கு.அழகிரிசாமியின் ஆவியுரு!

கு.அழகிரிசாமியின் ஆவியுரு!
Updated on
3 min read

‘திருநெல்வேலி ஜில்லாவில், கோவில்பட்டிக்கும் கயத்தாற்றுக்கும் நடுவே, டிரங்க் ரோட்டுக்குக் கிழக்கே இருக்கும் இடைசெவல் என்ற கிராமத்தின் 300 வீடுகளில் ஒன்றில்’ 1923 செப்டம்பர் 23 அன்று கு.அழகிரிசாமி பிறந்தார். ‘புத்தகமும் நோட்டும் வாங்கிக்கொடுக்கச் சக்தி இல்லாமல் பெற்றோர்கள் அவஸ்தைப்பட்ட’ நிலையில் [ . . ] ‘சர்வீஸ் கமிஷன் பரீட்சையில் தேறி சப்ரிஜிஸ்தரார் ஆபிஸ் குமாஸ்தா’ ஆனார் அழகிரிசாமி.

அதற்கு முன்னதாக, 1941, 42இல் தமிழ் இலக்கியப் பத்திரிகைகளை அழகிரிசாமி படிக்க ஆரம்பித்திருந்தார். வேலையில்லாமல் இரண்டு ஆண்டுகள் ஓய்வாக இருந்தபோது, நண்பர்களின் ஊர்களுக்கு நடந்தேசென்று புத்தகங்களை இரவல் வாங்கிக்கொண்டுவந்து படித்திருக்கிறார். ‘இடைவிடாமல் படித்ததன் பலனாக, இலக்கியத்துடன் வெட்டிக்கொண்டு விடுபட முடியாத, அழுத்தமான, ஓர் உறவு’ அழகிரிசாமிக்கு ஏற்பட்டுவிடவே, ஒரு கதையை எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறார். அது பிரசுரமாகாததால், ‘சென்னையில் உள்ள அறிவாளிகள் எங்கே, குக்கிராமத்தில் வசிக்கும் நாம் எங்கே?’ என்று ஏமாற்றம் அடைகிறார்.

இந்த நிகழ்வே சென்னையைப் பற்றிய வேட்கையை அழகிரிசாமியின் மனதில் தோற்றுவித்திருக்கக் கூடும் என்று கருத இடமளிக்கிறது. ‘மேலும் மேலும் படித்து எழுத்தாளனுக்கு உரிய தகுதியைத் தேடிக்கொள்ள முயன்ற’ அழகிரிசாமி, ஒருகட்டத்தில் ‘இலக்கியத்தில் எந்தத் துறையிலும் இருந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை’யைப் பெற்றுவிடுகிறார். இரண்டாவதாக எழுதிய ஒரு கதை சென்னையின் மாதப் பத்திரிகை ஒன்றில் வெளியாக, ‘இலக்கிய உலகில் பெரும் பதவியே கிட்டிவிட்டதுபோல’ அழகிரிசாமி உணர்ந்திருக்கிறார். தொடர்ந்து அழகிரிசாமியின் கதைகள் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவந்தன. ‘இலக்கிய உலகில் லட்சிய வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, ஆகாயக் கோட்டைகள் கட்டிக்கொண்டிருந்த’போதுதான் சப்ரிஜிஸ்தரார் வேலை அவரை வந்தடைந்தது. அரசாங்க வேலைக்குச் சென்றாலும், சென்னைக்குப் போய்விட வேண்டுமென்கிற ‘புத்தி’ அழகிரிசாமிக்கு உண்டாகிவிடுகிறது. தென்காசியில் வேலைசெய்தபோது, சென்னையிலிருந்து வந்த ஒரு கடிதம் அவரைச் சென்னைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. ‘தன் ஆயுளில் இந்த ஒரு ‘பாக்கியம்’ கிட்டும் என்று அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வரையில்கூட’ நினைத்திருக்காத அழகிரிசாமி, 1943 டிசம்பரில் முதன்முதலாகச் சென்னைக்கு வந்தார். ஆனால், அவர் கற்பனையில் கண்டதுபோல் சென்னை இருக்கவில்லை. சென்னையிலிருந்து கி.ரா.வுக்கு அழகிரிசாமி எழுதிய, 31.12.43 தேதியிட்ட, முதல் கடிதம் இப்படிப் போகிறது: “எனக்கு உங்களை எல்லாம் பிரிந்து வந்தது எப்படியோ இருக்கிறது. திடீர் திடீர் என்று ஊர் நினைப்பு வந்து சோர்ந்துபோகிறது. இதுபோல் பிரிவுத்துயரில் நான் கஷ்டப்பட்டதே கிடையாது. என்னதான் செய்வது? தெற்கு முகமாய் பார்த்து ‘ஏ திருநெல்வேலி ஜில்லாவே! நண்பர்களே!’ என்று அலறட்டுமா என்றிருக்கிறது.” இலக்கிய உலகம் பற்றி அவருக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளிக்க, ‘அடி ஆத்தே!’ என்று 26 நாட்களில் சென்னையைவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.

ஊருக்குத் திரும்பி மீண்டும் அரசாங்கப் பணியில் சேர்ந்தவருக்கு, ‘சென்னையைவிட்டு வந்தது பைத்தியக்காரத்தனம்’ என்று தோன்றவே, ‘பட்டினி கிடந்தாவது சென்னையில் இலக்கியச் சேவை’ ஆற்றும் நோக்கில் மீண்டும் சென்னைக்கே வந்துவிடுகிறார். 1952இல் மலேயாவுக்குப் போகுமுன் எட்டு ஆண்டுகளும், போய்வந்து 12 ஆண்டுகளுமாகச் சேர்த்து மொத்தம் 20 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார்.

“வெறும் பொழுதுபோக்குக்காகவோ, வாசகர்களைக் குறுக்கு வழியில் பிரமிக்கச் செய்து அபாரமான மதிப்பைச் சம்பாதிப்பதற்காகவோ, கடைசியாக நம்மால் முடியாத காரியமான பணச் சம்பாத்தியத்துக்காகவோ கதைகள் எழுத நான் எப்போதும் முயன்றது கிடையாது,” என்று ‘தவப்பயன்’ (தமிழ்ப் புத்தகாலயம்; 1956) தொகுப்பின் முன்னுரையில் எழுதிய அழகிரிசாமி, தன் 47 ஆண்டுகால வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த சென்னையிலிருந்துதான் இலக்கியச் சாதனைகள் புரிந்தார். சென்னையின் அந்தக் கால வாழ்க்கைமுறையையும், ‘தத்துவ’த்தையும் பேசும் ‘காற்று’, ‘பேதைமை’, ‘இரு சகோதரர்கள்’ போன்ற கதைகளும் இதில் அடக்கம்.

சென்னைக்கு வந்த புதிதில் பழைய புத்தகக் கடைகளைத் தவிர திருவல்லிக்கேணி, கடற்கரை உள்பட எதுவுமே அழகிரிசாமியின் மனதைக் கவர்ந்திருக்கவில்லை. சென்னை வாழ்க்கை ‘அவ்வளவாகத் திருப்தியளிக்கக் கூடியதல்ல’ என்றே எப்போதும் உணர்ந்திருக்கிறார். அழகிரிசாமி சென்னையில் வாழ்ந்த இடங்களை கி.ரா., சுந்தர ராமசாமி முதலியோருக்கு எழுதிய அழகிரிசாமியின் கடிதங்கள் வழியும், வேறு சில நறுக்குகள் மூலமும் பழ.அதியமான் வரைபடமாக்குகிறார்: “முதலில் சௌகார்பேட்டையிலும் அடுத்து சூளைமேடு சௌராஷ்டிரா நகரிலும் தொடங்கியது அவரது சென்னை வாழ்க்கை. மலேயா போகுமுன் தியாகராய நகரிலும் ராயப்பேட்டையிலுமாக மூன்று இடங்களில் வசித்துள்ளார். 1957 நவம்பரில் நாடு திரும்பியதும் மயிலாப்பூரில் முதலில் குடியேறிய அழகிரிசாமி, மந்தைவெளிக்கு வீட்டை மாற்றினார். பின் கடைசியாக 20, செங்கல்வராய முதலி தெரு, திருவல்லிக்கேணிக்கு இடம்பெயர்ந்தார். அங்கேயே தன் இறுதிவரை வாழ்ந்தார்.”

அழகிரிசாமி வாழ்ந்த கடைசி வீட்டைத் தேடி செங்கல்வராயன் தெருவுக்குப் போனேன். என் அவநம்பிக்கையைத் தவிடுபொடியாக்கி, என்னைத் திகைக்கச் செய்த எதிர்வினையை நான் விசாரித்த முதல் நபரிடமே எதிர்கொண்டேன்: ‘அழகிரிசாமியத் தெரியுமே’ என்று வெகு இயல்பாகச் சொன்ன அந்த முதியவரின் பெயர் பாபு. நான் நம்ப முடியாமல், அழகிரிசாமியின் புகைப்படத்தைக் காட்ட, ‘‘அட... இவருதாம்ப்பா... அந்தாருக்கு பாரு அங்கிருந்த எங்க மாமா வீட்லதான் அவர் குடியிருந்தாரு,” என்று அவர் அடுக்கியத் தகவல்களால் நான் நிதானத்துக்குத் திரும்ப சில நொடிகள் பிடித்தன.

“அது எங்க மாமா வீடு, அங்கதான் அவர் குடியிருந்தார். இந்தத் தெருவுல அவர் வீட்டுக்குத்தான் முதல்ல டெலிபோன் வந்தது. அதுக்கு இணைப்புக் கொடுக்க நடப்பட்ட கம்பம்கூட இன்னும் நிக்கிது. எப்போ சாப்பிடுவார், தூங்குவார்னே தெரியாது. எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பார். யாரோடும் அதிகம் பேசமாட்டார். அவரைப் பார்க்க டி.கே.ஷண்முகம், சகஸ்ரநாமம் எல்லாம் வந்தது எனக்கு ஞாபகம் இருக்கு” என்றவர் அவர் இறந்து 52 ஆண்டுகளில் அவரைத் தேடி இப்படி ஒருவர் வந்தது இதுவே முதல்முறை என்றார்.

தங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து பசியால் வாடி நவீனத் தமிழிலக்கியம் வளர்த்த முன்னோடிகள், சென்னையில் வாழ்ந்த இடங்கள் முற்றிலும் உருமாறியிருப்பதைப் போலவே அழகிரிசாமி வாழ்ந்த செங்கல்வராயன் தெரு வீடும் அவர் வாழ்ந்தத் தடம் ஏதுமின்றி அடுக்ககமாகிவிட்டிருக்கிறது. தமிழின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவரான கு.அழகிரிசாமி, தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்த சென்னையில் அவர் வாழ்ந்த சுவடுகூட இல்லை என்பது தலைநகருக்கும் தமிழர்களுக்கும் தலைகுனிவு, இல்லையா?

திருவல்லிக்கேணி பற்றிய கட்டுரையில் அழகிரிசாமியின் மரணம் குறித்த அசோகமித்திரனின் இந்தக் குறிப்பு என்னைக் கலைத்துப்போடுகிறது: “மீண்டும் மீண்டும் அழகிரிசாமி நினைவுதான் வருகிறது. அவரும் திருவல்லிக்கேணியில்தான் இறந்தார். அவர் ஆவியுரு கொண்டிருந்தால் அங்கே செங்கல்வராயன் தெருவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.”

-சு.அருண் பிரசாத்

தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in