

ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது மம்சாபுரம் என்கிற அழகான சிற்றூர். அந்த ஊரிலிருந்து மலைகளைப் பார்த்தால், கண்களைத் திரும்ப எடுக்க முடியாது. அப்படிப்பட்ட அந்த ஊரில்தான் ஜூன் 15, 1922இல் பிறந்த ம.ரா.போ.குருசாமி என்று அறியப்படும் ‘மம்சாபுரம் ராக்கப்பிள்ளை போத்தலிங்கம் குருசாமி’ அக்டோபர் 6, 2012இல் தனது 90ஆவது வயதில் கோவை மாநகரில் தன் பயணத்தை முடித்துக்கொண்டார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு, காலனித்துவ அரசு முறை வழங்கிய புதிய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தோன்றிய தமிழின் இரண்டாம் மறுமலர்ச்சி இயக்கத்திற்கான கருத்தாக்கங்களை உற்பத்திசெய்து, தமிழகம் முழுவதும் தமிழ்க் கல்வி என்ற பெயரில் விதைத்துக்கொண்டிருந்த தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் படிப்பதற்குச் சென்றார். அதுதான் அவருடைய பிற்கால வாழ்வு அனைத்தையும் எழுதுகிற ஆதார சக்தியாக அமைந்துவிட்டது. கூடவே, சென்னை மாநகருக்குள் இடம்பெயர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் பி.ஓ.எல். (ஹானர்ஸ்) என்ற தமிழ்ப் பட்டப்படிப்பு படிக்கச் சேர்ந்து, அன்றைய பெரும் பேராசிரியர்களான அ.மு.பரமசிவானந்தம், அ.சா.ஞானசம்பந்தன், மு.வரதராசனார், துரை.அரங்கனார் ஆகியோரிடம் தமிழ் கற்றுத் தெளிந்ததும் ம.ரா.போ.குருசாமி என்கிற ஆளுமை உருவாக்கத்திற்குத் துணைபோயுள்ளன என்றும் அறிகிறோம்.
பன்முகப் பணிகள்: இவ்வாறு தமிழ் மரபில் தோய்ந்த பண்டிதப் பண்பும் கல்லூரிக் கல்வியில் செழித்த ஆய்வுப் புலமையும் இணைந்த ஒருவிதக் கலவையான தமிழ்ப் பேராசிரியராகத் தன்னை அவர் வளர்த்துக்கொண்டார். மேலும், வகுப்பறையைத் தாண்டிச் சமூக வெளியிலும் தன் செயல்பாடுகளைத் தமிழ் தேசியம் பேசிய தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் கொள்கையோடு இணைந்து விரிவுபடுத்திக்கொண்டார். அவர் நடத்திய ‘செங்கோல்’ இதழில் துணை ஆசிரியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். இதுபோலவே தமிழ் மொழியை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்கப் பாடுபட்ட, கோவையிலிருந்து வெளிவந்த ‘கலைக்கதிர்’ இதழின் பதிப்பாசிரியராகவும் ‘சர்வோதயம்’ திங்கள் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், பின்னால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கிய பதிப்புத் துறையின் பேராசிரியராகவும் அதற்கு முன்பே ‘சக்தி’ வை.கோவிந்தனின் சக்தி காரியாலயத்தில் பதிப்பாசிரியராகவும் பணியாற்றிப் பன்முகமாகத் தன்னை வளர்த்தெடுத்துக்கொண்டார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும், பாளையங்கோட்டை, பாலக்காடு, கோவை முதலிய நகரங்களில் கல்லூரிப் பேராசிரியராகவும் கோவை சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் துணை முதல்வராகவும் கோவைக் கம்பன் கழகம், நன்னெறிக் கழகம் முதலியவற்றில் துணைத் தலைவராகவும் விளங்கித் தன் பெருமைக்குரிய ஆளுமையை நிலைநிறுத்திப் புகழ்பெற்றார்.
ம.ரா.போ.குருசாமியின் பங்களிப்புகள்: அவர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ‘ஆழமும் அகலமும்’ (ம.பொ.சி பற்றியது), மு.வ. முப்பால், கம்பர் முப்பால் முதலியவை. அவர் எழுதிய கட்டுரைகள் அகப்பொருள் தெளிவு, இலக்கியச் சுவை, சிலப்பதிகாரச் செய்தி, சிலம்புவழிச் சிந்தனை, தமிழ் நூல்களில் குறிப்புப் பொருள் (ம.ரா.போ. குருசாமியின் முனைவர் பட்ட ஆய்வேடு), குலோத்துங்கன் கவிதைகள் - ஒரு திறனாய்வுப் பார்வை, கபிலம் முதலியவை. அவர் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்புகள், ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ (மு.வ.வின் ஆய்வேடு). ‘அஸ்ஸாமிய இலக்கிய வரலாறு’, ‘மண்ணிலும் விண்ணிலும்’, ‘நேருவின் கருத்தும் எழுத்தும்’, ‘கபிலம்’ முதலியவை. இவை எல்லாம் நூலாக்கம் பெற்று அவரின் உழைப்பார்ந்த அறிவு நுட்பத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன. இன்னும் சாகித்ய அகாடமி வெளியிடும் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் திரு.வி.க., மா.இராசமாணிக்கனார் குறித்த நூல்களை ஆய்வுநோக்கில் தந்துள்ளார்.
விமர்சிக்கப்பட்ட பாரதி தொகுப்பு: பதிப்புத் துறைப் பேராசிரியர் என்ற முறையில் கபிலம், மனோன்மணீயம் ஆகியவற்றைப் பதிப்பித்திருந்தாலும் பெரிதும் பேசப்பட்ட பதிப்பு ‘பாரதி கவிதைகள்-ஆய்வுப் பதிப்பு’ என்ற நூலாகும். பாரதியின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவுடன் தமிழ்ப் பதிப்பகத்தார் பலரும் பலவிதமாக வணிகமய நோக்கில் மனம் போன போக்கில் வெளியிட்டுக்கொண்டிருந்த சூழலில், முறையாக ஒரு ஆய்வுப் பதிப்பைப் பாடலின் யாப்பு உட்படக் கவனம் எடுத்துக் காலவரிசைப்படுத்திக் கொண்டுவந்த பதிப்பு. 267 கவிதைகள், 2,576 செய்யுட்கள் என்று 1,326 பக்கத்தில் பதிப்பித்தார். சில புதிய பாடல்களையும் கண்டறிந்து சேர்த்தார். பாட வேறுபாடு, பாடல் தலைப்பு மாற்றம், காலக் குறிப்பு, பல வரலாற்றுத் தகவல்கள் எனப் பல சிறப்புகளுடன் குறைந்த விலையில் வெளிவந்தது. பின் இணைப்பு மட்டுமே 259 பக்கம். பாரதி ஆய்வாளர்களான சீனி.விசுவநாதன், பழ.அதியமான் போன்றவர்களால் விமர்சனத்திற்கு உள்ளான பதிப்பு என்றாலும், பாரதி ஆய்வியலில் குறிப்பிட்டத்தக்க ஒன்றாக அமைந்தது என்பது உண்மை.
இப்பதிப்பில் எனக்குப் பெரிதும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாக இருந்தது, அவரின் மரபார்ந்த பிடிப்பு எவ்வளவு கெட்டியானது என்பதுதான். அதாவது, பாரதியாரின் ‘வசன கவிதை’ எழுத்தை அவரால் கவிதையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், அந்தப் பகுதியைப் பாரதி கவிதைகள் 267 என்ற அவரிட்ட வரிசையில் சேர்க்காமல் போனால் போகட்டும் என்று தனிப் பகுதியில் சேர்த்து வெளியிட்டார். இது அன்றைய தமிழ்ப் புலவர்களின் வெளிப்பாடு. வசனம் வசனம்தான், செய்யுள் செய்யுள்தான். இரண்டும் வேறுவேறு. அவை ஒன்றுகூட முடியாது என்கிற நிலைப்பாடு.
கபிலம் தந்த அறிஞர்: அவருடைய மற்றொரு பெரும் பங்களிப்பாக நான் கருதுவது ‘வாய்மொழிக் கபிலன்’ என்று சங்கச் சான்றோர்களாலேயே புகழப்பட்ட கபிலரின் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் உள்ள பாடல்கள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து, விளக்க உரையுடன் ‘கபிலம்’ என்ற தலைப்பில் வெளியிட்டதோடு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கபிலரின் கவித்துவத் திறனையும் இயற்கையை அவர் அணுகும் அழகான முறைமையினையும் ஆங்கிலத்தில் எழுதி வெளிக்கொண்டு வந்ததுதான்.
இவ்வாறு 20ஆம் நூற்றாண்டில் தமிழை மையப்படுத்திய கருத்தாக்கங்களை முன்னெடுத்துச் சென்றமறைமலை அடிகள், கா.அப்பாத்துரை, நாவலர் சோமசுந்தரனார், தேவநேயப் பாவாணர், தனிநாயகஅடிகள், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு.வரதராசனார், ஒளவை சு.துரைசாமி, தமிழண்ணல் முதலிய பேராசிரியர் பெருமக்கள் வரிசையில் ம.ரா.போ.குருசாமி அவர்களும் தமிழ் இலக்கிய வெளியில் நிலைத்திருப்பார் என்பது உறுதி.
-க.பஞ்சாங்கம். பேராசிரியர், தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in