

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆசியச் சிவிங்கிப்புலிகள் அற்றுப்போய் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் துணை இனமான ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகள் செப்டம்பர் 17 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து 8,000 கி.மீ-க்கு அப்பாலுள்ள இந்தியாவுக்குக் கண்டம்தாண்டிச் சிறப்பு விமானத்தில் கொண்டுவரப்பட்ட எட்டு சிவிங்கிப்புலிகள் (ஐந்து பெண், மூன்று ஆண்), மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசுக் குறிப்புகளின்படி வங்கப் புலி, ஆசியச் சிங்கம், சிறுத்தை, ஆசியச் சிவிங்கிப்புலி என நான்கு பெரும்பூனைகள் முன்பு ஒரே வாழிடத்தைக் கொண்டிருந்த இடமாகக் குனோ திகழ்கிறது. இந்தியாவில் ஆசியச் சிவிங்கிப்புலிகள் உலவிய குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்கள் ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகளை அறிமுகப்படுத்துவதற்கான முன்னுரிமை வாழிடங்களாகப் பார்க்கப்பட்டன. மத்திய இந்திய மாநிலங்களில் ஆய்வுசெய்யப்பட்ட இடங்களுள் மத்திய பிரதேசத்தின் குனோ பல்பூர் தேசியப் பூங்கா இதற்கு ஏற்ற வாழிடமாக அடையாளம் காணப்பட்டது.
இந்தியாவின் கடைசிச் சிவிங்கிப்புலி 1947இல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் முற்றிலும் அற்றுப்போய்விட்டதாக 1952இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஈரானில் மட்டும் வெறும் 12 ஆசியச் சிவிங்கிப்புலிகள் எஞ்சியிருக்கின்றன. இந்நிலையில், ‘இந்தியாவில் ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலியை அறிமுகப்படுத்தும் திட்டம்’ 2009இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியால் முன்மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து ரூ.39 கோடி மதிப்பீட்டில் ‘சிவிங்கிப்புலி செயல்திட்டம்’ 2021இல் வெளியிடப்பட்டது.
அதன்படி, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவிங்கிப்புலிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. நடைமுறைச் சிக்கல்களால் தள்ளிப்போன அந்நிகழ்வைத் தன் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தேசியக் காட்டுயிர்ச் செயல்திட்டத்தின் (2017-2031) பல்வேறு கானுயிர்ப் பாதுகாப்பு அம்சங்களைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால்,இது மிகப் பலவீனமான அறிவியல் அடித்தளத்தைக் கொண்டிருப்பதாக காட்டுயிர்ப் பாதுகாப்புச் செயல்பாட்டாளர்கள் விமர்சிக்கிறார்கள். கண்டம்விட்டுக் கண்டம் தாண்டிசிவிங்கிப்புலிகளை அறிமுகப்படுத்திய வெற்றிகரமான திட்டம் ஒன்று இதுவரை நிகழ்ந்ததில்லை. தேசியக் கானுயிர்ப் பாதுகாப்பு முன்னுரிமைகளை விடுத்து, நடைமுறைச் சாத்தியமில்லாத – ஊதிப் பெருக்கப்பட்ட கானுயிர்ப் பாதுகாப்புக் கனவுகளை முன்மொழிவதாகவும், முன்னுரிமை தரப்பட வேண்டிய கானுயிர்ப் பாதுகாப்புப் பிரச்சினைகள், வளங்களைப் பாதுகாக்கும் கவனத்திலிருந்து விலகச்செய்வதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பின்னணியில், இந்தியாவின் மற்ற பெரும்பூனைகளின் நிலை என்னவாக இருக்கிறது?:
சிங்கம்: இந்தியாவில் குஜராத் வனப் பகுதியான கிர் தேசியப் பூங்காவில் மட்டுமே சிங்கங்கள் வசிக்கின்றன. 2015இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 523 சிங்கங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து, 2020இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சிங்கங்களின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்தது. திடீர் நோய்த்தொற்று, உள்ளினப் பெருக்கத்தால் பலவீனமடைதல், இடநெருக்கடிகளால் காடுகளிலிருந்து வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித-உயிரின எதிர்கொள்ளல் போன்ற தீவிரமான பிரச்சினைகளை ஆசியச் சிங்கங்கள் இப்போது எதிர்கொண்டிருக்கின்றன. அழியும் அபாயமுள்ள உயிரினங்களை ஒரே வாழிடத்தில் அல்லாமல், இரண்டு அல்லது மூன்று இடங்களில் பிரித்துப் பரவலாக்க வேண்டும் என்கிறது காட்டுயிர்ப் பாதுகாப்பு அறிவியல். அப்போதுதான் அவற்றின் எதிர்காலப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். ஒரே வாழிடத்தில் இருப்பதென்பது தொற்றுப் பரவல், காட்டுத்தீ, சூறாவளி போன்ற திடீர் பிரச்சினைகளின்போது, மொத்தமாக அழிவதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக்கான அமைப்பு ஆசியச் சிங்கங்களை ‘அழிவிற்கு உள்ளான’ விலங்குகளின் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது.
புலி: இந்தியாவின் தேசிய உயிரினமான வேங்கைப் புலிகளின் பாதுகாப்பும் கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள்படி, 2012 முதல் 2021 டிசம்பர் 30 வரையிலான 10 ஆண்டுகளில் 984 புலிகள் இறந்துள்ளன; அதிகளவிலான புலி இறப்புகள் 2021இல் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 127 புலிகள் உயிரிழந்துள்ளன. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்நிலையில் இயற்கை மரணம், மின்சாரம் தாக்கி உயிரிழத்தல், விஷம் வைத்துக் கொல்லப்படுதல் எனப் பல்வேறு காரணங்களால் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. என்றாலும், புலிகள் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் அவற்றின் உணவு, வாழிடம், அதைச் சுற்றியிருக்கும் சூழலியல் அளவுகோல்கள் மிக மோசமாக இருப்பதுதான்.
பனிச்சிறுத்தை: மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவால் துருவப் பகுதிகளும் பனிப் பிரதேசங்களும் முதன்மையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன. இது அங்கு வாழும் உயிரினங்களின் வாழிடத்தைச் சுருக்கி, அவற்றின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக மாறியிருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் குறைந்துவரும் பனி, இந்தியப் பெரும்பூனைகளில் ஒன்றான பனிச்சிறுத்தையின் வாழ்வை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. பனிமலைப் பிரதேசங்களின் அடிவாரப் பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு எதிரொலிப்பதால், பனிச்சிறுத்தைகளுக்கான இரைகளும் குறைந்துவருகின்றன. இதனால் பனிச்சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதால் நிகழும் மனித-உயிரின எதிர்கொள்ளலில் இரண்டு பக்கமும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், அடர்ந்த தோலுக்காகவும் சில பகுதிகளில் பனிச்சிறுத்தைகள் வேட்டையாடப்படுகின்றன.
சிறுத்தை: மற்றொரு இந்தியப் பெரும்பூனையான சிறுத்தையின் வாழ்வும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறது. பெங்களூருவின் காட்டுயிர்க் கல்வி மையமும், டேராடூனில் உள்ள இந்தியக் காட்டுயிர் நிறுவனமும் இணைந்து 2020இல் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த 100 ஆண்டுகளில் 75-90% வரை குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வாழ்ந்துவரும் பெரும்பூனைகளில் சிறுத்தைகள் மட்டுமே ஓரளவுக்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன. சிறுத்தைகள் படிப்படியாகக் குறைந்து அற்றுப்போய்விடாமல் இருக்க, புலிகளைப் பாதுகாப்பதுபோல் சிறுத்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று அந்த ஆய்வுக்குழு பரிந்துரைந்திருந்தது. மனித-உயிரின மோதல், வாழிட அழிப்பு, சட்டவிரோத வேட்டையாடல், வாகனங்களில் அடிபட்டு பலியாதல் ஆகியவை இந்தியாவில் சிறுத்தைகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள்.
சிவிங்கிப்புலி என்னவாகும்?: ஓர் உயிரினத்தின் அழிவுக்கு, வேட்டை, வாழிட அழிவு ஆகியவை முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. ஆசியச் சிவிங்கிப்புலிகள் வேட்டையாடப்பட்டது மட்டுமின்றி, கரடுகள், புல்வெளிக் காடுகள் அழிக்கப்பட்டதும் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் வேளாண்மை, கட்டுமானம் எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் புல்வெளிப் பகுதிகள், காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பின்னணியில், அந்த நிலப்பகுதியைப் பாதுகாப்பதில் அவற்றை வாழ்விடமாகக் கொண்டிருக்கும் சிவிங்கிப்புலிகள் பங்குவகிக்கும் என்ற நோக்கில் ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகள் இந்தியாவில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், புல்வெளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்திய ஓநாய், வெளிமான், சிங்காரா, கானமயில் போன்ற பல உயிரினங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றன. இவற்றை விடுத்து, ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருப்பதும், அது என்னவிதமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதுமே கானுயிர்ப் பாதுகாவர்களின் கவலையாக இருக்கிறது. தொகுப்பு: அபி