விண்மீன் பிறக்கும் முறை: புதிய வெளிச்சம்!

விண்மீன் பிறக்கும் முறை: புதிய வெளிச்சம்!
Updated on
2 min read

ஒராயன் நெபுலா எனும் விண்வெளிக் கருப்பையை அகச்சிவப்புக் கதிர் படக்கருவி கொண்டு, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் எடுத்து விண்மீன்கள் பிறப்பெடுக்கும் நிகழ்வை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. விண்மீன்கள் எப்படிப் பிறப்பெடுக்கின்றன என்பது குறித்த மர்மத்தைப் புரிந்துகொள்ள இவை உதவும் என்கிறார்கள் வானியலாளர்கள். இவ்வளவு காலம் நிலவிவந்த சில மர்மங்கள் இதன் காரணமாக விலகலாம்.

பூமிக்குச் சுமார் 1,350 ஒளியாண்டு தொலைவில் எம்42 எனப்படும் ஒராயன் நெபுலா எனும் பெரும் விண்மேகம் உள்ளது. சூரியனைப் போல இரண்டாயிரம் மடங்கு நிறை கொண்ட இந்த மேகத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு ஒளி செல்வதற்கு 24 ஆண்டுகள் எடுக்கும். அதாவது 24 ஒளியாண்டு அகலம் உடையது இந்த மேகம்.

விண்மீன்களுக்கு இடையே உண்மையில் வெற்றிடம் இல்லை. ஆறுமுகம் கொண்ட தாயக்கட்டை அளவு கொண்ட ஒரு கனசதுர சென்டிமீட்டர் வெளியில் (Space) ஓர் அணு என்ற வீதத்தில் பொருளின் அடர்த்தி இருக்கும். ஒராயன் நெபுலாவில் சராசரியாகக் கனசதுர சென்டிமீட்டருக்கு ஆயிரம் அணுக்கள் என்ற விகிதத்தில் உள்ளது. வெறும் ஆயிரம் அணுக்கள் என்ற அடர்த்தி (Density) எப்படிச் சூரியன் போன்ற விண்மீனில் கனசதுர சென்டிமீட்டருக்கு நூறு செப்டில்லியன் என்ற அளவுக்கு அடர்த்தி கொண்ட பொருளாகத் திரட்சிபெற்றது என்பது வானியலில் ஒரு புதிர்தான்.

கருப்பையில் உருவெடுக்கும் மகவைக் கண்களால் காண முடியாது என்றாலும், ஸ்கேன் கருவி மூலம் காண முடியும் அல்லவா. அதுபோல தூசு தும்பு நிறைந்திருக்கும் விண்மேகப் பகுதியில் உருவாகும் இளம் விண்மீன்களை வெறும் தொலைநோக்கி கொண்டு கண்டுவிட முடியாது. ஆனால், உருவெடுக்கும் விண்மீன் கரு உமிழும் அகச்சிவப்புக் கதிர்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் உள்ள படக்கருவி இனம் காணும். கடந்த செப்டம்பர் 11 அன்று ஒராயன் நெபுலாவில் விண்மீன்கள் உருவாகும் பகுதியை இதன் அகச்சிவப்புப் படக்கருவி படம்பிடித்ததன் மூலம் விண்மீன் பிறப்பின் நான்கு கட்டத்தை ஆய்வாளர்கள் இனம் கண்டுள்ளனர்.

முதற் கட்டம்: இழை போன்ற வடிவில் கூடுதல் அடர்த்தி கொண்ட பகுதி உருவாதல். ஏற்கெனவே உருவான நான்கு விண்மீன்கள் உமிழும் துகள்கள் சூறைக்காற்றுபோலப் பரவி, ஒராயன் மேகத்தின்மீது மோதும்போது அதிர்வலைகளின் காரணமாக அங்கும் இங்கும் இழைகள் போன்ற திரள் அமைப்புகள் உருவாகின்றன. இதனைப் படத்தின் பகுதி 1இல் காணலாம். தூசு படிந்த மேசையின் மீது ஊதினால் தொகுப்பாகத் தூசு திரள்வதுபோல இந்த இழையில் கன சென்டிமீட்டருக்குப் பத்து லட்சம் அணுக்கள் என்கிற அளவுக்குப் பொருள்களின் அடர்த்தி இருக்கும். ஓரிடத்தில் கூடுதல் பொருள்கள் நெருக்கமாக இருந்தால், அவற்றின் மொத்த ஈர்ப்புவிசையின் அளவு கூடும். எனவே, அவை மேலும்மேலும் அண்டை அயலில் உள்ளப் பொருள்களைத் தம்முள் இழுக்கும். இதுவே கருவுறுதல் கட்டம்.

இரண்டாம் கட்டம்: விண்மீனும் அதனைச் சுற்றி கோள்கள் திரளும் பகுதியும் உருவாதல். இழை போன்ற பகுதியில் ஒப்பீட்டு அளவில் கூடுதல் அடர்த்தி கொண்ட பகுதி அருகில் உள்ளப் பொருள்களைக் கவர்ந்திழுத்து, மேலும் அடர்த்தி உள்ளப் பகுதியாகத் திரளும். பள்ளம் நோக்கி பாய்ந்துசெல்லும் நீரைப் போலக் கூடுதல் ஈர்ப்புவிசை கொண்ட இந்தப் பகுதியை நோக்கி அருகில் உள்ள பொருள்கள் சென்று, இந்த மேகத்துண்டு சூரியக் குடும்பம் அளவுக்குப் பெரிதாக உருவாகும். இந்த மேகத்துண்டில் கனசதுர சென்டிமீட்டருக்குச் சுமார் டிரில்லியன் அணுக்கள் என்ற அளவுக்குத் திரட்சி உருவாகும். இதுபோன்ற மேகத்துண்டுகளில்தான் மையத்தில் விண்மீனும் அதனைச் சுற்றி கோள்களும் திரளுகின்றன.

மூன்றாம் கட்டம்: விண்மீன் கரு உருவாதல். மேகத்துண்டின் மையத்தில் ஈர்ப்புவிசையின் காரணமாக மேலும்மேலும் அடர்த்தி கூடும். ஒரு கட்டத்தில் கனசதுர சென்டிமீட்டருக்குச் சுமார் செப்டில்லியன் அணுக்கள் என்ற அளவுக்கு அடர்த்தி கூடும்போது, விண்மீன் கரு வடிவம் பெறுகிறது. விண்மீன் கருவைச் சுற்றி பந்துபோல மேகத்துண்டு படர்ந்திருக்கும். HST-10 எனும் இந்த விண்மீன் கரு வளர்ந்துவருவதை இங்கே நாம் காணலாம்.

நான்காம் கட்டம்: குழந்தை விண்மீன் பிரசவித்தல். மேலும் மேலும் அடர்த்தி கூடிக்கூடி கனசதுர சென்டிமீட்டருக்குச் செப்டில்லியன் அணுக்கள் என்ற அளவுக்கு அடர்த்தி கூடும்போது விண்மீன் கருவின் வடிவம் பெருகுகிறது. அந்த விண்மீனின் மையத்தில் அழுத்தம் - வெப்பத்தின் காரணமாக ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து ஹீலியம் உருவாகும் அணுக்கரு பிணைவு ஏற்படும். விண்மீன் தானே ஒளிரத் தொடங்கும். ஈர்ப்புவிசையால் மேலும்மேலும் மையத்தில் அடர்த்தி கூடி, இறுதியில் கனசதுர சென்டிமீட்டருக்கு நூறு செப்டில்லியன் என்கிற அளவுக்கு அடர்த்தி கூடி குழந்தை விண்மீன் குடும்பம் தன் கோள்களுடன் உருவாகும். கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வருவதுபோல, பிறந்த விண்மீன் வீசும் கதிரில் கூடுபோல அதனைச் சுற்றியிருந்த தூசு தும்புகள் அடித்து வெளியேற்றப்பட்டு, விண்மீன் வெளிப்படும். இங்கே ஒராயன் நெபுலாவில் பிரசவமாகிய ஒராயன் A தீட்டா2 எனும் சமீபத்தில் பிரசவமடைந்த குழந்தை விண்மீனைக் காணலாம்.

பதினெட்டு நாடுகளைச் சார்ந்த நூறு வானவியலாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் HST-10 விண்மீன்போல சுமார் நூற்றியெண்பது விண்மீன்கள் ஒராயன் நெபுலாவில் உருவாகிக்கொண்டிருப்பதை இனம்கண்டுள்ளனர்.

- த.வி.வெங்கடேஸ்வரன், விக்யான் பிரச்சார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in