Published : 30 Sep 2022 07:05 AM
Last Updated : 30 Sep 2022 07:05 AM
தெற்காசியாவில் ரீயூனியன் டிலாரீயூனியன் பல்கலைக்கழகம், இந்தோனேசியாவின் சுமத்ரா உத்தாரா பல்கலைக்கழகம், கம்போடியாவின் கெமர் மொழிகள் ஆய்வு மையம், வியட்நாமின் மொழிகள்-பன்னாட்டு ஆய்வியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளைத் தமிழக அரசு தொடங்கும் எனச் செம்மொழி விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், செம்மொழி விருது விழா நடந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலேயே தமிழியல் சார்ந்த பணியாளர்கள், தமிழ்மொழி வல்லுநர்கள் நிரந்தரப் பணியில் இல்லை. இயக்குநர் பணி மட்டுமே நிரந்தரப் பணியாக இருக்கும் நிலையில், அவரும்கூட காங்கேயம் அரசுக் கல்லூரியிலிருந்து அயற்பணி நிலையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.
உயர்தனிச் செம்மொழி: இந்திய அளவிலும் பல நிலைகளில் தமிழ் மொழிக்கான பல துறைகள், இருக்கைகள் முடங்கியுள்ளன. இவற்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவந்த தமிழ் தொடர்பான மொழியியல் ஆய்வுப் பிரிவு மற்றும் ஆய்வகம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தப் பணித்திட்டம், திருக்குறள், கிறித்துவ ஆய்விருக்கைகள், சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் பிரிவு மற்றும் ஆய்வுக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்திலிருந்து பேசப்பட்டுவரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால், இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று ‘கண்ணியமிகு’ காயிதேமில்லத் அரசமைப்பு நிர்ணய அவையில் முழங்கினார்.
அத்தகைய உயர்தனிச் செம்மொழிக்கு அக்காலத்திலோ அல்லது அதற்குப் பிறகோ இந்திய வரலாற்றில் அளிக்கப்பட்டுள்ள சிறப்புநிலைத் தகுதி என்ன என்பது குறித்துச் சிந்திப்பது அவசியம். ஏனென்றால், பழந்தமிழின் தொன்மையையும் மரபையும் பரவலாக்கும் வகையிலும் கற்றல், கற்பித்தல் எனப் பயிலும் நிலை - ஆராய்ச்சி சார்ந்து எத்தனை உயர்கல்வி நிறுவனங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்தல் தற்காலத்தின் அவசியத் தேவைகளில் ஒன்று. இந்தப் பின்னணியில் இந்திய மொழிகள் மையத்தில் இயங்கிவந்த தமிழ்ப் பிரிவைத் தமிழ்த் துறையாக உயர்த்த, தமிழக அரசின் சார்பில் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு ஐந்து கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது சிறப்பிற்குரியது.
வடகிழக்கு இந்தியாவில் தமிழ்: இந்தியாவின் வடகிழக்குப் பகுதி என்பது எட்டு மாநிலங்கள், நான்கு அண்டை நாடுகளைக் கொண்டது. வடகிழக்கு இந்தியாவை மொழி, கலாச்சாரத்தின் அருங்காட்சியகம் என்பர். அந்த அளவுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு இனக்குழுக்களும் மொழிகளும் அங்குள்ளன. அத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில் தமிழ் மொழியைக் கற்கவும் ஆய்வுசெய்யவும் வேண்டிய வசதிகளை அசாமில் 1948இல் தொடங்கப்பட்ட குவஹாத்தி பல்கலைக்கழகம் வழங்கிவருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் 1967இல் தொடங்கப்பட்ட இந்திய மொழிகள் - இலக்கியத் துறையில் அசாமி, தமிழ், நேபாளி, ஒடியா, வங்காளி, இந்தி, ரபா, மிஸிங் ஆகிய மொழிகள் உள்ளன. தென்னிந்திய மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசிடமிருந்தும், மைசூருவில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நிறுவனத்திடமிருந்தும் புத்தகங்களைச் சேகரித்து, தமிழுக்கென்று தனித்த நூலகம் இங்கு நிறுவப்பட்டுள்ளது.
வடகிழக்கு இந்திய மாணவர்கள் பலரும் தமிழ் கற்பதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். பட்டயம், முதுகலை ஒப்பிலக்கியம் (எம்.ஏ) ஆகியவற்றில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கவும், எம்.பில்., முனைவர் பட்ட ஆய்வில் மாணவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி நிலை வரை செல்லவும் இப்பல்கலைக்கழகத்தில் வாய்ப்புகள் உள்ளன.
தமிழ் இலக்கிய வகைமைகளை அசாமி இலக்கிய வகைமைகளோடு ஒப்பிட்டும், தமிழ்ச் சிறார் கதைகளை அசாமி சிறார் கதைகளோடு ஒப்பிட்டும் அசாமைச் சேர்ந்த இரு மாணவியர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இங்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட்ட உதவித்தொகை கிடைக்காததால் மாணவர் சேர்க்கையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே தமிழ் பயிலும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இதைக் கவனத்தில் கொண்டு வடகிழக்கு இந்தியாவில் எழும் தேவையை நிறைவுசெய்ய, வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அசாமில் தமிழ் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு.
செயல்படாத தமிழ்த் துறைகள்: வடஇந்தியப் பல்கலைக்கழகங்களான பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைவுபெற்ற கல்லூரிகளிலிருந்த தமிழ்த் துறைகள் முடங்கியுள்ளன. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஆக்ரா பல்கலைக்கழகம், லேடி ராம் கல்லூரி (புது டெல்லி), சண்டிகர் பல்கலைக்கழகம், பாட்டியாலா பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழுக்கெனத் தனித் துறைகள் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது இவற்றில் எத்தனைப் பல்கலைக்கழகங்களில் உரிய பேராசிரியர்கள், ஆய்வுக்களங்களுடன் தமிழ்த் துறை இயங்கிவருகிறது என்பது கேள்விக்குறி. இவற்றில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டுமே தற்போது தமிழ்த் துறை இயங்கிவருகிறது. அவற்றின் இயக்கமும் செயல்பாடுகளும்கூடத் தமிழ் வளர்ச்சி நோக்கிய வகையில் போற்றத்தக்கதாக இல்லை. அங்கு அப்படி என்றால், திராவிட மொழிகளின் தோற்றுவாயான தென்னிந்தியாவில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் இதைவிட இழிநிலை இருந்துவருவது வருந்தத்தக்கது.
கேரளப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் (திருப்பதி), திராவிடப் பல்கலைக்கழகம் (குப்பம்), பெங்களூர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் போன்றவற்றிலும் தமிழ்த் துறை இயங்கிவந்தது. எனினும், தற்போது அவற்றில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இவற்றில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை முறையாக இயங்கவே இல்லை; கற்றுத் துறைபோகிய பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.
என்ன செய்ய வேண்டும்?: இவை குறித்துச் சிந்திப்பதற்கும் அவை இயங்குவதற்குத் தேவையான நிதிநல்கையை, உழைப்பை வழங்குவதற்கும் மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும். குறிப்பாக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத 1947இல் உருவாக்கப்பட்டு பேராசிரியர்கள் சி.இலக்குவனார், அ.மு.பரமசிவானந்தம், டி.சிங்கரவேலு போன்ற மூத்த அறிஞர்கள் அலங்கரித்த உஸ்மானியா பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முழுமையாக இயங்காமல் இருக்கிறது. தற்போது தெலங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ஆளுநராகவும் இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை சிறப்புற ஆளுநர் தமிழிசை வழிவகுத்திட வேண்டும்.
உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் உள்ள இருக்கைகளை எவ்வளவு முக்கியமானதாக அரசுகள் கருதுகின்றனவோ அதேபோல் இந்தியப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள தமிழ்த் துறைகள், இருக்கைகளின் நிலை குறித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். - இரா.பன்னிருகைவடிவேலன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: pannirukai.sl@velsuniv.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT