

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 அன்று தனது 96ஆம் வயதில் காலமானார். 70 ஆண்டுக் காலம் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாண்ட பெருமைக்குச் சொந்தக்காரரான அவர், பிரிட்டன் வரலாற்றில் நீண்ட கால அரசியாக இருந்தவர். அவருடைய மறைவு நீண்ட சகாப்தத்தின் முடிவு. இது அவருடைய தலைமையின் கீழான 14 காமன்வெல்த் நாடுகளுடன் தொடர்புடையது. எலிசபெத்தின் மறைவு காமன்வெல்த் அமைப்பின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கக்கூடும். இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின்னர் காமன்வெல்த் கட்டமைப்பு நிலைத்திருக்குமா? அல்லது பார்படாஸ் வழியில் பிற நாடுகளும் பிரிட்டன் முடியாட்சியுடனான தங்கள் உறவை முறித்துக்கொள்ளுமா?
காமன்வெல்த் என்றால் என்ன?: காமன்வெல்த் நாடுகள் என்பவை 56 நாடுகள் அடங்கிய ஒரு குழு. இந்த நாடுகள் பெரும்பாலும் முன்பு பிரிட்டனால் ஆளப்பட்டவை. பிரிட்டிஷ் அரசின் குடியேற்றங்கள் என்றும் சொல்லலாம். காமன்வெல்த்தின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ளன. சில பசிபிக் நாடுகளும் இதில் அடக்கம். காமன்வெல்த் நாடுகளில் பல வளர்ந்துவரும் பொருளாதார நிலையில் உள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் காமன்வெல்த்தின் வளர்ந்த நாடுகள்.
காமன்வெல்த் நாடுகளும் பிரிட்டன் முடியாட்சியும்: உலகெங்கும் பிரிட்டனின் முடியாட்சி ஆளுகைக்கு உட்பட்ட பல நாடுகளில் மக்களாட்சி மலர்ந்த காலகட்டத்தில் அரசியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். அவருடைய காலத்தில், அவருடைய கண்முன்னே, அந்த நாடுகளின் சமூகப் பொருளாதாரச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டன் முடியாட்சியுடனான வரலாற்று உறவுகளிலிருந்து விடுபடவும், மக்களாட்சியை நிறுவவும் பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2021இல் பிரிட்டன் மன்னர்/அரசியை அரச தலைவர் பதவியிலிருந்து நீக்கிய 18ஆவது நாடானது பார்படாஸ். மன்னருக்குப் பதிலாகத் தலைமைப் பதவியில் ஒரு தேசிய அரசாங்கச் செயலாளரை பார்படாஸ் நியமித்தது. இன்று பிரிட்டன் அரசி மறைந்துவிட்டார். அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் புதிய அரசராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில், காமன்வெல்த் குடையின்கீழ் உள்ள பல நாடுகள் பார்படாஸின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் சாத்தியம் அதிகம் உள்ளது.
உறுப்பு நாடுகளின் பார்வை: பரந்த காமன்வெல்த் குழுவின் உறுப்பினர்களாக இந்தியா உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகள் உள்ளன. காமன்வெல்த் குழுவின் கூட்டங்கள் மூலமாக, அதன் உறுப்பு நாடுகளிடையே கொள்கை ஒருங்கிணைப்பு வலுவாக வளர்ந்துவருகிறது என்பதை மறுக்க முடியாது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியின்போது இந்த ஒருங்கிணைப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. உறுப்பு நாடுகளை ஒருங்கிணைப்பதிலும், சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அமைதியைக் காப்பதிலும் அரசி இரண்டாம் எலிசபெத் முக்கியப் பங்காற்றினார். உலகெங்கிலும் உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக அவர் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார்.
1997 இல் அரசி இரண்டாம் எலிசபெத் இந்தியாவுக்கு மூன்றாவது முறையாக வந்தபோது, ஜலியான்வாலா பாக் படுகொலைக்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பலர் எதிர்பார்த்தனர். அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால், ஒரு விருந்து உரையில் அந்தத் துயரமான சம்பவத்தை அவர் வெறுமனே பதிவுமட்டும் செய்தார். அதே ஆண்டில், ஹாங்காங்கின் கட்டுப்பாட்டை பிரிட்டன் சீனக் குடியரசிடம் ஒப்படைத்தது. இதன் மூலம் 156 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவின் மிக முக்கியமான காலனிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பகுதியை அது இழந்தது. மிகச் சமீபத்தில், மார்ச் 2022இல், தற்போதைய இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் உள்ளிட்ட பிற அரச குடும்பத்தினர் கரீபிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அங்கே அவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் அடிமைத்தனத்திற்கான இழப்பீடு சார்ந்த கோரிக்கைகளையும் எதிர்கொண்டனர்.
முடிவுக்கு வருகிறதா முடியாட்சி: சமூகரீதியாகப் பல ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துவரும் இன்றைய நவீனச் சூழலில் தொடரும் இந்த சர்ச்சைக்குரிய பிரிட்டன் முடியரசு முறைக்கு எதிராகப் பல காத்திரமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆஸ்திரேலியா உட்பட சில காமன்வெல்த் நாடுகளில் நடைபெற்ற விவாதம் பிரிட்டன் முடியரசு முறைக்கு எதிரான மக்கள் இயக்கங்களுக்கு வித்திட்டது. ஆஸ்திரேலியாவைப் பிரிட்டன் முடியாட்சியிலிருந்து படிப்படியாக விடுபட்டு, முழுமையான குடியரசாக மாறும் பணியைத் தொடங்குவதற்காக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் தலைமையிலான அரசாங்கம் ஜூன் 2022 இல் மாட் திஸ்லெத்வைட் என்னும் அமைச்சரை நியமித்தது.
அதிகாரபூர்வமாக பிரிட்டன் முடியாட்சியுடனான உறவுகளைத் துண்டிப்பது குறித்த வாக்கெடுப்பு அங்கே இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தனது நாடு மன்னர் சார்லஸை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், நியூசிலாந்து ‘உரிய நேரத்தில்’ குடியரசாக மாறும் என்று அவர் கூறியுள்ளதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பஹாமாஸ் பிரதமர் பிலிப் டேவிஸ், 1973இல் சுதந்திரம் பெற்ற அந்நாட்டை குடியரசாக மாற்றுவதற்கு, பிரிட்டன் அரசர் சார்லஸை அதிகாரபூர்வத் தலைவர் பதவியிலிருந்து நீக்க, பொதுவாக்கெடுப்பு நடத்த உள்ளதாகக் கூறியுள்ளார். ஆன்டிகுவா, பார்புடா, பெலிஸ், கிரெனடா, ஜமைக்கா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய கரீபிய நாடுகளும் இதேபோல் செயல்படுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.
காமன்வெல்த் கடந்த காலத்தின் எச்சம் ஆகுமா?: காலனித்துவத்தின் கொடுமையான வரலாற்றையும் வன்முறைகளையும் வளச் சுரண்டல்களையும் இன்னல்களையும் சந்தித்த பல நாடுகள் இன்று மேம்பட்ட குடியரசுகளாக உலகில் நிலைநிறுத்திக்கொண்டுள்ளன. அந்த நாடுகளின் வளர்ச்சி இன்று பிரிட்டனையும் விஞ்சத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில், அரசி எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, காமன்வெல்த் அமைப்பு கடந்த காலத்தின் எச்சமாக மாறிவிடக்கூடும் என்பது வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிடக்கூடியதல்ல. - தொகுப்பு: முகமது ஹுசைன்