

மொழிபெயர்ப்பாளர் ஏ.வி.தனுஷ்கோடி காலமாகிவிட்டார். மேற்கு இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் காஃப்காவின் ‘விசாரணை’ நாவலை நேரடியாக ஜெர்மனியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் அவர். இந்த நாவல், தமிழ்ப் படைப்பு வெளியிலும் தாக்கத்தை விளைவித்தது. 1960-65 காலகட்டத்தில் சென்னையில் இரு கல்லூரிகளில் ஆங்கிலம் படிப்பித்துள்ளார். அமெரிக்கத் தூதரக அலுவலராகவும் பணிபுரிந்தவர். நாடகங்கள் எழுதியுள்ளார். நாடகங்களில் நடித்துள்ளார். கூத்துப்பட்டறையில் நாடகம் கற்பித்துள்ளார். தனுஷ்கோடி ஒரு யதார்த்தவாத ஓவியர். இவரது ஓவியங்கள் இரு முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓவியங்களையும் கற்பித்த அனுபவம் இவருக்கு உண்டு. ஆங்கிலத்தில் கதைகள் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் அசோகமித்திரன், பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் ஓவியங்கள் செளந்தர்யம் மிக்கவை. தனுஷ்கோடியின் நடிப்பைக் கண்டு வளர்ந்த ஓவியர் நடேஷ் முத்துசாமி, தென்னிந்திய யதார்த்தவாதத்தின் தந்தை எனப் புகழ்கிறார். தனுஷ்கோடி ஓவியம் வரைவதையும் அருகிலிருந்து பார்த்த அனுபவத்தில் அவரது யதார்த்தவாத ஓவியங்களைச் சிலாகித்துள்ளார். தனுஷ்கோடி, தளும்பாத நிறைகுடமாகத் தனி வாழ்க்கையை நடத்தியிருக்கிறார். அவரது மறைவில்தான் அவரின் பன்முகத் திறனை அறிந்துகொள்ளும் துர்ப்பாக்கிய நிலை உண்மையில் வருத்தத்தை அளிக்கிறது. ஏ.வி.தனுஷ்கோடி நினைவாக அவரது ஓவியங்கள் சில: