

தமிழகத்தில் இப்போது காய்ச்சல் காலம். வழக்கமாக, மழைக்காலத்தில் பரவும் ஃபுளூ எனும் பருவ காலக் காய்ச்சலோடு, பன்றிக் காய்ச்சல், டைபாய்டு, டெங்கு, கரோனா எனப் பலதரப்பட்ட காய்ச்சல் வகைகள் பரவிவருகின்றன. அதனால் மக்கள் மத்தியில் அச்சமும் அதிகரிக்கிறது. பருவ காலம் மாறும்போது அதுவரை உறங்கிக் கிடந்த பாக்டீரியாக்களும் வைரஸ்களும் விழித்தெழுந்து, உருமாறி, வீரியம் பெற்று, மக்களைத் தாக்கப் புறப்படுவதுதான் இந்த மாதிரியான காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணம். காய்ச்சல் வகைகளில் எது எப்படித் தோன்றும் என்பதை மக்கள் தெரிந்துகொண்டால், காய்ச்சலுக்குச் சரியான சிகிச்சை பெறவும் அச்சம் தவிர்க்கவும் உதவும்.
ஃபுளூ காய்ச்சல்: இப்போது பரவுகிற காய்ச்சல் வகைகளில் ‘இன்ஃபுளூயன்சா’ எனும் ஃபுளூ காய்ச்சல்தான் அதிகமாகக் காணப்படுகிறது. இது இன்ஃபுளூயன்சா உள்ளிட்ட பலதரப்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். ‘பாரசிட்டமால்’ மாத்திரையும் ‘ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்து’களும் பலனளிக்கும். இவற்றை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி சரியாக இருந்தால், 90% பேருக்கு ஒரு வாரத்தில் இது தானாகவேசரியாகிவிடும். சிலருக்கு மட்டுமே நிமோனியா எனும் தீவிர நுரையீரல் நோயை ஏற்படுத்தும்.
பன்றிக் காய்ச்சல்: இன்ஃபுளூயன்சா ஏ (H1N1) எனும் வைரஸால் இது வருகிறது. இதில் ஃபுளூ காய்ச்சல் அறிகுறிகளோடு வாந்தியும் வயிற்றுப்போக்கும் காணப்படும். இதுவும் பெரும்பாலானோருக்கு ஃபுளூ காய்ச்சலைப் போலவே எளிதாகக் கடந்துவிடக்கூடியதுதான். என்றாலும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முதியோர்கள், இதயநோய், சர்க்கரை நோய் போன்ற இணை நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், புற்றுநோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு நுரையீரல் செயல்பாட்டுத் திறன் குறைகிறது. அதனால், நிமோனியா ஆபத்து அதிகரிக்கிறது. இவர்கள் தொண்டைச் சளிப் பரிசோதனை செய்து, பன்றிக் காய்ச்சலை உறுதிசெய்து ‘ஒசெல்டாமிவிர்’ (Oseltamivir) மாத்திரையை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெறலாம்.
நிமோனியா காய்ச்சல்: இன்ஃபுளூயன்சா வைரஸ் மட்டுமல்லாமல், நியூமோகாக்கஸ் எனும் பாக்டீரியா நுரையீரலைக் கடுமையாகப் பாதிப்பதாலும் நிமோனியா ஏற்படலாம். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் முதியோரையும்தான் இது அதிகமாகப் பாதிக்கும். இந்த நோயுள்ள குழந்தை சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல் போன்றஅறிகுறிகளும் தோன்றும். குழந்தை எந்தநேரமும் உறக்கத்திலேயே இருக்கும் அல்லது அழுதுகொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும். சிறுநீர் பிரியாது. இந்தக் குழந்தைகளை அவசரப் பிரிவில் அனுமதித்துச் சிகிச்சை வழங்க வேண்டும்.
டைபாய்டு காய்ச்சல்: இதுவும் ஒரு பாக்டீரியா நோய்தான். இந்தக் கிருமிகள் மாசடைந்த குடிநீர் - உணவு மூலம் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். இரவில் காய்ச்சல் கூடும், பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, சோர்வு எனப் பல தொல்லைகள் துணைக்கு வரும். நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால் விரைவில் குணமாகும்.
எது டெங்கு?: கொசுக் கடி மூலம் ‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் நமக்குப் பரவும்போது டெங்கு காய்ச்சல் வருகிறது. திடீரென்று கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, உடல்வலி, தசைவலி, மூட்டுவலி, களைப்பு ஆகிய அறிகுறிகளோடு இது ஆரம்பிக்கும். கண்ணுக்குப் பின்புறம் கடுமையாக வலிப்பதும் எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் வலிப்பதும், இந்த நோய்க்கே உரித்தான அறிகுறிகள். அத்தோடு உடலில் அரிப்பும், சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். விரல்களால் முன்கையைப் பிடித்தால் அங்கே விரல் தடம் விழும்.
என்ன செய்ய வேண்டும்?: காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் நிறைய நீராகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, காய்கறி சூப், பழச்சாறுகள் நீரிழப்பைத் தவிர்க்க உதவும். எந்த ஒரு காய்ச்சலுக்கும் சுய சுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம் காப்பதுதான் முக்கியத் தடுப்பரண்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ளவரிடமிருந்து விலகியிருக்க வேண்டும். கை, கால், முகத்தை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். சளி, இருமல் இருப்பவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வாயைக் கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். தெருக்களிலும் பொது இடங்களிலும் எச்சில்/சளியைத் துப்பக் கூடாது. கரோனாவுக்கு மட்டுமல்ல, ஃபுளூ மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வேண்டுமானாலும் முகக்கவசம் கட்டாயம்.
காய்ச்சல் பரவும் காலத்தில் மக்கள் கூடும் பொது இடங்களுக்குத் தேவையில்லாமல் செல்ல வேண்டாம். பத்து நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து, ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரைக் குடிப்பது நல்லது. திறந்து வைக்கப்பட்ட உணவு வகைகள், ஈ மொய்த்த உணவு வகைகள் வேண்டாம். வீட்டையும், தெருக்களையும் சுத்தப்படுத்தி பிளீச்சிங் பவுடர் தூவினால் ஈக்கள் வராது. கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியலாம்; கொசு வலை, கொசு விரட்டிகள், களிம்புகளைப் பயன்படுத்தலாம். பள்ளிக் குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, காய்ச்சல், இருமல், சளி பாதிப்புள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். எந்த வகைக் காய்ச்சல் என்றாலும் ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது நல்லது. சுய சிகிச்சை வேண்டாம்.
தடுப்பூசி உதவும்!: இன்ஃபுளூயன்சா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் குழந்தைகள் - முதியோர்கள் வருடத்துக்கு ஒருமுறை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பு இதைச் செலுத்திக்கொள்ளலாம். நிமோனியாவைத் தடுக்கவும் ‘பிசிவி’ (PCV) தடுப்பூசி இருக்கிறது. இதை எல்லோரும் செலுத்திக்கொள்ளலாம். கரோனா தடுப்பூசியுடன் இதையும் சேர்த்தே செலுத்திக்கொள்ளலாம்.
அரசு என்ன செய்ய வேண்டும்?: தமிழகத்தில் ஃபுளு காய்ச்சல் பரவத் தொடங்கியதுமே சுகாதாரத் துறையினர் காய்ச்சல் முகாம்கள் மூலம் தகுந்த மருந்துகளைக் கொடுத்துவருகின்றனர். என்றாலும், நாட்டில் தெருக்களைச் சுத்தமாகப் பராமரிப்பதிலும் சுற்றுப்புறச் சுத்தம் காப்பதிலும் இன்னும் அலட்சியம் காணப்படுகிறது. கரோனா முதல் அலையில் தெருக்களைச் சுத்தம் செய்ய பல முன்னெடுப்புகளை அரசு எடுத்ததுபோல், இப்போதும் எடுக்க வேண்டியது அவசியம். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீரை உறுதிப்படுத்த வேண்டும். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஃபுளூ காய்ச்சலுக்கும் மருந்துகள் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முக்கியமாக முதியோர்கள், சர்க்கரை நோயுள்ளவர்கள், இதயம், சிறுநீரகம், நுரையீரல் தொடர்பில் இணை நோயுள்ளவர்களுக்கு வீடு தேடி மருந்துகள் கொடுத்தால், காய்ச்சல் பரவுவதை இன்னும் எளிதாகத் தடுக்கலாம். அரசு மருத்துவமனைகளில் நிமோனியா தடுப்பூசிக்கு இப்போது தட்டுப்பாடு இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதையும் அரசு உடனே சரிசெய்ய வேண்டும். - கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com