

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான (22.09.22) ‘சிற்பி திட்டம் எழுப்பும் கேள்விகள்!’ கட்டுரை எழுப்பியிருந்த கேள்விகளுக்குப் பின்வரும் விளக்கங்களை அளிக்கிறேன். எந்தத் திட்டமாக இருந்தாலும் முதலில் தவழ்ந்து, பிறகு நடந்து, பின்பே ஓடத் தொடங்கும். அது சிற்பிக்கும் பொருந்தும். சிற்பி திட்டம் காவல் துறையின் முயற்சிகளில், மாணவர்களின் கடமை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு, அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பரிசோதனை முயற்சி. இது ஏற்படுத்தும் தாக்கத்தையும் விளைவுகளையும் கொண்டு, படிப்படியாக மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். போதைப் பழக்கத்தைச் சிறார்களிடம் தடுப்பதே சமூகம் சீர்படுவதற்கான வாய்ப்பு. அந்த அடிப்படையில், போதைக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் போதை ஒழிப்பு என்பது ஒரு வழி, அதுவே முழுமையான வழியல்ல. இது சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கு மாற்றுத் திட்டம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வாரத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே நடத்தப்படும்.
சிற்பி திட்டத்துக்கான கரு மட்டுமே காவல் ஆணையத்தில் உருவானது. பிறகு இதற்காகத் தனிக் குழு அமைக்கப்பட்டு தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையிலேயே திட்டம் வடிவமைக்கப்பட்டது. குழந்தைகளின் மனதையும், தேவையையும் நன்றாக அறிந்த, அவர்களை வழிநடத்துகிற ஆசிரியர் பெருமக்களே எங்கள் மனதில் தோன்றிய விதைக்கு நீர் வார்த்து எரு இட்டார்கள். சிறார்களைக் கையாள்வதற்காக நிலையான காவல் செயல்பாட்டு முறைகள் உள்ளன. அவை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. சிற்பி திட்டத்தைப் பொறுத்த வரை எங்கிருந்து சிறந்த ஆலோசனைகள் கிடைத்தாலும், அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். சிற்பி திட்டம் பிஞ்சு இதயங்களில் நஞ்சு விழாமல் இருக்க உருவான திட்டம். இதுவே சமுதாயத்தை முற்றிலுமாக மாற்றிவிடும் என்று நாங்கள் கருதவில்லை. இது மாணவர் வாழ்வில் ஏற்றப்படும் இன்னோர் அகல் விளக்கு மட்டுமே. - ஜோ.ஜார்ஜ் பெர்னாண்டஸ், காவல் உதவி ஆணையாளர், மக்கள் தொடர்புச் செய்தியாளர் (பொறுப்பு), சென்னை பெருநகரக் காவல்.