இடையிலாடும் ஊஞ்சல் - 1: தமிழுக்குத் தாய்மொழி எது?

இடையிலாடும் ஊஞ்சல் - 1: தமிழுக்குத் தாய்மொழி எது?
Updated on
2 min read

“எல்லா மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதம்தான். ஆகவே, அம்மொழியைத் தேசிய மொழியாக அறிவிக்குமாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தொடுக்கப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. வழக்குத் தொடுத்தவர் குஜராத்தின் முன்னாள் கூடுதல் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ஜி.வஞ்சாரா என்பவர்.

இந்தக் குரல் ஒன்றும் புதிதல்ல. நூற்றாண்டுகள் தாண்டியும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் குரல்; சங் பரிவாரங்கள் நீண்ட காலமாக எழுப்பிக்கொண்டிருக்கும் குரலும்தான். சம்ஸ்கிருதம் இந்தியாவில் புழங்கும் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்கிற கருத்தாக்கம் காலனிய காலத்தில் உருவாகி வலுப்பெற்ற ஒரு கற்பிதம். 1757 பிளாசி போருக்குப் பின் வங்காளத்தில் வரி வசூலிக்கும் உரிமையைப் (திவானி) பெற்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆட்சிசெய்யத் தலைப்பட்டனர். மக்களை ஆள வேண்டுமெனில் அவர்களின் மொழிகளின் மீது தமக்கு ஆளுமை வேண்டும் என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்திருந்தனர். மொழிபெயர்க்கும் துபாஷிகளை முழுமையாக நம்ப முடியாது என்கிற அனுபவத்தில், இந்திய மொழிகளைத் தாமே கற்க முறையான ஏற்பாடுகளைச் செய்தனர்.

இந்திய மொழிகளைப் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குக் கற்றுக்கொடுக்கும் நோக்கில், பொ.ஆ. (கி.பி.) 1800இல் வில்லியம் கோட்டைக் கல்லூரியைக் கொல்கத்தாவில் தொடங்கினர். இங்கு அராபியம், பாரசீகம், சம்ஸ்கிருதம், இந்தி, உருது, வங்காளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டன. தென்னிந்திய மொழிகளை ஆங்கில அதிகாரிகளுக்குக் கற்பிக்கச் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி 1812 இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் பயின்றவர்களுக்காக இந்திய மொழிகளுக்கான இலக்கண நூல்களையும் ஐரோப்பியர்களே எழுதி, அச்சிட்டு வழங்கினர். சுதேசி மொழி அறிஞர்களின் பங்களிப்பும் இருந்தது. இந்தியாவிலேயே இயங்கும் இந்தக் கல்லூரிகளைச் சார்ந்திருப்பதை விரும்பாத ஆங்கிலேயர்கள், 1806இல் ‘ஹெயிலிபரி கல்லூரி’யை இங்கிலாந்தில் தொடங்கினர். இந்தியாவுக்குச் செல்லும் அதிகாரிகளுக்கு இந்திய மொழிகளும் பண்பாட்டுக் கூறுகளும் கற்பிக்கப்படலாயிற்று; சம்ஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இங்கு பயின்றவர்கள் சம்ஸ்கிருதமே இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி என்கிற உணர்வில் இந்தியாவுக்கு அதிகாரிகளாக வந்துசேர்ந்தனர். இந்தத் தாக்கம் இன்றுவரை தொடர்வதன் வெளிப்பாடுதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி வஞ்சாரா தொடுத்த வழக்கு.

தென்னிந்திய மொழிகள்: ‘சம்ஸ்கிருதத்தோடு எந்தப் பிணைப்புமின்றித் தனித்து இயங்கும் மொழிக் குடும்பமாகத் தென்னிந்திய மொழிகள் திகழ்ந்தன’ என்கிற உண்மையை இவர்கள் அறிந்திருக்கவில்லை. 1856இல் வெளியான ராபர்ட் கால்டுவெல்லின் ‘திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற மகத்தான நூல் இந்த உண்மையை உலகுக்கு அறிவித்தது.

இதற்கிடையில், 1835இல் வெளியிடப்பட்ட மெக்காலேயின் கல்வி அறிக்கை ஆங்கிலேயர்களின் மொழிக் கற்றல் இயக்கத்தின் முன்னுரிமைகளை மாற்றியது. சம்ஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளை அன்றாட அலுவல்களுக்குத் தேவையான அளவுக்குக் கற்றால் போதும்; இலக்கியங்களைக் கற்று நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்றது அந்த அறிக்கை. மோனியர் வில்லியம்ஸ் ‘சகுந்தலை’யை மொழிபெயர்த்தார்; மாக்ஸ் முல்லர் ‘கீழை நாட்டுப் புனித நூல்கள்’ தொகுதிகளை வெளியிட்டார். எனவே, ஐரோப்பியருக்குச் சம்ஸ்கிருதப் பிரதிகள் வாசிக்கக் கிடைத்தன. சம்ஸ்கிருதம் ‘மொழி’ என்கிற தகுதியைக் கடந்து ‘அடையாளம்’ என்னும் தகுதியை அடையத் தொடங்கியதாக ‘மொழியாகிய தமிழ்’ நூலாசிரியர் ந.கோவிந்தராஜன் குறிப்பிடுகிறார். காலப்போக்கில் அது இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒன்று என்கிற தகுதியைப் பெற்று ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கே உருவாகிக்கொண்டிருந்த யூதத் தொடர்பில்லா ஆரிய அடையாள அரசியலுக்கும் ஆய்வுகளுக்கும் சம்ஸ்கிருதம் பெரும் துணைசெய்தது.

மொழி முகமூடி: தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருத மொழியிலிருந்து உருவாகவில்லை; அவை தனித்த இயல்புடையன என்று கால்டுவெல்லுக்கு முன்பே கூறிய அறிஞர் எல்லீஸ் தலைமையிலான குழு சென்னைக் கல்விச் சங்கத்தைச் சார்ந்தது என்பதை வரலாறு காட்டுகிறது. எல்லீஸ் முன்வைத்த கருத்தை மேலும் வளர்த்தெடுத்து, சம்ஸ்கிருதம் தென்னிந்திய மொழிகளை மெருகூட்டப் பயன்பட்டிருக்கலாம். ஆனால், இவற்றின் இருப்பு தேவையில்லாதது என்பதையும் பிற்காலத்தில் சம்ஸ்கிருதக் கலப்பு நிகழ்ந்திருந்தாலும், அது இவற்றின் வேர்ச்சொற்களோடு தொடர்புகொள்ளவில்லை என்பதை ஒப்பிலக்கணத்தின் அடிப்படையில் வலுவாக நிறுவினார் கால்டுவெல். இந்திய ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து எந்த அளவு திராவிட மொழிகள் விலகி நிற்கின்றன என்பதை வெளிப்படுத்திய கால்டுவெல், அதே அளவு சித்தியன் (Scythian) அல்லது துரானியன் (Turanian) மொழிக் குடும்பங்களோடு திராவிட மொழிகளுக்கு உள்ள உறவைச் சான்றுகளோடு கால்டுவெல் விளக்குகிறார். இக்கருத்து இன்னும் விரிவாக ஆய்வுசெய்யப்படாமல் நிற்கிறது.

எத்தனை முறை ஆதாரங்கள் வெளிப்பட்டாலும், இந்த ‘சம்ஸ்கிருதத் தாய்’க் கற்பிதம் மீண்டும் மீண்டும் தேவையின்றித் தலையைத் தூக்கி வருகிறது. 1856இல் வெளியான தன் நூலின் திருத்திய இரண்டாம் பதிப்பை 1875இல் கால்டுவெல் வெளியிட்டார். அந்நூல் 150 ஆண்டுகளுக்குப் பின் மொழியறிஞர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களால் முதன்முறையாக முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1,000 பக்கங்கள் கொண்ட அந்தக் கனத்த புத்தகத்தைக் கொண்டு அடித்தாலாவது இந்தக் கற்பிதம் விலகுமா என்பது தெரியவில்லை. - ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர். தொடர்புக்கு: tamizh53@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in