புதிய மின் கட்டணம்: நன்மைகளும் சிக்கல்களும்

புதிய மின் கட்டணம்: நன்மைகளும் சிக்கல்களும்
Updated on
3 min read

வருடாந்திர மின் கட்டண விகிதம், ஆறு சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் எனத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாமல், தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகம் (TANGEDCO) கடனில் உழன்றுகொண்டிருக்கும் நிலையில், முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்டதே.

புதிய கட்டணத் திருத்தம் வரவேற்கத்தக்கது. எனினும் கட்டண அமைப்பை வகைப்படுத்தியுள்ள முறை சிக்கலாக இருக்கிறது. வருடந்தோறும் மின் கட்டணம் மறுபரிசீலனை செய்யப்படாமல் போனதே தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை மோசமடைந்ததற்கு முக்கியக் காரணம். அதன் காரணமாக, சராசரி வருமானம் சராசரி விநியோகச் செலவுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. பல வருட காலமாக வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. பல திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டன, ரத்துசெய்யவும் பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, விநியோக அமைப்பை நவீனப்படுத்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகத்தின் திறன் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சீர்மிகு மின் வலைப்பின்னலுக்கு மாறுவதும் தடுக்கப்பட்டிருக்கிறது.

சிக்கலான கட்டண விகிதம்: இரு மாத மின் பயன்பாட்டை 100 யூனிட்டுகளுக்கும் குறைவாகக் கொண்ட வீட்டு மின் நுகர்வோரும், விவசாய இணைப்புகளுக்கும் இந்தக் கட்டணப் பாதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய கட்டணப் பிரிவுகளில் சில, பரிசோதித்தறிய முடியாத விளக்கங்களைக் கோருவதாக உள்ளது. எனவே, கட்டண விகிதத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிமையாக்குவது குறித்து மின்கழகம் அவசியம் பரிசீலிக்க வேண்டும். பசுமைக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால், திறந்த அணுகுமுறை சார்ந்த (Open Access) கட்டணங்களை அதிகரிப்பது தொழில்துறையினரை ஆர்வம் இழக்கச் செய்யலாம்.

பசுமைக் கட்டணங்கள், வணிகம் - தொழில்துறை நுகர்வோருக்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்முதலின் மாற்று வடிவங்களாகி வருகின்றன. முதன்முறையாகத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர் அழுத்த நுகர்வோர் கட்டும் தொகைக்கு மேல் 10 சதவிகிதக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தொழில்துறையினர் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறி, நீடித்த இலக்குகளை எட்ட இந்த நடவடிக்கைகள் ஊக்குவிக்கும். மறுபுறம் அதிகரித்துவரும் மின்சாரத்தை எடுத்துசெல்வதற்கான செலவும், நிலையான பயன்பாட்டுக் கட்டணங்களும், திறந்த அணுகுமுறை வழியாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைத் தொழில்துறையினர் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கவும்கூடும்.

உயர் அழுத்த மின் நுகர்வோருக்கான நிலையான பயன்பாட்டுக் கட்டணங்கள், கடந்த கட்டண விகிதத்துடன் ஒப்பிடும்போது 57% அதிகமாக உள்ளது. திறந்த அணுகுமுறையில் மின்சாரத்தை எடுத்துச்செல்வதற்கான செலவு ஒரு யூனிட்டுக்கு 0.21 ரூபாயிலிருந்து 1 ரூபாய் வரை உயர்அழுத்த மின் நுகர்வோருக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது (இது 376% உயர்வு). குறைந்தஅழுத்த மின் நுகர்வோருக்கான மின்சாரத்தை எடுத்துச்செல்வதற்கான செலவு இன்னும் அதிகமாக ஒரு யூனிட்டுக்கு 1.6 ரூபாயாக உள்ளது. நாட்டிலேயே விலையுயர்ந்த திறந்த அணுகுமுறை மின் சந்தைகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாட்டை இது மாற்றிவிடும். மாநிலத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் ஈர்க்கப்படுவதை இது வெகுவாகப் பாதிக்கும்.

மாலை நேர மின்சுமைக்கு வீட்டு மின் நுகர்வோரின் பங்களிப்பே முதன்மையானது. தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோர் பிரிவுதான் 2020-21 நிதியாண்டின் மொத்த மின் விற்பனையில் 41.28 சதவிகித அளவைப் பயன்படுத்தியிருக்கிறது. பொது மின் வாகனங்கள் மின்னேற்றும் கட்டமைப்புக்குப் புதிய கட்டண விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. மின் வாகன மின்னேற்றும் 100 நிலையங்களை நெடுஞ்சாலையில் உருவாக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகம் முன்னெடுத்திருக்கிறது. சூரிய ஆற்றல் கிடைக்கும் நேரத்துக்கு ஏற்ப மின் கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படுவது, மின்னேற்றும் நிலையங்களைப் பகலில் பயன்படுத்த நுகர்வோர்களை ஊக்குவிக்கும்.

உத்தரவாதம் உண்டு, திட்டம் இல்லை: புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான உத்தரவாதங்கள் புதிய கட்டண விகித அறிவிப்பில் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், நிலைத்த ஆற்றலுக்கான எதிர்காலத் திட்டம் இல்லை.

அதிகரிக்கக்கூடிய மின்சாரத் தேவையில் 87 சதவிகிதத்தை அனல் மின் நிலையங்களைக் கொண்டு பூர்த்திசெய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகம் திட்டமிடுகிறது. வெறும் 13 சதவிகிதத்தை மட்டும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகளில் பெறத் திட்டமிட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் நிலக்கரி மின்நிலையங்கள் செயல்படத் தொடங்கினால், தமிழ்நாடு மின் கழகத்துக்கு அவை அதிகச் செலவை ஏற்படுத்தும். வரும் ஆண்டுகளில் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தின் விலை உயரும். தமிழ்நாடு மின் கழகத்தின் 1,890 மெகாவாட் நிலக்கரி மின்நிலையங்கள் 30 வருடங்கள் பழமையானவை, பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டாக வேண்டியவை. மின் கழகத்தின் 4,320 மெகாவாட் நிலக்கரி மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் இருந்து சல்ஃபர் டை ஆக்சைடு நீக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். அது மின்சாரத்துக்கான செலவை மேலும் அதிகரிக்கும்.

மின் துறை அமைச்சகம் விதித்துள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்முதல் பொறுப்புகளின்படி, தமிழ்நாடு மின் கழகத்துக்கான ஆற்றலில் 35.9 சதவிகிதத்தை 2026-27ஆம் நிதியாண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வழியே பெற்றாக வேண்டும். மின் கழகக் கணிப்புகளிலோ அதன் பாதி அளவுக்கும் குறைவாகவே பொருட்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சேமிப்பு சார்ந்த எதிர்காலக் கடமை, 2023ஆம் ஆண்டுக்குள்ளாக 20 கிகாவாட் சூரிய ஆற்றல் - கூரை சூரிய ஆற்றல் ஆகியவற்றைப் பற்றி மின் துறை அமைச்சகம் எப்படித் திட்டமிடவிருக்கிறது என்பதும் விளக்கப்படவில்லை. நிலக்கரி மின் நிலையங்களைக் காட்டிலும் பெரியளவிலான சூரிய ஆற்றல் - காற்றாலைத் தொழில்நுட்பங்களின் உற்பத்திக் கட்டணம் மலிவாகிவருகிறது. அவை தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. புதிய அனல்மின் நிலையங்களைக் கட்டுவதில் இருக்கும் அபாயங்கள், மாநிலத்தின் நீண்டகால ஆற்றல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஒரு வலுவான உத்தியை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதைய அறிவிப்பில் எல்லா தரப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முனைப்பு இருந்தாலும், நிலைத்திருக்கும் தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றத்துக்கான உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் நிலக்கரி சார்ந்த திட்டங்களை மாநிலத்தின் மின் உற்பத்தியில் சேர்ப்பதற்கான திட்டங்களும் இந்த அறிவிப்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. உற்பத்தி, விநியோகம், சேமிப்பு, மேற்கூரை சூரிய ஆற்றல், பசுமை ஹைட்ரஜன் - காற்றாலை ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒட்டுமொத்தச் சூழலை உள்ளடக்கிய திட்டமிடலும் ஆராய்ச்சியும் தமிழ்நாட்டின் ஆற்றல் எதிர்காலத்தைச் சரியாகக் கணிப்பதற்கும் காலநிலை நெருக்கடி எதிர்ப்புக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் உதவியாக அமையும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொண்டு பொருளாதார மேம்பாட்டை உருவாக்கி அனைவருக்குமான நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய மலிவு விலை ஆற்றல் விநியோகத்தை உத்தரவாதப்படுத்தும் ஒருங்கிணைந்த ஆற்றல் கொள்கையை வடிவமைக்க வேண்டிய நேரம் இது.

- மார்ட்டின் ஷெர்ஃப்லெர், ஆரோவில் கன்சல்ட்டிங் நிறுவனத்தின் துணை நிறுவனர். சந்தியா சுந்தரராகவன், World Resources Institute, India-வில் ஆற்றல் மாற்றங்கள் குழுவின் தலைவர்.

தொடர்புக்கு: martin@aurovilleconsulting.com; sandhya.ragavan@wri.org

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in