

திரைப் பாடல்களின் வழியே திராவிட இயக்கக் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்த்த முதல் நபராகவும், அதற்காகத் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவராகவும் உடுமலை நாராயணகவியை அறிகிறோம்.
திராவிடக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பெருக்கியதிலும், அதை வரவேற்புக்குரிய சங்கதியாக மாற்றியதிலும் பெரும் பங்கு உடுமலைக் கவிராயருடையது. ஏதோ ஒரு புள்ளியில், அவர் பெரியாரை வந்து சேர்ந்தவரில்லை. அவருடைய இயல்பே அதுவாக இருந்திருக்கிறது. கலையிலும் கல்வியிலும் முத்துச்சாமிக் கவிராயரைக் குருவாகக் கொண்ட நாராயண கவி, தமது அரசியல் ஞானாசிரியனாகக் கருதியது பெரியாரை மட்டுமே. அக்காலத்தில் இருந்துவந்த மூடநம்பிக்கைகளுக்கும் சமூக நீதிக்கு எதிரான செயல்களுக்கும் பெரும் சவாலாக விளங்கிய பெரியார், உடுமலையையும் பாரதிதாசனையும் தமது இயக்கத்தின் கலை இலக்கிய உந்துவிசைகளென்றே எண்ணியிருக்கிறார். எளிய தமிழில் நாராயணகவியும் இலக்கியத் தமிழில் பாரதிதாசனும் எழுதிய கவிதைகளைச் சமமாக மதித்தே, தமது ‘குடியரசு’ பத்திரிகையில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
‘கவி’யைச் சூடியவர்: குடும்பத்தை ஊரிலேயே விட்டுவிட்டு ஒற்றை ஆளாக அவர் தொடங்கிய பயணம், நாடக மேடைப் பாடலாசிரியர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, வாத்தியார், திரைப்படப் பாடலாசியர் எனப் பல முகங்களைக் கொண்டிருந்திருக்கிறார். சில ஆண்டுகள் எங்கே இருக்கிறோம் என்பதையே ஊருக்குத் தெரிவிக்காத அவர், பசியோடும் பட்டினியோடும் நகரத் தெருக்களில் பராரியாக அலைந்திருக்கிறார். இயல்பிலேயே அவருக்கிருந்த கலையார்வம், கடனிலிருந்து மட்டுமல்ல, வாழ்வின் துயர்மிகுந்த தருணங்களிலிருந்தும் அவரை மீட்டிருக்கிறது.
நாராயணசாமி, நாராயணகவியாக மாறியது சொற்ப நாள்களில் நடந்ததில்லை. பெரியாரின் கொள்கைகள்மீதும் அவர் முன்வைத்த திராவிட இயக்கக் கருத்தியல் சார்ந்தும் ஆழ்ந்த புரிதல் ஏற்பட்ட பிறகே நிகழ்ந்திருக்கிறது. பெரியாரின் சிந்தனைகள்மீது நாராயணகவி சார்புநிலை எடுப்பதற்கும் அவரது குரு முத்துச்சாமிக் கவிராயரே காரணமாக இருந்திருக்கிறார். பெரியாரியக் கருத்துக்கள் வேர்விடத் தொடங்கிய காலகட்டத்தில், அதன் சாதக, பாதகங்களை நாராயணகவிக்குச் சொல்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல, பதிமூன்று ஆண்டுக் காலம் உடுமலை நாராயணகவியைக் கண்காணித்து, அவருடைய நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்திருக்கிறார்.
கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஊரில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களிலும் கூத்துகளிலும் நடித்துவந்த நாராயணகவியை, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முத்துசாமிக் கவிராயரே கூட்டிச்சென்றிருக்கிறார். அவர் மூலமே சங்கரதாஸ் சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், மாயூரம் வேதநாயகம், உ.வே.சாமிநாதர், முத்தய்யா பாகவதர், சந்தானகிருஷ்ணன் ஆகியோரைப் பற்றியெல்லாம் நாராயணகவிக்குத் தெரிந்திருக்கின்றன. பெயருக்குப் பின்னால், சாதியை இட்டுக்கொள்வது வழக்கமாயிருந்த காலத்தில், சாதிக்குப் பதிலாக கவி என்று பெயருக்குப் பின்னால் இவர் இணைத்திருக்கிறார்.
| உடுமலையின் வரிகள் ‘தேதி ஒண்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி இருபத்தொண்ணிலே திண்டாட்டம் திண்டாட்டம்...’ (‘முதல் தேதி’ படத்தில்...) .. ‘பிணத்தைக் கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப் பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே...’ ... ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...’ (‘ரத்தக்கண்ணீர்’ படத்தில்...) |
தொழில் பாடல்கள்: ‘ஸ்ரீகிருஷ்ண லீலா’ திரைப்படத்தில் 64 சிறிதும் பெரிதுமான பாடல்களை இவரும் பாபநாசம் சிவனும் பகிர்ந்து எழுதியிருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு வசனங்களையும் நாராயணகவி எழுதியிருக்கிறார். ‘பவளக்கொடி’, ‘சந்திரமோஹனா அல்லது சமூகத் தொண்டு’, ‘சகுந்தலை’, ‘பாரிஜாதம்’, ‘மாமியார்’, ‘பெண்’ ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்து எழுதியிருக்கின்றனர்.
தொழில் பாடல்கள் என்னும் வகையில், “மீன் விற்பவர் (சகுந்தலை), குறிசொல்பவர் (ராஜகுமாரி), பேரீச்சம் பழம் விற்பவர் (சம்சார நௌகா), விளக்கு விற்பவர் (மாயா ஜோதி), மிட்டாய் விற்பவர் (நீதிபதி), குல்லா விற்பவர் (செல்லப்பிள்ளை), பால் விற்பவர் (கிருஷ்ண லீலா), நாட்டுமருந்து விற்பவர் (கற்புக்கரசி), பூ விற்பவர் (வனசுந்தரி), சீப்பு சிமிக்கி விற்பவர் (ராணி), கைத்தறித் துணி விற்பவர் (புதுமைப் பெண்), பறவைகள் விற்பவர் (ராஜா தேசிங்கு)” என அவர் பங்காற்றிய படங்களிலெல்லாம் ஏழை எளிய தொழிலாளர்களின் ஏக்கங்களையும் நம்பிக்கைகளையும் பாடல்களாக ஆக்கித் தந்திருக்கிறார். காதல் பாடல்களைப் போல தொழில் பாடல்களை எழுதுவது எளிதல்ல. ஏனெனில், அந்தந்தத் துறை சார்ந்த பயிற்சிகளோ தெளிவோ இல்லாமல் எழுத முடியாது.
ஒரு பீடா விற்பவரின் மனநிலையில் இருந்துகொண்டு பீட்சா விற்பவரை யோசிக்க முடியுமா என்ன? அந்தந்தத் தொழிலுக்கென்று சில பிரத்யேக வார்த்தைகள் உள்ளன. வளையல்காரராக பல படங்களில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வந்திருப்பதால் அதை மட்டுமே தொழில் பாடலாக நாம் நினைத்திருக்கிறோம். ஆனால், உடுமலையாரின் பாடல்கள் மொத்தத் தமிழ் நிலப்பரப்பின் வரையறைகளையும் கொண்டிருக்கின்றன. திணை அடிப்படைகளையும் வர்க்க முரண்பாடுகளையும் அப்பாடல்களில் வெளிப்படுத்துகின்றன. வர்க்கபேதத்தையும் வருணபேதத்தையும் ஒரே மாதிரியாக உடுமலை அணுகியிருக்கிறார். திராவிட இயக்கச் சார்புடைய ஒருவர், இயல்பிலேயே இடதுசாரியாகவும் இருக்கக்கூடும் என்பதை அவருடைய தொழில் பாடல்கள் நிரூபிக்கின்றன. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் அவர்கள் திரையில் வாயசைத்த முதல் பாடலை எழுதிய பெருமையைக் கவிராயர் பெற்றிருக்கிறார்.
அரவணைத்த கவி: தனக்குப் பின்னே வந்த கவிஞர்களை அரவணைத்து, அவர்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியவராகவும் கவிராயர்இருந்ததை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருக்கிறேன். பாரதிதாசனின் சிபாரிசுக் கடிதத்துடன் பாட்டெழுத வந்திருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தம் வீட்டிலேயே தங்கச்சொல்லி, ‘உரிய காலம் வரும் போது உனக்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்’ என்று ஊக்கமளித்தவராக அவரைப் பார்க்கலாம். அ.மருதகாசி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஏ.எல்.நாராயணன், சமத்தூர் கே.ஆர்.செல்லமுத்து ஆகியோர் கவிராயரின் உதவியாளர்களாக இருந்தவர்களே. உண்மையில், அவர்கள் அவருக்கு உதவியாளர்களாக இருந்தார்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், அவர்கள் அத்தனை பேரின் வாழ்விலும் வெளிச்சம் விழ கவிராயர் உதவியிருக்கிறார் என்பதைப் பல சம்பவங்கள் காட்டுகின்றன.
‘தேவதாஸ்’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவரும் இசையமைப்பாளருமான சி.ஆர். சுப்பராமன் மரணமடைந்ததை அடுத்து, ஏனைய பாடல்களை இசையமைக்கும் பொறுப்பை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
அவரும் உடுமலையாரின் பாடல்களுக்கு மெட்டமைத்து, கண்டசாலாவைப் பின்னணி பாடவைத்திருக்கிறார். ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ என்று ஆரம்பிக்கும் பாடல் அது. கண்டசாலாவோ தமிழையும் தெலுங்குபோல உச்சரித்து, ‘உல்கே மாயம், வால்வே மாயம்’ என்று பாடியிருக்கிறார். அதைக் கேட்ட உடுமலையார், விஸ்வநாதனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைகொடுத்து “தமிழை ஏண்டா இப்படிக் கொலை செய்கிறீர்கள்” என்றிருக்கிறார். இப்போதும் பாடுகிறவர்களில் ஒருசிலர் அப்படித்தான் பாடுகிறார்கள். ஆனால், ஓங்கி அறைய உடுமலையோ அந்த அறையை வாங்கிக்கொள்ள விஸ்வநாதனோ இல்லையென்பதுதான் வருத்தம். இத்தனைக்கும் உடுமலை நாராயணகவியின் தாய்மொழி தமிழல்ல, தெலுங்கு.
‘இழிகுலம் என்றே இனத்தை வெறுத்தது அந்தக் காலம் / மக்களை / இணைத்து அணைக்க முயற்சி செய்வது இந்தக் காலம்’ என்று ‘நல்லதம்பி’ திரைப்படத்தில் எழுதியிருக்கிறார். ‘அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம் / அம்புவியின் மீது நான் அணிபெறும் ஓரங்கம்’ என்று ‘தெய்வப் பிறவி’ திரைப்படத்தில் உடுமலையார் எழுதிய பாடலை சிதம்பரம் ஜெயராமன் பாடியிருக்கிறார். வார்த்தையும் இசையும் அதற்கேற்ற குரலுமாக எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் அப்பாடல் நிலைத்திருக்கிறது. இப்படிக் கவிராயரின் பாடல்களை ஒவ்வொன்றாக எடுத்து, அப்பாடல் உருவான கதையையும் அப்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
திரைப் பாடலாசிரியர்களில் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், அவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தின் வெற்றியையும் பார்த்திருக்கிறார். பெரியாருக்குப் பிறகு அண்ணாவும், அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியும் அவருக்குரிய இடத்தை வழங்கத் தவறவில்லை. இன்றைய காலகட்டத்தில், உடுமலை நாராயணகவியின் திரைப் பாடல்கள் பேசாத் துணையாக, திராவிட இயக்கத்தின் போராட்டங்களை அதிர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றன.
| உடுமலை நாராயணகவி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை |
- யுகபாரதி, கவிஞர், திரைப் பாடலாசிரியர் | தொடர்புக்கு: yugabhaarathi@gmail.co.in