

எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தை நேரலையில் பார்த்தபோது, அந்நாட்டு மக்கள் திரளாகக் கூடிநின்று தம் இரங்கலை வெளிப்படுத்தியது வியப்பில் ஆழ்த்தியது. உலகமயமாக்கச் சூழலில் நிலவுடைமைச் சமூகத்தின் குறியீடுகளான கிரீடம், செங்கோல் போன்றவற்றுடன் அந்நாட்டு மக்கள் கொண்டிருந்த பிணைப்பின் வெளிப்பாடாக மட்டுமின்றி, அம்மக்களுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவின் அடையாளமாகவும் இதைக் கொள்ளலாம். ஊர்வலக் காட்சி கடந்த கால நிகழ்வுகளுக்குள் என்னை அழைத்துச்சென்றது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்களாக வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்களாக மாறியபோது, வட்டார ஆட்சியாளர்கள் சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை எதிர்த்து அவர்களுடன் போரிட்ட ஆங்கிலேயர்கள் அவர்களைச் சிறைபிடித்ததுடன் விசாரணை என்ற நாடகத்தை நடத்தி, அவர்களுக்கு மரணதண்டனையும் விதித்தனர். இது நிறைவேற்றப்பட்ட பின்னர், உயிர் துறந்தோரின் உடலை என்ன செய்தனர்? உறவினர்களிடம் சடலத்தை வழங்கினார்களா? அல்லது தாமே நல்லடக்கம் செய்தனரா? இக்கேள்விகளுக்கான விடையை மூன்று நிகழ்வுகளின் வழி தேடுவோம்.
ஆங்கிலேயரின் அராஜகங்கள்: மக்களால் ‘கும்மந்தான்’ (கமாண்டர்) என்றழைக்கப்பட்ட (மருதநாயகம்) கான்சாகிப் முதலில் ஆங்கிலப் படையில் பணியாற்றி சுயேச்சையான ஆளுவோனாகத் தன்னை மாற்றிக்கொண்டதால், அவர்களுக்குப் பகைவனாகிப் போனார். பகை முற்றிப் போராட்டமாக மாறியபோது, வீரத்துடன் போராடி இறுதியில் தோற்றுப்போனார். கைதியான அவருக்கு பொ.ஆ. (கி.பி.) 1764இல் விதிக்கப்பட்ட மரணதண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது தெரியுமா? தூக்கிலிடப்பட்டு இறந்துபோன பின் அவரது தலை துண்டிக்கப்பட்டது; கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டன. அவை வெவ்வேறு ஊர்களில் புதைக்கப்பட்டன. உறுப்புகள் துண்டிக்கப்பட்ட சடலத்தை மதுரையில் வைகையாற்றின் வடகரையில் புதைத்தனர். அந்த இடமே இன்றைய கோரிப்பாளையம். தலை திருச்சி நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டது. எஞ்சிய உடல் உறுப்புகள் தேனி நகருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை நகருக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. எவ்வளவு கண்ணியமான உடல் அடக்கம்!
பொ.ஆ.1799இல் கட்டபொம்மனுடன் நடந்த போரில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை ஆங்கிலேயர்கள் தகர்த்தனர். இதனையடுத்து ஒரு சிறிய படையுடன் வெளியேறிய கட்டபொம்மனை, எட்டயபுரம் ஜமீன்தாரின் படை கோவில்பட்டியில் எதிர்கொண்டது. இருதரப்புக்கும் கடுமையான இழப்பு நேரிட, கட்டபொம்மனும் வேறு சிலரும் தப்பிச்சென்றனர். ஆனால், கட்டபொம்மன் தரப்பினராக நால்வர் கைதிகளாயினர். இவர்களில் கட்டபொம்மனின் தானாதிபதியான சிவசுப்பிரமணியனும் அவரது தம்பி வீரபத்திரனும் அடக்கம்.
சில்லிட வைக்கும் தண்டனைகள்: இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நாகலாபுரம் என்ற ஊரில் பாஞ்சாலங்குறிச்சிப் போரை நடத்திய மேஜர் பானர்மேன் முகாமிட்டிருந்தார். அவர் தங்கியிருந்த கூடாரத்துக்குள் தானாதிபதியை அழைத்துச் சென்றவுடனேயே அவருக்குத் தூக்குத்தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்து கவர்னர் ஜெனரலுக்குப் பானர்மேன் எழுதிய கடிதத்தின் முழு வடிவத்தை கால்டுவெல் 1881இல் வெளியிட்ட ‘திருநெல்வேலி சரித்திரம்’ என்ற ஆங்கில நூலில் பதிவுசெய்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள மரணதண்டனை குறித்த பகுதியின் தமிழ் வடிவம்: “நாகலாபுரம் கிராமத்தின் மிக முக்கியமான பகுதியில் சுப்பிரமணிய பிள்ளையைத் தூக்கிலிட வேண்டுமென்றும், அவருடைய தலையை ஓர் ஈட்டியில் குத்தி பாஞ்சாலங்குறிச்சியில் வைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளேன்.”
அதே நேரம், இரண்டு பாஞ்சாலங்குறிச்சிப் போர்களிலும் (1799, 1801) இறந்துபோன ஆங்கிலேயர்களின் உடல்களை எடுத்துச்செல்ல பாஞ்சாலங்குறிச்சியார் அனுமதி வழங்கியிருந்ததையும் ஆங்கிலேயர்கள் பதிவுசெய்துள்ளனர். மேலும் முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் இறந்த ஆங்கிலப் படை வீரர்களின் கல்லறைகள் ஒட்டப்பிடாரத்திலும் இரண்டாவது போரில் இறந்த ஆங்கிலப் படையினரின் கல்லறைகள் பாஞ்சாலங்குறிச்சியிலும் ஆங்கில மொழிக் கல்வெட்டுகளுடன் உள்ளன.
இது போன்ற கொலைத் தண்டனை மருது சகோதரர்களுக்கும் அவர்களது நூற்றுக்கணக்கான படை வீரர்களுக்கும் 1801இல் விதிக்கப்பட்டது. திருப்பத்தூர் நகரில் பெரிய மருது, சின்ன மருது இருவரையும் தூக்கிலிட்டு, இரண்டு நாட்களுக்கு அவர்களது சடலங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. பின்னர், இருவரது சடலங்களிலிருந்து துண்டித்துத் தலைகளை மட்டும் காளையார்கோயிலில் அடக்கம்செய்தனர்.
நிலைநாட்டப்பட்ட ஆதிக்கம்: ஆதிக்க உணர்வை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று, தனக்கு மட்டுமே உரியதாகப் பண்பாட்டு அடையாளங்களை ஆக்கிக்கொண்டு அடித்தள மக்களுக்கு அதை மறுத்தல். மற்றொன்று, இழிவான பண்பாட்டு அடையாளங்களை அடித்தள மக்களுக்கு வழங்குதல். இன்றும்கூடச் சமூக விழிப்புணர்வு இல்லாத கிராமங்களில் தோளில் துண்டு அணியும் உரிமை மேட்டிமையோருக்கு உரியதாக உள்ளது. அடித்தள மக்கள் அதை இடுப்பில் கட்டிக்கொள்ளும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். மேற்கூறிய வரலாற்று நிகழ்வுகளில் அவலப் பாத்திரங்களாகக் காட்சியளிப்போர் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து மரணத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.
பரந்துபட்ட தமிழக நிலப்பரப்பில் பாளையக்காரர்களாகவும் குறுநில மன்னர்களாகவும் விளங்கியோரில் சிலர் தம் ஆக்கப்பணிகளால் மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்; பலர் தம் அடாவடிச் செயல்பாடுகளால் மக்களை அச்சுறுத்தி ஆட்சிபுரிந்தவர்கள். இவ்விரு பிரிவினரும் குடிமக்களைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். மற்றொருபுறம் அந்நியர்களான தம்மை எதிர்க்கும் துணிவு பரந்துபட்ட அளவில் குடிமக்களிடம் உருவாகிவிடக் கூடாது என்ற அச்ச உணர்வின் அடிப்படையிலேயே, மேற்கண்ட குரூரமான செயல்களை ஆங்கிலக் காலனியவாதிகள் மேற்கொண்டனர். பொது இடத்தில் பலரும் காணத் தூக்கிலிடுதல், சடலங்களையும் துண்டிக்கப்பட்ட தலைகளையும் பொதுவெளியில் காட்சிப்படுத்துதல் என்பனவெல்லாம் அடிப்படையில் வெகுமக்கள் திரளை அச்சுறுத்தும் நோக்கிலேயே நிகழ்ந்துள்ளன. இவற்றின் பின்னால் மறை பொருளாக விளங்கியது அவர்களது அச்ச உணர்வுதான் ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’. (ஆசாரம் = ஒழுக்கம்) என்றார் வள்ளுவர். (குறள்1075) - ஆ.சிவசுப்பிரமணியன், பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர்; தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in