

திராவிட இயக்கத்தின் தொடக்கம் எனக் கருதப்படும் சென்னை லெளகீகச் சங்கத்தால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ் இதழ், ‘தத்துவ விவேசினி’. முற்போக்கு, பகுத்தறிவுச் சிந்தனைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்த இதழை வெளிக்கொண்டுவந்ததில் அத்திப்பாக்கம் வெங்கடாச்சலம் முக்கியப் பங்களிப்பாளராக இருந்திருக்கிறார். இந்தப் பின்னணியில் ‘விவேசினி’ என்ற ஆங்கிலப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நூற்றாண்டுக் காலத் தமிழ்ப் பகுத்தறிவு வரலாற்றை நினைவூட்டும் விதத்தில், ஒரு மூடநம்பிக்கையின் மர்மத்தை இந்தப் படம் கதாபாத்திரம் அவிழ்க்கிறது. நாசரை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டுள்ள இந்தப் படத்தை பவன் ராஜகோபாலன் இயக்கியுள்ளார். விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
ஓய்வுபெறுகிறார் பேராசிரியர்
எழுத்தாளரும் தமிழ்ப் பேராசிரியருமான பெருமாள் முருகன் கடந்த வாரம் நாமக்கல் அரசுக் கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றுள்ளார். தமிழ் எழுத்தாளராக உலகப் புகழ்பெற்றவர். சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் பல பல்கலைக்கழகங்களில் இவரது கதைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பேராசிரியராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் என்பது அவருடைய மாணவர்கள் எழுதிய ‘எங்கள் ஐயா’ நூல்வழி துலங்கும். மாணவர்களுக்குப் பாடத்தையும் பண்பையும் கல்விக் கட்டணத்தையும் அளித்தவர் அவர். முழுநேர எழுத்தாளராகச் செயலாற்றுவதற்காக, விருப்ப ஓய்வுபெற்றுள்ளார்.
குறிஞ்சிவேலனுக்கு முத்து விழா
மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலனுக்கு முத்துவிழா ஆண்டிது. மலையாள எழுத்தாளர் எஸ்.கே.பொற்றேக்காடு எழுதிய ‘விஷக்கன்னி’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக 1994ஆம் ஆண்டில் இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்காகவே ‘திசை எட்டும்’ காலாண்டிதழை அவர் நடத்திவருகிறார். 40க்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற ‘திசை எட்டும்’ ஆண்டு விழாவில், மொழியாக்கப் படைப்புகளுக்கான விருது வழங்கும் விழாவோடு குறிஞ்சிவேலனின் முத்து விழாவும் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டையில் திரை விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் அக்டோபர் 14 முதல் 18-ஆம் தேதி வரை ஏழாவது உலகத் திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவின் இலச்சினையைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார். இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்படவுள்ளன. புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கில் இந்த விழா நடைபெற இருக்கிறது.