

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதியம், மத்திய அரசு, பிற மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் கடந்த சில ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர். 2019இல் அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தியபோது, நேரில் வந்து ஆதரவு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்ததும் அரசாணை 354இன்படி அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது வெளியிடப்பட்ட அரசாணை 354இன்படி, அரசு மருத்துவர்களில் 12 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவருக்கு ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும். அதை 2017ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தி, அதற்கான பணப் பலன்கள் (Arrears) தரப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு 2021இல் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு மருத்துவர்களுக்கு ஏற்கெனவே 20 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு கிடைத்திடும் வகையில் காலம் சார்ந்த ஊதியம் (DACP) வழங்கப்படுவதாகவும், ஊதியப்பட்டை நான்கை முன்னதாகவே (Compression of years) தருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கும், கர்நாடகம், பிஹார் போன்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் எம்பிபிஎஸ் மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு முறையே 13 ஆண்டுகள், 6 ஆண்டுகள், 3 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே சிறப்பு மருத்துவர்கள் உள்பட அனைவருக்கும் 20 ஆண்டுகளில் தரப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு கூறுகிறது.
இதுதவிர, தமிழகத்தில் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேர்மையாக நடக்கவில்லை என்றும் இது சார்ந்த நியமனங்களில் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. மேற்கண்டவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, செப்டம்பர் 28 (புதன்கிழமை) அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசு மருத்துவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது. அவர்களது முதன்மைக் கோரிக்கையான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசாணை, இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் உறுதிமொழியின்படி 19 ஆயிரம் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
- எஸ்.பெருமாள் பிள்ளை, மருத்துவர், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர். தொடர்புக்கு:sppillai@yahoo.co.in