Published : 22 Sep 2022 08:35 AM
Last Updated : 22 Sep 2022 08:35 AM
பொருளியல் அமைப்பானது பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுவதுபோல் முதலீடு, உற்பத்தி, விநியோகம் போன்ற நடவடிக்கைகளுடன் நின்றுவிடுவதில்லை. அது அரசியல், சமூகம் போன்ற அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவரை அரசியல்ரீதியாக உயர்த்துவதிலும் தாழ்த்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிற பொருளாதாரமே, எந்தக் கட்சி ஆட்சியமைக்க வேண்டும், யார் அதன் தலைவர் என்பதையும் முடிவுசெய்கிறது. இதுபோலவே சமூகத்தில் யாரை உயர்த்துவது, யாரைத் தாழ்த்துவது என்பதையும் முடிவுசெய்கிறது.
பொருளில்லார்க்கு அரசியலும் இல்லை, சமூகமும் இல்லை என்றதொரு சூழல் உருவானதற்குப் பெரும் முதலீட்டை அடிப்படையாகவும், பெருந்தொழில்களை மையமாகவும், நவீன தொழில்நுட்பச் சாதனங்களை அச்சாகவும் கொண்ட மையமாக்கப்பட்ட பேரியல்பொருளியலே காரணம்.
நுகர்வுக்கு வெளியே: பெருந்தொழில்களை மையமாகக் கொண்ட பேரியல்பொருளியல் அமைப்பின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய முதலீடுகள் இடும் பணக்காரர்களும், நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாளும் மெத்தப் படித்தவர்களும், சந்தைப்படுத்துதலில் நுணுக்கம்பெற்ற நிபுணர்களுமே பங்கேற்க முடியும். மாறாக, முதலீடுகள் செய்ய இயலாத, மெத்தப் படிக்காத, தொழில்நுட்ப ஞானம் பெறாத, பெருவணிக நுணுக்கம் இல்லாத சாமானிய மக்கள் இதுபோன்ற மையப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் பங்குகொள்ள முடியாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். உயிர் வாழ்வதற்காக அவர்கள் பங்கெடுக்கும் ஒரேயொரு நடவடிக்கை உழைப்பைக் கொடுப்பதே. இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் முதலீட்டாளர்கள் குறிப்பாக உழைப்பாளிகள் மிதமிஞ்சி இருக்கும் இடங்களில், குறைந்த கூலியைக் கொடுத்துக் கூடுதலான உழைப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
குறைந்த வருமானம்பெறும் உழைப்பாளிகளின் வாங்கும்சக்தி சன்னமாகக் குறைந்து, நுகர்வுக்கான நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். பணத்தை மையமாகக் கொண்ட பொருளியல் முறை பெரும்பான்மையினரான இவர்களை ஓரமாக ஒதுக்கிவிடுகிறது என்றும் கொள்ளலாம். ஆக, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், பெரும்பான்மையான சாமானியர் மேலும்மேலும் ஏழைகளாகவும் மாறுகின்றனர்; இது மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம் இருக்கிற, இல்லாத இரண்டு சமூகங்களை உருவாக்கிவிடுகிறது. இருக்கின்ற சமுதாயம் மேல் தளத்திலும் இல்லாத சமூகம் கீழ்த் தளத்திலும் நிறுத்தப்பட்டு, பல்வேறு விதமான சமூகப் பிணக்குகளுக்கும் அரசியல் மோதல்களுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
சாமானிய மக்களை ஒரு ‘கூலியாக’ச் சுருக்கிவிடுவது கொடுமையானது. அவர்களுக்கு உழைக்க மட்டுமல்லாது, மற்றவர்கள்போல் வாழவும் உரிமை இருக்கிறது. அவர்கள் அப்படி வாழ வேண்டுமென்றால், அவர்களுடைய கைகளிலும் வாங்கும் சக்தி இருக்க வேண்டியிருக்கிறது. வருமானம் போதிய அளவு இருந்தால்தான் அது சாத்தியம். அதற்கு அவர்கள் முதலீடுகள், விற்பனை போன்ற பிற பொருளியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவிடாமல் அவர்களை முடக்கப்பட்டவர்களாகப் பேரியல்பொருளியல் அமைப்பு ஆக்கியிருக்கிறது. இது ஒரு மோசமான வன்முறை.
மனிதாபிமானப் பொருளியல்: சாமானிய மக்களையும் முதலீடு, விநியோகம், விற்பனையில் பங்கெடுக்க வைக்கிற மனிதாபிமானப் பொருளியல் அமைப்பு இன்றைய காலத்தில் அவசியமாக இருக்கிறது. சிறு முதலீடுகள் மட்டுமே தேவைப்படுகின்ற சாமானிய மனிதராலும் கையாளக்கூடிய தொழில்நுட்பம், சிறு தொழில்களால் ஆன, யாராலும் அணுகக்கூடிய சந்தை என்கிற பொருளியல் அமைப்பைச் சாத்தியப்படுத்த முடியும். இப்படிப் பரவலாக்கப்பட்ட பொருளியல் முறையால் நாட்டின் செல்வம் பகிர்ந்தளிக்கப்படும். அதனால், சாமானிய மனிதருக்கும் இடம்கொடுக்கும் பரவலாக்கப்பட்ட பொருளியல் அமைப்பை அமைதிப் பொருளியல் அல்லது அகிம்சைப் பொருளியல் என்று அழைக்கலாம்.
பணத்தை மையமாகக் கொண்ட பேரியல்பொருளியல் அமைப்பில் ஒருபுறம் சாமானிய மக்கள் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள். இது சக மனிதர்களுடனான மோதலுக்கு வழிவகுக்கிறது. அதிக லாபம்பெறும் பேராசை காரணமாக உற்பத்தியைப் பல மடங்கு பெருக்கும் நோக்கில் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகச் சுரண்டும் போக்கும் காணப்படுகிறது. இயற்கையுடனான மோதலுக்கு வழிவகுக்கும் இப்போக்கு, குறிப்பிட்ட சிலர் மட்டும் வசதியாகவும், வளமாகவும் வாழ்வதற்காகப் பெரும்பகுதி சாமானிய மக்களையும், இயற்கை வளங்களையும் பலிகொடுத்துக் கொண்டிருப்பது மனிதகுலத்தை சர்வநாசத்துக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கைதான்.
எது காந்தியம்?: அரசியல், பொருளியல், சமூகவியல் ஆகிய மூன்றையும் காந்தி தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. அறிவியல் என்ற நூலின் உதவியால் அரசியல், பொருளியல், சமூகவியலை ஒரு மாலையாகக் கட்டுவதே காந்தியம். ஒருவரை ஒருவர் நசுக்கி நாசப்படுத்தாமல், உயர்த்திவிடும் நடவடிக்கையே காந்தியத்தின் அறம். சக மனிதரைச் சரிக்குச் சமமாக இருத்தி உரையாடவும் உறவுகொள்ளவும் வைக்கும் பண்பாக உண்மையும் அகிம்சையும் இருப்பதால், இவ்விரண்டையும் தலையாய கொள்கைகளாக காந்தி கொண்டிருந்தார். அதனால்தான் சக மனிதனை ஒதுக்கி ஓரங்கட்டும் மையப்படுத்தப்பட்ட பேரியல்பொருளியலை ஒதுக்கி, சிறுதொழில்களை மையமாகக் கொண்ட பரவலாக்கப்பட்ட பொருளியலை அவர் முன்னெடுத்தார்; “எளியவர்களை ஏமாற்றி வலியவர்கள் செல்வத்தைக் குவிக்க வழிகாட்டும் பொருளியல் பொய்யானதாகவும் இழிவான அறிவியலாகவும் இருக்கும். அதனால் அழிவே ஏற்படும்” என்கிறார் காந்தி.
காந்தியடிகள் முன்வைக்கும் அகிம்சைப் பொருளியலே நிலையானது என்ற கோட்பாட்டை ஜே.சி.குமரப்பா விளக்குகிறார். பணத்தை மையமாகக் கொண்ட பெருந்தொழில் பொருளியல் சாமானிய மனிதர்களை அழித்தொழிக்கிறது என்பதை நிரூபித்து, அதனைக் ‘கொலைப் பொருளியல்’ என்று கூறுகிறார். காந்தி, குமரப்பா இருவரும் பரவலாக்கப்பட்ட அண்மைப் பொருளாதாரத்தையே முன்னிறுத்தினார்கள்.
அகிம்சைச் சந்தை: சர்வநாசத்திலிருந்து இந்த சாமானிய மக்களையும், இயற்கை சார்ந்த புவியையும் காப்பாற்ற வேண்டிய காலமிது. இது நடக்க வேண்டும் என்றால் மக்களால், மக்களுக்காகக் காலம்காலமாக நடத்தப்பட்டுவரும் சிறு, குறு தொழில்களைக் காலத்துக்கேற்ப மாற்றத்துக்கு உள்ளாக்கி, இயற்கை வளங்களைச் சுரண்டாத தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, சுற்றுச்சூழலையும் ஆரோக்கியத்தையும் கெடுக்காத வேளாண்மை முறைகளைத் தேர்ந்தெடுத்து, சிறிதும் வன்முறை இல்லாத அகிம்சைப் பொருளியல் அமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.
இதை முன்னெடுக்கும் விதமாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 22 முதல் 26 வரை ‘அகிம்சைச் சந்தை’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகிம்சைப் பொருளாதாரக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள இத்திருவிழாவில் சிறு, குறு தொழில்களைக் கையாளும் சிறு நிறுவனங்கள் அகிம்சைப் பொருளாதாரத்தின் மாதிரிகளாகக் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. தென்னிந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் பங்கெடுக்கும் இவ்விழா, அகிம்சையையும் அமைதியையும் நேசிக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு கற்றல் தளமாக அமையும். இவ்விழா மாற்றத்திற்கான மார்க்கமாகவும் அமையும்.
- சு.வெங்கடாசலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகக் காந்தியியல் துறைத் தலைவர்.
தொடர்புக்கு: communevenkat@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT