

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இருந்தபோதிலும், அது மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பது போன்றே நடைமுறைகள் இன்றும் தொடர்கின்றன. தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஒருபுறம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துகொண்டிருந்தாலும்கூட, மத்திய அரசு தனது உத்தரவுகள் மூலமும் அதிகாரிகள் மூலமும் பல விஷயங்களைப் படிப்படியாக அமல்படுத்திவருகிறது.
கல்விக் கொள்கை விவாதம்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின்போது இந்தியா முழுவதும் எந்த மாநிலமும் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. ஆனால், தமிழகம் அதை எதிர்த்துப் பெரியளவில் உரையாடலை உருவாக்கியது. ஒன்றியம், மாவட்டம், மாநிலம் எனப் பல்வேறு நிலைகளில் நிகழ்வுகள் நடத்தி விவாதங்களைத் தொடர்ந்தது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முக்கியப் பங்கு வகித்தது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர், மாணவர் இயக்கங்கள் பெரும் வீச்சாக அதைக் கொண்டுசென்றன. அதிகபட்சமாக ‘மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசன வரைவு’ ஒன்று வெளியிடப்பட்டு, அது குறித்தும் தொடர்ந்து உரையாடல்கள் நடைபெற்றன. தேர்தல்களில்கூட தேசியக் கல்விக் கொள்கை மிக முக்கியமான ஒரு விவாதப் பொருளானது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை அறிவிப்பு மக்கள், கல்வியாளர்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே, மத்திய அரசு அனைத்து விவகாரங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதுதான் வழக்கமாக உள்ளது. ஆக, ஒரு மாநில அரசு கொண்டுவரும் கல்விக் கொள்கை எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும், அதை அமல்படுத்துவதற்கான சாத்தியம் அந்த அரசுக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அல்லது மத்திய அரசின் பரிந்துரைகள், கொள்கைகளையே வேறு வழிகளில், வேறு பெயர்களில் நாம் எதிர்கொள்ளப் போகிறோமா என்பதும் தெரியவில்லை.
கல்விக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வை, ஆரம்பக் கல்வி, உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகங்கள், மொழிக் கொள்கை, உடற்கல்வி, தொழிற்கல்வி, இணையவழிக் கல்வி, தரமான கல்வி எனப் பல அம்சங்கள் குறித்தும் கல்விக் கொள்கைக் குழு பரிந்துரைகளைக் கேட்டுள்ளது. மின்னஞ்சல்வழி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசை நோக்கி வைக்கப்பட்ட அதே கோரிக்கைகளைத்தான் மீண்டும் நாம் தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. தற்போது மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. என்றாலும்கூட அரசும் குழுவும் இன்னும் கூடுதலாக மெனக்கெட வேண்டும்.
பரவலாக்கமும் வெளிப்படைத்தன்மையும்: கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ஒரு சில மாவட்டங்களைத் தவிர, பெரும்பாலும் பரவலாக நடைபெறவில்லை. நடந்த இடங்களிலும் வெளிப்படையாக நடைபெறவில்லை, பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. ஆசிரியர் மற்றும் பிற அமைப்புகளுக்குத் தகவலே இல்லை. எனவே, இந்தக் கூட்டங்கள் இன்னும் பரவலாக நிறைய இடங்களில் நடத்தப்பட வேண்டும். வரைவு உருவாக்கி அதனை வெளியிட்ட பிறகு, விரிவான அளவில் கருத்துக் கேட்புத் திட்டம்கூட இருக்கலாம். அந்த நிலையில் அதுவும் அவசியம்தான். பிற மாநிலங்களைவிடத் தமிழகம் எப்போதும் கல்வியில் முன்னிலை வகிக்கும் மாநிலம்தான். என்றாலும் கல்விக் கொள்கை என்பது நம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நீண்ட கால நோக்கில் உருவாக்கப்படும் ஓர் ஆவணம். எனவே, அதை ஒரு சமூக விவாதமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
ஆசிரியர், மாணவர், பெற்றோர், அதிகாரிகள், சமூகம் முழுவதையுமே ஒரு பதற்றத்தில் வைத்திருப்பதுதான் பள்ளிக் கல்வி முறையா, கல்வியில் ஏன் இந்தப் பாகுபாடு, மதிப்பெண் மயமாக்கப்பட்டது ஏன், கல்வியைப் பந்தயம் ஆக்கிய சூழல் எது, குழந்தைமையை மட்டுமின்றி, குழந்தைகளையே பலி கேட்கும் இன்றைய கல்விதான் நவீன கால யதார்த்தமா... இல்லை திணிக்கப்படும் நிர்ப்பந்தமா - இந்த ‘யதார்த்தம்’ மாறக் கூடியதா? இந்த மாற்றத்துக்கான ஒரு சமூக விவாதத்தைத் தொடங்கிவைக்கும், விரிவுபடுத்தும் ஒரு வாய்ப்பாக மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்தை நாம் பயன்படுத்த வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளைப் பரவலாக்க வேண்டும். - தேனி சுந்தர்; தொடர்புக்கு: thenisundar123@gmail.com