வளர்ச்சிக்குத் தேவை மாவட்டத் திட்டக் குழுக்கள்

வளர்ச்சிக்குத் தேவை மாவட்டத் திட்டக் குழுக்கள்
Updated on
3 min read

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சி, நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பங்காற்றிவருகின்றன. அவற்றில் உள்ளாட்சிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளும் அடக்கம். என்றாலும் உள்ளூர் அளவில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் உள்ளாட்சிகள் தன்னிறைவு பெற்றுவிட்டனவா என்று கேட்டால், முழுமையாக இல்லை என்பதே பதில்.

நிதிப் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் பெரும் தொய்வு கண்டிருந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 73, 74ஆவது திருத்தங்களின்படியான தொடர் நடவடிக்கைகளுக்குப் பின் புத்துணர்வுபெற்று புதிய ஆற்றலுடன் செயல்பட்டு வருகின்றன என்பது வெளிப்படை. ஆனாலும், அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின்படி உட்சேர்க்கப்பட்ட கூறுகள் அனைத்தும் முறையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டனவா என்பதற்கும், முழுமையாக இல்லை என்ற அதே பதிலைத்தான் நாம் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மத்திய-மாநில அரசின் நிதிப் பகிர்வுகள், மாநிலத் தேர்தல் ஆணையம், மாநில நிதிக் குழு உருவாக்கம், கிராம சபைகள் உருவாக்கம் ஆகியவை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன எனப் பெருமிதத்துடன் கூறப்படுகிறது. அதேவேளையில், உள்ளாட்சிப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி குறித்த திட்டமிடுதல் குறித்து அரசு, உள்ளாட்சிகளுக்கு அரசமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கடமை, பொறுப்புகளை நிறைவேற்றிடத் தேவையான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற நிதர்சனமும் கண்முன்னே நிற்கிறது.

உள்ளாட்சிகளால் தயாரிக்கப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள்: அரசமைப்பின் கூறுகள் 243G(a), 243W(a)(i) ஆகியவற்றின்படி தங்கள் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதிச் செயலாக்கம் ஆகியவற்றைச் செவ்வனே நிறைவேற்றிடத் தேவையான திட்டங்களைத் தயார்செய்து மாவட்டத் திட்டமிடல் குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதற்கான அதிகாரமும், கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெருநகரப் பகுதிகளில் அடங்கிய ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களைப் பெருநகர வளர்ச்சிக் குழுவுக்கும் அனுப்ப வேண்டும்.

மாவட்டத் திட்டக் குழு: அரசமைப்புச் சட்டக்கூறு 243ZDஇன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு மாவட்டத் திட்டக் குழுவை உருவாக்குவது மாநில அரசின் கடமை. இக்குழு அந்தந்த மாவட்டத்திலுள்ள உள்ளாட்சிகளிடமிருந்தும் பெறப்பட்ட உள்ளூர் திட்டங்களை ஆய்வுசெய்தும், மாவட்டத்திலுள்ள ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இடையிலான பொதுவான தேவைகள், குடிநீர் உள்ளிட்ட வளங்களைப் பங்கிடுதல் தொடர்பாகவும் உருவாக்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த திட்டங்கள், ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் இடம்பெறும் வகையில் அந்த மாவட்டத்துக்கான வரைவு வளர்ச்சித் திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். அதை மாவட்டத் திட்டக் குழுவில் வைத்து விவாதித்துத் திட்டத்தை இறுதிசெய்து அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 241இன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் திட்டக் குழு அமைக்க வழிவகை செய்யப்பட்டது. இக்குழுவின் தலைவராக, அந்தந்த மாவட்ட வளர்ச்சி மன்றத்தின் தலைவர்களும், துணைத்தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர்களும் செயல்படுவார்கள். குழுவில் அந்தந்த மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். இக்குழுவின் நடவடிக்கைகள் குறித்த விதிகள் 1997ஆம் ஆண்டிலேயே அறிக்கையிடப்பட்டுவிட்டன.

அமைக்கப்படாத மாவட்டத் திட்டக் குழுக்கள்: 1997ஆம் ஆண்டிலேயே மாவட்டத் திட்டக் குழுக்கள் அமைப்பதற்கான சட்டப்படியான பூர்வாங்க நடைமுறைகள் நிறைவுபெற்றிருந்தாலும், அக்குழுக்கள் இன்றுவரை உருப்பெறவில்லை. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவட்டத் திட்டக் குழுக்கள் திறம்படச் செயல்பட்டுவருவதைப் பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் மாவட்டத் திட்டக் குழுக்கள் செயல்படாமல் நின்றுபோனதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை.

பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாததால், இடைப்பட்ட காலத்தில், உள்ளாட்சிகள் அளவில் திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படாமலும், மாவட்டத் திட்டக் குழு உருப்பெறவும் வாய்ப்புகள் இல்லாமல் போனது என்று கருதுவதற்குப் போதுமான அடிப்படை உள்ளது. ஆனாலும் தற்போது உள்ளாட்சிப் பொறுப்புகள் அனைத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகள் பொறுப்பு வகிக்கின்றனர். ஆதலால் இன்றைய சூழலில், உள்ளூர் அளவிலான அறிக்கைகள் தயார் செய்யப்படுவதற்கோ மாவட்டத் திட்டக் குழுக்கள் உருவாவதற்கோ எவ்விதத் தடையும் இல்லை.

வார்டு சபை: ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபைகளும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு சபைகளும் அமைப்பதற்கான பொறுப்புகள் ஒரே நேரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், கிராம சபைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே செயல்முறைக்கு வந்துவிட்டன. ஆனால், வார்டு சபைகள் இன்னும் உருவாகவில்லை. தற்போது அதற்கான விதிகள் அறிக்கையிடப்பட்டுள்ளன; என்றாலும் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகித்தாலும், மக்கள் தங்களின் குறைகளையும் தேவைகளையும் நேரடியாகத் தெரிவிக்கச் சட்டப்படியாக வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள்தாம் இந்த கிராம, வார்டு சபைகள். இவற்றின் வாயிலாக மக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் கோரிக்கைகளும் கருத்துகளும், நிர்வாக மேம்பாட்டுக்கு மட்டுமல்லாமல், மேற்குறிப்பிட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படவும் உதவிகரமாக அமையும்.

முன்னோடி முயற்சி: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்களின் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும் ஒன்றிணைந்து தங்கள் மாவட்டத்துக்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்தால், அதில் முன்மொழியப்படும் திட்டங்கள் எவ்வளவு சிறப்பானதாகவும், உண்மையான தேவைகளைப் பிரதிபலிப்பதாகவும், சுருக்கமாக ஒரு உயிர்ப்புள்ள அறிக்கையாக விளங்கி மக்களுக்கு நன்மை செய்வதாக அமையும் என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை. தவிர, இதுவரை இல்லாத வகையில் மக்கள் பிரதிநிதிகளையும் அரசு அலுவலர்களையும் ஒன்றிணைந்து திட்டமிட வைக்கும் ஒரு முன்னோடி முயற்சியாகவும் இது அமைகிறது. மக்களின் நேரடிப் பங்களிப்புகளே மக்களாட்சி முறையின் ஆணிவேராகவும் அடிநாதமாகவும் விளங்குகின்றன. உள்ளாட்சியில் நல்லாட்சி நடந்திட வேண்டும் எனவும் உள்ளாட்சிகள் புதிய விடியலை நோக்கி முன்னேற வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி வலியுறுத்திவருவது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.

மாவட்டத் திட்டக் குழுக்களும், நகர்ப்புற வார்டு சபைகளும் விரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதன் தொடர்ச்சியாக ஒரு கால எல்லை நிர்ணயித்து, அதற்குள் உள்ளூர் அளவிலான வளர்ச்சித் திட்டங்களும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களும் தயார்செய்யப்பட்டு, அத்திட்டப் பணிகளை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் எனவும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற அரசு ஆவன செய்யுமா? - ஜெயபால் இரத்தினம், ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in