

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. ஆனால், இன்று சில உணவகங்களில் உண்பவர்களுக்கு, சில நேரத்தில் அந்த உணவே அவர்கள் உயிரைப் பறிக்கும் நஞ்சாக மாறிவிடுகிறது. அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கும் இந்நிகழ்வுகள், உணவு விடுதிகளின் மீதான நம்பிக்கையைச் சிதைத்துவிடுகின்றன.
நவீன வாழ்க்கை முறையால் வீட்டில் சமைப்பது குறைந்துவருவதாலும், பல்வேறு பணிகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதாலும் உணவகங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீண்ட தூரம் பயணிப்பவர்கள் பசியின் பொருட்டு கண்ணில் தெரிகிற உணவகங்களில் சாப்பிடுவது வழக்கம். பசியின்போது ஏற்படும் ஒருவித நம்பிக்கையே இந்த உணவகங்களில் உண்பதற்குத் தூண்டுகிறது. ஆகவே, சுத்தமான, தரம் மிகுந்த உணவு வழங்குவது எல்லா உணவகங்களின் கடமை.
அச்சுறுத்தும் உணவகங்கள்: 2021 செப்டம்பரில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 20 பேரில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அதே ஆண்டு அதே ஆரணியில் உணவகம் ஒன்றில், உணவில் கரப்பான்பூச்சி கிடந்தது என்கிற சர்ச்சையால் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். இவற்றின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஆரணியில் சைவ உணவகம் ஒன்றில் பொரியலில் எலியின் தலை கிடந்ததாக எழுந்த பிரச்சினை உணவகங்களின் மீதான பலரின் நம்பிக்கையை மீண்டும் இழக்கச் செய்து, மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவைக் கையாள்வதிலும் பாதுகாப்பதிலும் அதைப் பக்குவப்படுத்துவதிலும் உணவக ஊழியர்களுக்குப் போதுமான அக்கறையும் உணவைப் பாதுகாத்தலில் விழிப்புணர்வின்மையாலும் பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன், மாவுப் பொருட்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் குளிர்பதனப்பெட்டி, குளிர்விப்பான் போன்றவற்றின் இயங்குமுறை, பயன்பாடுகள் பற்றி உணவக ஊழியர்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். குளிர்பதனப்பெட்டியைத் திறந்துவிட்டு, அதைச் சரியாக மூடாமல் விடும்போது எலி, கரப்பான்பூச்சிகள், பல்லி போன்ற உயிரினங்கள் நுழைந்துவிட்டால், அவை உறைநிலையில் இறந்து, அழுகி அதிலுள்ள உணவுப் பொருட்களுடன் கலந்துவிட வாய்ப்புள்ளது. இதை அறியாமல் உணவகங்கள் அதைச் சமைத்து வழங்கும்போது, வாடிக்கையாளர்களே அவற்றைக் கண்டறியும்நிலையில் விபரீதம் ஆகிறது; சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
என்னதான் தீர்வு?: உணவகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்து முறையான பயிற்சி வழங்க வேண்டும்; உணவுப் பாதுகாப்பு, உணவு பதப்படுத்துதல், இறைச்சியைப் பாதுகாக்கும் குளிர்பதனப்பெட்டி கண்காணிப்பாளர் ஆகியோரை உணவகங்களில் நியமிக்க வேண்டும். உணவு தயாரிக்கும் இடத்தைச் சுத்தமாகவும், கழிவுகள் தேங்காமலும் ஆட்களை நியமித்துப் பராமரிக்க வேண்டும். சீரான இடைவெளியில் உணவுப் பராமரிப்பு, பாதுகாப்பு சார்ந்த பயிற்சியைப் பயிற்றுநர்களைக் கொண்டு வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் உரிய கால இடைவெளியில் ஆய்வுகள் மேற்கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013இன்படி தரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது மட்டுமே உணவகங்களின் தரம் சீரடையும்.
-இரா.ஜெயசீலன், தொடர்புக்கு: levanjayaseelan@gmail.com