

தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த மூவரின் வழக்குகளில் வாதாடியவர் தோழர் என்.டி.வி., என்றறியப்பட்ட என்.டி.வானமாமலை: எம்.ஜி.ஆர் - எம்.ஆர்.ராதா வழக்கில் ராதாவுக்காக வழக்காடியவர்; மு.கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் வழக்கில் மத்திய அரசின் சார்பாகவும், மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்காகவும் வாதாடினார்; ஜெ.ஜெயலலிதாவுக்காகவும் வாதாடியுள்ளார்.
இந்திய - ரஷ்ய நட்புறவு: கம்யூனிஸ சித்தாந்தத்தில் பற்றுக்கொண்டிருந்த என்.டி.வி. அரசியல் வேறுபாடுகள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர். எம்.ஜி.ஆர். அவரைக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வலியுறுத்தினார். ஆனால் என்.டி.வி. அதற்கு இணங்கவில்லை. இந்திய - சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். இந்திய–சோவியத் நட்புறவில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்று என்.டி.வி. விரும்பினார். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ‘ரஷ்யக் கலை விழா’ நடக்க அடித்தளமிட்டவர் என்.டி.வி. இன்றைக்கும் ரஷ்யக் கலை விழா நடைபெறுகிறது. இந்திய-சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் கிளை சிந்தாதிரிப்பேட்டையில் 1974இல் தொடங்கப்பட்டது. இந்திய–சோவியத் நட்புறவுக் கழகத்தைத் தமிழ்நாட்டில் மக்கள் இயக்கமாக மாற்றிய சாதனை இவரையே சேரும்.
கலாச்சார உறவு: இந்தியாவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான கலாச்சார உறவை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட கலாச்சார ஒத்துழைப்பு, நட்புக்கான இந்தியச் சமூகம் (இஸ்கஃப்) உலக சமாதானத்திற்காக நடைபயணம் ஒன்றை 1985இல் ஒருங்கிணைத்தது. கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான நடைபயணம் அது. அந்த நடைபயணத்தை நீதிபதி கிருஷ்ணய்யர் தொடங்கிவைத்தார். பல மாவட்டங்களில் அந்த நடைபயணக் குழுவினருக்குச் சாதி, சமய, கட்சி வேறுபாடின்றி வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘பாதை தெரியுது பார்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘பஸ் அதிபர்’ சேலம் எஸ்.தாமு, நடிகர் ராஜேஷ், கோமல் சுவாமிநாதன், குன்றக்குடி அடிகளார், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் நடைபயணத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். மிகவும் வெற்றிகரமாக நடந்துமுடிந்த அந்த நடைபயணத்தின் வெற்றிக்கு என்.டி.வி.யின் பங்களிப்பு மகத்தானது.
இஸ்கஃபின் அகில இந்திய தேசிய மாநாடு 1988இல் சென்னையில் அப்போதிருந்த ஆபட்ஸ்பரியில் நடைபெற்றது. பல முக்கிய ஆளுமைகளும், நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கலந்துகொண்டார்கள். சுமார் இரண்டாயிரம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாபெரும் மாநாடாக அது அமைந்தது. அந்த மாநாட்டை என்.டி.வி. வடிவமைத்த பாங்கும் ஒருங்கிணைத்த நேர்த்தியும், அனைவரது பாராட்டையும் பெற்றது. இஸ்கஃப் அமைப்புக்கென்று தனியாக ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற யோசனையை என்.டி.வி.தான் முதன்முதலில் முன்வைத்தார். ‘இஸ்கஸ்’ என்ற பெயரில் அது வெளிவந்தது. இஸ்கஃப் சார்பாக ‘ஸ்கூல் ஆஃப் மியூஸிக்’ என்ற இசைப் பள்ளி ஒன்றும் உருவாக்கப்பட்டது.
மக்கள் ஆதரவு: சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் நேர்த்தியாகச் செயல்பட வேண்டும் என்பதில் என்.டி.வி. அக்கறை காட்டினார். மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் முடிந்த பிறகும், அந்த மசோதாக்களின் பிரதிகளைக் கவனமாகப் படித்துப் பார்ப்பார். அவரது சொந்த ஊரான நாங்குநேரிக்கு அவரும்நானும் ஒருமுறை சென்றிருந்தோம். அவர் வருவதை அறிந்து, வழியில் வள்ளியூர் என்ற இடத்தில் சுமார் நூறு பேர் திரண்டுவந்து அவரை வரவேற்றதைக் கண்டு நான் வியந்துபோனேன். ‘ஐயா, என்னைத் தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றியவர் நீங்கள்’ என்று அவரால் பல்வேறு வழக்குகளிலிருந்து காப்பாற்றப்பட்ட பலர் நெகிழ்ந்தார்கள். தனக்கெனச் சில தொழில் தர்மங்களை என்.டி.வி. கையாண்டுவந்தார். ஏழைகள், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள், இந்திய-ரஷ்யப் பண்பாட்டு அமைப்பின் உறுப்பினர்களில் உண்மையிலேயே தகுதியானவர்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகும்போது அவர் கட்டணமாக ஒரு பைசாகூட வாங்கியதில்லை என்பது அவற்றில் முக்கியமான ஒன்று.
ஆசிரியர்களிடம் பெற்ற ‘கட்டணம்’: ஒருமுறை தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தியது. பெரியளவில் நடைபெற்ற அந்தப் போராட்டம், பல நாட்கள் நீடித்துவந்தது. ஊடகங்கள் அந்தப் போராட்டத்தைச் செய்தியாக்கின. ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். வழக்குகள் போடப்பட்டன. ஆசிரியர்கள் தரப்பில் வானமாமலை ஆஜரானார். நீதியரசர் மோகன் அமர்வு நீதிபதியாக இருந்தார். என்.டி.வி.யை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்தார். “ஆசிரியர் பெருமக்களை நான் கடவுளுக்குச் சமமாகக் கருதுகிறேன். அவர்களைப் பெரிதும் மதிக்கிறேன். அவர்களின் கோரிக்கைகளை என் தலைமையிலான அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை அவர்களுக்குப் புரியவைத்துப் போராட்டத்தை வாபஸ் பெறச் சொல்லுங்கள்” என்றார்.
முதலமைச்சரின் விருப்பப்படி என்.டி.வி.ஜாக்டோ நிர்வாகிகளுடன் பேசினார்; போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர், ஜாக்டோ நிர்வாகிகளில் ஒருவரான கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் என்.டி.வி.யைச் சந்திக்க விரும்பினார். ‘உங்களுக்கு எவ்வளவு பீஸ் தர வேண்டும்?’ என்று ஜாக்டோ நிர்வாகிகள் கேட்டனர். ‘என்னுடைய பீஸ் என்ன தெரியுமா… ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களுக்குக் கல்வியைச் சரியாகச் சொல்லிக் கொடுங்கள். அதுதான் என்னுடைய பீஸ்’ என்றார் என்.டி.வி.
நீங்காத நினைவுகள்: ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் திரைப்படங்களை என்.டி.வி. விரும்பிப் பார்ப்பார். ஒரு நாள் டி.வி.யில் சிவாஜியின் ‘கெளரவம்’ படம் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தைப் பார்க்கும்படி சொன்னேன். படத்தைப் பார்த்துவிட்டு, “கேஸ் விவரங்களைப் படிக்கவேண்டிய வேலை இருந்தது. அதே சமயம், கௌரவத்தை மிஸ் பண்ணவும் மனமில்லை” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். சிவாஜியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். மிகத் தீவிரமான படிப்பாளி. ஏராளமாகப் படிப்பார். ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டபோது அவருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதுதான் அவர் கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி. அவருடைய இந்திய-ரஷ்ய நட்புறவுக்கான பங்களிப்பைப் பாராட்டி, விருதுப் பதக்கம் ஒன்றை என்.டி.வி.க்கு ரஷ்யா அறிவித்தது. ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள என்.டி.வி. மறுத்துவிட்டார். தோழர் வானமாமலை பற்றிய என் நினைவுகள் என்றென்றும் பசுமையானவை. நான் அவருடன் பழகிய அனுபவங்கள் அந்தப் பசுமைக்கு நீர் தெளித்துக்கொண்டே இருக்கின்றன. அவை வாடாது, வதங்காது! - ப.தங்கப்பன், பொதுச் செயலாளர், இந்திய-ரஷ்யக் கலாச்சார - நட்புறவுக் கழகம்