Published : 29 Sep 2022 07:05 AM
Last Updated : 29 Sep 2022 07:05 AM

தேர்வுகளின் நோக்கம் ஏன் தேடலாக இல்லை

இந்தியாவில் ஒருவரது அறிவுநிலை என்பது அவர் தேர்ச்சிபெறும் தேர்வைக்கொண்டே அளக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் இதைப் பெரும் கேலிக்கூத்தாக மாற்றிவிட்டன. முதல் மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படும் மாணவரை, ‘இவர் எங்கள் நிறுவனத் தயாரிப்பு’ என அடுத்தடுத்த நாட்களில் இரண்டு, மூன்று பெரிய பயிற்சி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தின. பெருந்தொகை கொடுத்து வெற்றியாளரை ஏலத்தில் எடுத்து விளம்பரப்படுத்திக்கொள்வது மோசடி. ஆனால் மத்திய அரசோ, தேசியத் தேர்வு முகமையோ, ஏன் சமூகமோகூட அன்றாடம் பார்க்கும் விளம்பரங்களில் ஒன்றாக அதைக் கடந்துவிட்டது. ஒரு அறிவு மையச் சமூகத்தை, நுழைவுத்தேர்வு மையச் சமூகமாய் மாற்றும் படிநிலையில் நுட்பமான வியாபார வெற்றிகளை சிலர் மொத்தமாக அறுவடை செய்கின்றனர்.

ஐஐடியின் தோல்வி?: இந்தியாவின் முதல் ஐஐடி 1951இல் கரக்பூரில் தொடங்கப்பட்டது; 1961இல் ஐஐடி நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐஐடியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு அரசு இன்று செலவிடும் தொகை ரூ.2.2 கோடி. நீட் உட்பட அனைத்து நுழைவுத்தேர்வுகளுக்கும் முன்மாதிரியாக, ஜேஈஈ எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துக்கான (ஐஐடி) நுழைவுத்தேர்வு கருதப்படுகிறது.

தமிழ்நாட்டின் கல்வி நிலை அகில இந்தியச் சராசரியைவிட உயர்ந்துநிற்கிறது; உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம், தேசியச் சராசரியைவிட அதிகம்; கல்வியில் ஆண்-பெண் சமத்துவ விகிதாச்சாரக் குறியீட்டில், இந்திய அளவில்தமிழகம் மூன்றாம் இடம். எனினும் தரம் இல்லை... ஐஐடி நுழைவுத்தேர்வில் பெரிய தேர்ச்சி இல்லை என்பன போன்ற விமர்சனங்களைத் தமிழகம் எதிர்கொண்டுவருகிறது. ஆனால், உண்மை நிலை என்ன? தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்று, 2019ஆம் ஆண்டின் ஜேஈஈ கேள்வித்தாளைச் சர்வதேசக் கல்வியாளர்களிடம் காட்டி விவாதித்தது. மோசமாகத் தயாரிக்கப்பட்ட கோவையற்ற மோசடிக் கேள்வித்தாள் என்றும் நியாயமற்ற மதிப்பெண் வழங்கும் முறை என்றும் ஜேம்ஸ் ஹாட்டிங்சன் உட்படப் பலர் அதைப் புறந்தள்ளினர்.

ஐஐடி வழங்கும் உயர்கல்வி படுதோல்வி அடைந்துள்ளதே உண்மை. 1961 தொடங்கிக் கடந்த 62 ஆண்டுகளில் ஒரு நோபல் அறிஞரைக்கூட ஐஐடி-யால் நாட்டுக்குத் தர முடியவில்லை. இயற்பியலுக்கான நோபல் பரிசு (1983) பெற்ற சுப்ரமணியன் சந்திரசேகரோ (சென்னைப் பல்கலைக்கழகம்), வேதியியலுக்கான நோபல் பரிசு (2009) பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனோ (பரோடா பல்கலைக்கழகம்) நுழைவுத்தேர்வு அவசியம் இல்லாத பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்றவர்கள். இஸ்ரோ விஞ்ஞானிகளில் 1.2% கூட ஐஐடியில் பயின்றவர்கள் இல்லை. ஐஐடியில் பயின்றவர்களில் 63% பேர் அயல்நாடுகளில் தங்களது படிப்புக்குச் சம்பந்தம் இல்லாத வேலைகளுக்குப் போய்விட்டார்கள். 7% பேர் ஐஐடியில் படிப்பை முடிப்பதே இல்லை; இந்தப் பட்டியலில் தற்கொலைகளைச் சேர்க்கவில்லை.

நீட் என்னும் சந்தை: நீட் தேர்வுபோல் மருத்துவக் கல்விக்கு மட்டுமேயான ஒற்றைச் சாளர நுழைவுத்தேர்வு முறை என்பது உலகில் எந்த மருத்துவக் கவுன்சிலிலும் கிடையாது. 12 ஆண்டு கல்வித் தேர்ச்சியைக் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், நீட் மதிப்பெண்களை மட்டும் முதன்மையாகக் கொள்வது அநியாயம். ஜேஈஈ, நீட் இரண்டும் நியாயமற்ற மதிப்பீட்டு முறையைக் கொண்டுள்ளதாக உலகக் கல்வியாளர்கள் சாடுகிறார்கள். இந்தத் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்கள் நீட் தேர்வை ஒரு பிரம்மாண்ட சந்தையாக்கி உள்ளன. ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் முதல் பதினோரு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் கோட்டா எனும் ஊரே பெரிய பயிற்சி மையமாக மாறிவிட்டிருக்கிறது.

நீட் கேள்வித்தாளில் விடைகளின் உருவகை அறிதல் (Pattern Recognition) குறித்தே தீவிரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைப் பயிற்சி மைய வித்தகர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆக, நீட் தேர்வில் வெற்றி என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களின் நிபுணத்துவம் சம்பந்தப்பட்டது அல்ல. இந்தப் பாடங்களில் மேல்நிலைப் பொதுத்தேர்வில் சதமடிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் படுதோல்வி அடைவது இதனால்தான்.

சுமார் 18 லட்சம் பேர் கணினியில் விடைத்தாள் நிரப்பும் (நீட் தேர்வு எழுதப்படுவதில்லை, நிரப்பப்படுகிறது) நுழைவுத்தேர்வில், 5% பேர் மட்டுமே மருத்துவம் படிக்கத் தேர்வாகும் (91 ஆயிரம் இடங்கள்) மோசமான விகிதாச்சாரம் உலகில் வேறு எந்தத் தேர்விலும் இல்லை. சமூகம் ஒருவகைப் பதற்றத்தோடும் பதைபதைப்போடும் வேறெந்தக் கவனப் பிசகுமின்றிப் பரபரப்பாக இயங்கவைக்க, அதைத் தேர்வு மையச் சமூகமாக மாற்றிவிட்டால் போதும். பள்ளி, கல்லூரி தொடங்கி பணி வாய்ப்பு வரை இந்தியாவில் ஒருவர் சராசரியாக 23 தேர்வுகளை எதிர்கொள்கிறார் என்கிற உண்மையை இங்கே உணர வேண்டும்.

உலக நாடுகளின் தேர்வுகள்!: தேர்வுகள் இல்லாத நாடே உலகில் இல்லை. மூன்று வகையான முதன்மைத் தேர்வுகள் உலக நாடுகளில் வழக்கத்தில் உள்ளன. ஒன்று, பின்லாந்து, நார்வே, சுவீடன் நாடுகளின் ஆசிரியர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கையின் விளைவை அறிய மாணவர்களே அறியாமல் அவர்களுக்கு நடத்தும் ‘சோதனைத் தேர்வுகள்’. இரண்டு, மாணவர்கள் தங்களது துறை எது என்பதைத் தேர்வுசெய்ய சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் நடத்தப்படும் தேர்வுகள். சீனாவில் ஒவ்வொரு ஜூன் மாதமும் 7, 8 தேதிகளில் காவோகாவோ (Gaokao) தேர்வு நடக்கும்.

கணிதம், சீனமொழி, ஒரு அயல்மொழி கூடவே அறிவியல் பிரிவு, கலைப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு என்று மூன்று பிற பிரிவுகளுக்கான தேர்வுகளில் தங்களது தேசிய விழுக்காட்டைக் கொண்டு தனது துறையைத் தேர்ந்தெடுத்துக் கல்லூரி செல்ல மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது [2020 தேர்ச்சி விகிதம் 90.6% (நீட் தேர்வு 5%)]. இதேபோல்தான் ஜப்பானின் டாய்காகு (Daigaku), ஜெர்மனியின் அய்ட்டூர் (Aitur) தேர்வுகளும். மாணவர்கள்தான் தமது துறையைத் தேர்வு செய்கிறார்களே ஒழிய, ஒரு துறைக்கு மட்டுமேயான வடிகட்டுதலாகத் தேர்வுகள் இல்லை.

மூன்று, ரஷ்யாவின் எடினி (Yediniy) போன்ற சுயதேர்வுகள். ஒரு பாடத்தில், துறையில், உட்பிரிவில் தெரிந்தவை என்ன, தெரிய வேண்டியவை என்ன என்பதை உணர்த்தும் இந்த அற்புதத் தேர்வுகள் கற்றலைக் கூர்மைப்படுத்துகின்றன. பிரான்சில் சில பிராந்தியங்களில் சுயதேர்வுக்கு மாணவர்களே கேள்வித்தாள்களைத் தயாரிக்கிறார்கள். ரஷ்யாவில் சுயபடைப்பாக்கம், தர்க்கம் என விரிவடையும் இத்தேர்வில் திறன்பேசி, கணினிவழி இணையத்தையும் மாணவர்கள் பயன்படுத்தலாம். கியூபாவில் தேர்வுகளுக்குக் கால நிர்ணயம் கிடையாது. பத்தாம் வகுப்பு வரைகூட வீட்டுக்கே கேள்வித்தாள் ஒரு சிற்றேடாக வழங்கப்படுகிறது. ஆக, உலக நாடுகளில் நடத்தப்படும் தேர்வுகளில் தேடலே முதன்மை நோக்கம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தேவை தெளிவு...: தேர்வு வேண்டாம் என்று யாரும் சொல்லப்போவது இல்லை. நம் நாட்டுத் தேர்வுகள் சான்றிதழ் என்கிற ஒன்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன. வடிகட்டும் வழிமுறையாகத் தேர்ச்சி அல்லது தோல்வி இரண்டை மட்டுமே அவை அறிவிக்கின்றன. உணர்வும் உயிரும் கொண்ட குழந்தைகளைக் காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வுகள் ஒரு கேள்வித்தாளைக் கொண்டு தேர்ச்சிபெறு அல்லது தோற்றுப்போ என்று சொல்லாமல் சொல்கின்றன. 18 லட்சம் பேருக்கு ஒரே கேள்வித்தாள் கொடுத்து 18 லட்சம் பேரிடமும் ஒரே விடையை எதிர்பார்ப்பதைவிட உலகில் பெரிய வன்முறை வேறு எதுவும் இருக்க முடியாது. மாணவர்களின் தேடல், பொது வாசிப்பு, இயல்பான அறிவுத்தேர்ச்சி, ஈடுபாட்டுடன் கூடிய சிறப்பம்சங்கள், ஈர்ப்பு கொண்ட திறன்களைக் கண்டறிந்து, அவற்றைக் கொண்டாடும் நம்பிக்கைத் தேர்வுகளே நமக்கு தேவை என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்? - ஆயிஷா இரா.நடராசன், கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x