ்லாமியக் குடியரசு ஆட்சி, போராடும் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பிரச்சினைக்குக் காரணம், வெளிநாட்டுச் சதி என்று கதைகட்டுகிறது.

வரலாற்றுப் பின்னணி: ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரமாய் இளம்பெண்களும் ஆண்களும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துவருகிறார்கள். வானளாவிய அதிகாரம் படைத்த ஈரானியத் தலைவர் கமேனி, இவர்களை எல்லாம் வெளிநாட்டுச் சதியாளர்கள் என்று உருவகித்து, அவர்களைத் தெருக்களிலேயே ‘சந்திக்குமாறு’ நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறைகூவல் விடுத்திருக்கிறார். அதனால், அரசாங்க விசுவாசிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் பல இடங்களில் தெருச்சண்டைகளும் நடைபெற்றுவருவதாகச் செய்திகள் வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மாஹ்சா அமினியின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக, அவளுடைய இறுதிச் சடங்குகளை இஸ்லாமிய முறைப்படி செய்யவந்த மௌல்வியை, “உங்கள் இஸ்லாத்தைத் தூக்கிக்கொண்டு வெளியேறுங்கள்” என மாஹ்சா அமினியின் தந்தை துரத்தியடித்த செய்தி தீயாய்ப் பரவியது. அராபியர் படையெடுப்பாலும் ஆக்கிரமிப்பாலும் ஆயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டிருந்த பெர்ஷிய இனத்தின் குரல்தான், அவர் மூலமாக வெடித்தெழுந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்குப் பயந்து, தங்களையும் இஸ்லாமியராக மதம் மாற்றிக்கொண்ட பெர்ஷியர்களின் பழைய வரலாறு இப்போது பொதுவெளியில் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இந்திய–பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் தங்கிவிட்ட இந்துக்கள் பலரும் தங்களாகவே மதமாற்றம் செய்துகொண்டு, இஸ்லாமியராக அங்கு வாழ்வதைப் பற்றி ஆய்வாளர் ஊர்வசி புட்டாலியா ‘The Other Side of Silence’ நூலில் விரிவாகப் பேசியிருக்கிறார். தங்கள் பழைய (செளராஷ்ட்ரியனிஸம்) மத அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்ள, பெர்ஷிய இன மக்களின் ஒரு பகுதியினர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தனர். இங்கு வாழும் பார்சி இன மக்களில் ஒரு பகுதியினர் இப்படி வந்தவர்களே.

புவிப்பந்தின் மறுபக்கம்: இந்தியாவின் சில மாநிலங்களில் ஹிஜாப் அணிந்துவந்தால் கல்வி கிடையாது என்று மறுக்கப்படுகிறது. பெண்கள் ஹிஜாப் அணிந்தே தீருவோம் எனப் போராடுகிறார்கள். புவிப்பந்தின் ஒரு பகுதியில் ஹிஜாப் தீயிட்டுக் கொளுத்தப்படும் வேளையில், இன்னொரு பக்கம் அதை விரும்பி அணிவோம் எனப் போராட்டம் நடைபெறுகிறது.புவியின் எந்தப் பகுதியிலும் நம் பெண் குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி வாழ அனுமதிக்கவில்லை என்பதுதான் துயரம். இது இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டுமே நேரும் ஒன்றல்ல. வடஇந்தியாவில் மணமான இந்து, சீக்கிய, சமணப் பெண்கள் கூங்கட் (Goonghat) எனப்படும் முகமறைப்போடுதான் வாழ்கிறார்கள். சேலைத் தலைப்பை முக்காடுபோலப் போர்த்தி அதன் முனையால் முழு முகத்தையும் மறைக்கும் வண்ணம் கீழே மூக்குவரை இழுத்துவிட்டுக்கொள்கிறார்கள். அந்த இடைவெளி வழியாகத்தான் அவர்கள் வெளி உலகைப் பார்க்கிறார்கள். சுவாமி அக்னிவேஷ் போன்ற ஜனநாயகச் சிந்தனை கொண்ட இந்து சன்னியாசிகள் இந்த கூங்கட் முறையைக் கண்டித்திருக்கிறார்கள். கிறித்துவப் பெண்கள் திருமணத்தன்று தங்கள் முகத்தைத் திரையிட்டு மறைக்கும் நடைமுறை இப்போதும் உள்ளது. உயர் சாதிப் பெண்கள் கைம்பெண்களாகும்போது மொட்டை அடித்து முக்காடு போட்டுக்கொள்ளும் நடப்பு தமிழ்நாட்டிலும் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மேலாடை இல்லாமல் திறந்தமேனியாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த காலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அதை எதிர்த்த போராட்ட வரலாற்றின் சின்னமாக ‘முலை அறுத்தான் பொட்டல்’ இருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல பெண்கள் கல்லூரிகளில் துப்பட்டா இல்லாமல் கல்லூரிக்குள் வர மாணவிகளுக்கு அனுமதி இல்லை.

எதை நோக்கி?: காலில் சிறு பகுதி தோல் தெரிந்தாலும் சவுக்கால் அடிக்கும் தாலிபான்கள் கதையைச் சொல்லத் தேவையில்லை. பெண்கள் தங்கள் உடலில் எதை மறைக்க வேண்டும், எதை வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆணாதிக்க உலகமே ஒவ்வொரு காலத்திலும் முடிவுசெய்கிறது. அதில் மத வேறுபாடு இல்லை. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இப்போதைக்குள்ள சிறு வேறுபாடு, இங்கே ‘கலாச்சாரக் காவலர்’களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் ஆட்சியாளர்கள் ஆதரவளிக்கிறார்கள். ஆனால், ஈரானில் ஒழுக்கப் போலீஸாக (Morality Police) அரசாங்கமே சட்டபூர்வமாக அலையவிட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா அந்த இடத்துக்குச் சென்றுவிடாமல் தடுத்துநிறுத்துவது நம் கைகளில் அடங்கியுள்ள பொறுப்பே. - ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் - பண்பாட்டுச் செயல்பாட்டாளர். தொடர்புக்கு: tamizh53@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in