‘சிற்பி’ திட்டம் எழுப்பும் கேள்விகள்!

‘சிற்பி’ திட்டம் எழுப்பும் கேள்விகள்!
Updated on
2 min read

மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ (SIRPI - Students In Responsible Police Initiatives) திட்டத்தை செப்டம்பர் 14 அன்று தொடங்கிவைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சிறுவர்களைச் சமூக ஒழுக்கத்துடன் வளர்ப்பது நம் கடமை’ என்றார்; தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ‘இத்திட்டத்தில் மாணவர்களுக்குக் காவல் துறையினரால் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். போதை ஒழிப்பிலிருந்து பல்வேறு நன்னடத்தைகளைக் கற்பார்கள், தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்வார்கள்’ என்றார்.

சில கேள்விகள்: கல்வித் துறை சார்ந்தும், மாணவர்கள் சார்ந்தும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. அந்த வகையில் புதிய திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், இந்தத் திட்டம் ஏன் அரசுப் பள்ளி மாணவர்களிடம் மட்டும் தொடங்கப்படுகிறது? இந்தப் போதனைகள் எல்லாமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது மட்டும்தானா? சில நாட்களுக்கு முன் அரசுப் பள்ளிகளில் மட்டும் கடைப்பிடிக்கப்பட்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு தினம், ஏன் தனியார் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படவில்லை? வளரிளம் பருவம் (13 வயது) தொடங்கும்போது அவர்களுக்கு காவல் துறையினர் வழிகாட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற திட்டங்களை வடிவமைப்பவர்களிடம் வெளிப்படும் குறுகிய பார்வையை எப்படிப் புரிந்துகொள்வது என ‘சிற்பி’ திட்டத்தின் அடிப்படை நோக்கத்திலிருந்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

கல்வியும் ஒழுக்கமும்: ஒழுக்கமும் நன்னடத்தையும் தனியே கற்பிக்கப்படக்கூடியவையா? கல்விச் செயல்பாட்டுடன் விளையாட்டு, இலக்கியம், இசை, கலை, மாணவர் மன்றம், அறிவியல் மன்றம் போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளை ஆசிரியர்களே மேற்கொள்ளும்போதுதான் இவற்றைக் கற்பிக்க முடியும். அதற்குத் துணையாகச் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் சொல்லியும் அரசு இன்னும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இவற்றை நிறைவேற்ற அரசுக்குச் செலவு அதிகம் ஆகும் என்பதால் ரூ.4.25 கோடியில் ‘சிற்பி’ திட்டத்தை அரசு முன்னெடுக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.

போதைப் பொருள் என்றில்லை, நவீன சாதனங்களும் அவை உருவாக்கும் மெய்நிகர் உலகமும் கல்வியில் ஆசிரியர்-மாணவர் உறவில் புதிய சிக்கல்களை, மாணவர்களை ஆசிரியர்கள் அணுகுவதில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதால், கற்றல் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கற்றல்-கற்பித்தல் சிக்கலைச் சரிசெய்வது கல்வித் துறையின் பணிதானே தவிர, காவல் துறை தலையிட வேண்டிய சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையில்லை என்பது வெளிப்படை.

தடைதாண்டும் ஓட்டம்: உண்மையில் வறுமை, இதர குடும்பச் சூழல்களைத் தாண்டித்தான் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். விவசாய வேலை, இதர கூலி வேலைகளைப் பார்த்துவிட்டுப் பள்ளி, கல்லூரிக்கு வரும் நிலையில் மாணவர்கள் இருப்பதும் அவர்களின் சூழ்நிலை பற்றியும் ஆசிரியர்கள் நன்கு அறிவர். அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் கற்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் கற்றல் செயல்பாடு என்பது ஒரு தடைதாண்டும் ஓட்டம் போன்றது. வறுமை, வசதியற்ற குடும்பச் சூழலை ஊக்குவிப்புக் காரணியாகக் கொண்டு கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் உண்டு.

பதினெட்டு வயது நிரம்பாதவர்களைக் குழந்தைகள் என்றே சட்டம் சொல்கிறது; அந்த வயதுடையவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால்கூட அவர்களின் குழந்தை மாண்புக்கு ஊறு ஏற்படாமல் காவல் துறை அணுக வேண்டும் (குழந்தைகளைச் சிறார் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் காவலர் காக்கிச் சீருடைகூட அணியக் கூடாது) என்கிறது நீதித் துறை.

துறை சார்ந்த அணுகுமுறை: அரசு, தனியார் என எந்தப் பள்ளியானாலும் குழந்தைகள், கற்றல் நலன் கருதி எடுக்கப்படும் அரசின் முக்கிய முடிவுகளும் திட்டங்களும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், குறிப்பாகக் குழந்தைகள் மத்தியில் செயல்படுபவர்களைக் கொண்ட குழு அமைத்து விவாதிக்கப்பட வேண்டும்; அது அரசுக்குப் பரிந்துரையாக வழங்கப்பட்டு, அதன் பிறகே நிர்வாகரீதியாக முடிவெடுக்கப்பட வேண்டுமே தவிர, அரசாங்கமே தனிப்பட்ட முறையில் முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்தக் கூடாது. ஒருபுறம் மதுவை விற்றுக் கொண்டு போதைப்பொருட்களைத் தடுக்கவும் மேற்கொள்ளும் அரசின் முயற்சிகள் முழுப்பலன் அளிக்காது. இதில் ஏழை, எளியக் குழந்தைகளை முக்கியக் காரணியாக நினைப்பதும் சரியாகாது. போதைப் பொருள் தடுப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். ஆனால், அதற்கான தொடக்கப் புள்ளி பள்ளிகள் அல்ல என்பதையும் அரசு உணர வேண்டும்.

-ச.இராமசாமி,

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் (ஓய்வு)

தொடர்புக்கு: eniyanramasami@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in