

தமிழில் சுருக்கமாக எழுத முடியவில்லை என்று சொல்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்துடன் ஒப்பிட்டே அப்படிச் சொல்கிறார்கள். ஆங்கிலத்தின் தாக்கத்தில் தமிழ் எழுதுபவர்கள், அதனாலேயே பல நேரங்களில் தமிழ்ச் சொற்களைத் தவிர்க்கத் தலைப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் ஊறிய மனம், தமிழ்ச் சொற்களை மறக்கடித்துவிடுகிறது. அல்லது, ஆங்கிலச் சொற்களை / தொடர்களை மேலானவையாக நினைக்கவைக்கிறது.
இத்தகைய மனப்போக்குதான் தமிழில் சிக்கனம் இல்லை என்று சொல்கிறது. ஓரளவு தமிழறிவும் தமிழைப் பிறமொழித் தாக்கமின்றி இயல்பாக அணுகிப் பயன்படுத்தும் பழக்கமும் கொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை. செய்தித்தாள்களில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் ஆங்கில பாதிப்புள்ள தமிழை அதிகம் காணலாம். ஆனால், படைப்புகளில் அல்லது படைப்பாளிகளின் மொழியில் இதை அதிகம் காண முடியாது. ஏனென்றால், படைப்பு மனம் மொழியின் ஆழமான கூறுகளுடன் இயல்பாகவும் வலுவாகவும் தொடர்புகொண்டது.
அதுபோலவே, ஆங்கிலத் தாக்கம் அதிகமற்ற மக்களின் மொழியிலும் சிக்கனம் இயல்பாக இருப்பதைக் காணலாம். பழமொழிகளும் சொலவடைகளும் இதற்கு உதாரணம். 'அவனை முதுகுல தடவினா, வவுத்துல இருக்கறதக் கக்கிடுவான்' என்றொரு சொலவடை. 'காலில் சக்கரத்தக் கட்டிக்கிட்டு ஓடுறான்' என்று இன்னொரு சொலவடை. இவை இரண்டும் உணர்த்தும் பொருள்களை இந்தச் சொலவடைகளின் துணையின்றிச் சொல்ல முயன்றால், இரண்டு மூன்று வாக்கியங்கள் தேவைப்படும். தமிழின் இயல்பான பயன்பாட்டில் சிக்கனம் இருக்கிறது. இயல்பை விட்டு விலகும்போதுதான் ஊளைச் சதைபோட்டு எழுத்து வீங்கிவிடுகிறது.
இரண்டு மொழிகளை ஒப்பிட்டு ஒன்று சிறந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்று சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை. ஆங்கிலத்தை அளவீடாகக் கொண்டு தமிழின் சிக்கனம் பற்றிப் பெரும்பாலும் பேசப்படுவதால், ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழில் உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்களுக்குப் பஞ்சமே இல்லை. மிகவும் அடிப்படையான அண்ணன், தங்கை, அக்கா, தம்பி ஆகிய சொற்கள் தமிழின் சிக்கனத்தைப் பறைசாற்றுபவை. ஆங்கிலத்தைப் போல elder brother, younger sister என்றெல்லாம் இரண்டிரண்டு சொற்களைப் போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், தமிழிலும் சிலர் இப்போதெல்லாம் மூத்த சகோதரி, இளைய சகோதரன் என்று எழுதிப் படிப்பவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துகிறார்கள். 'செம ஷார்ப் ரெஸ்பான்ஸ்' என்றுகூட இப்போதெல்லாம் துணுக்குகளில் எழுதுகிறார்கள். கூர்மை என்ற சொல்லையே மறக்கடிக்கும் மொண்ணையான அணுகுமுறைகள்தான் தமிழுக்கு இன்று முக்கியமான எதிரிகள்.
அதுபோலவே மைத்துனன், மாப்பிள்ளை, மைத்துனி, மாமனார், மாமியார் போன்று தமிழில் ஒற்றைச் சொல்லாகப் புழங்கும் உறவுமுறைச் சொற்கள், ஆங்கிலத்தில் இரண்டு அல்லது மூன்று சொற்களாகப் புழங்கிவருகின்றன (brother-in-law).
பல சொற்களை ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் சிந்திக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. ஒரு சொல்லை எப்படிச் சொல்வது என்னும் நெருக்கடி ஏற்படும்போது, ஆங்கிலமே தெரியாத ஒரு தமிழர் இதை எப்படிச் சொல்லுவார் என்று யோசித்துப் பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும்.
அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in