Published : 16 Sep 2022 10:24 AM
Last Updated : 16 Sep 2022 10:24 AM

10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘இந்து தமிழ் திசை’

அன்புமிக்க வாசகர்களே... வணக்கம். நேற்றுபோல்தான் இருக்கிறது. ஒன்பது ஆண்டுகள் பறந்தோடி, பத்தாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது உன்னதமான நமது பந்தம். நல்லதை ஆதரிக்க நாங்கள் இருக்கிறோம் என்று ‘இந்து தமிழ் திசை'யின் ஆரம்ப நாள்தொட்டு நீங்கள் அளித்துவரும் ஆதரவால், இன்று பலமாக வேரூன்றி நிற்கிறது உங்களின் அன்புக்குரிய இந்த நாளிதழ்.

வெறும் செய்திகளைத் தரும் நாளிதழாக மட்டுமின்றி, அறிவார்ந்த தோழனாக, அனைத்துத் துறைகள் குறித்தும் உங்களுடன் நேர்மறையான உரையாடலை நிகழ்த்தும் வகையில் நாங்கள் அமைத்துக்கொண்ட பாணியை நீங்கள் ஆரத்தழுவி வரவேற்றீர்கள்.

நீண்ட கட்டுரைகளைப் படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று பலரும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், விரிவான வாதங்களுடன், செறிவான கருத்துகளுடன் வெளியாகும் கட்டுரைகளை நீங்கள் ஆர்வத்துடன் படித்துவருவதோடு, ‘இந்து தமிழ் திசை'யின் பக்கங்களை வெட்டியெடுத்து ஒரு பொக்கிஷம்போல பாதுகாத்து வருவதை பல்வேறு தருணங்களில் நாங்கள் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பல்துறை சார்ந்த அரிய கட்டுரைகளைத் தொகுத்து அடுத்தடுத்து புத்தகங்களாக நாங்கள் வெளியிடும்போது, அதற்கு நீங்கள் தரும் ஆதரவு அதனினும் மேலாகப் பிரமிக்க வைக்கிறது.

வாசகர் திருவிழா, மகளிர் திருவிழா, ‘யாதும் தமிழே' விழா, ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான விருது நிகழ்ச்சிகள் என்று உங்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சீரிய - கூரிய விமர்சனங்களைத் தயங்காமல் நேருக்குநேர் முன்வைக்கிறீர்கள்.

‘உங்கள் குரல்' பதிவுகளின் வாயிலாக உடனுக்குடன் நிறை - குறைகளைச் சுட்டிக்காட்டி வழிநடத்துகிறீர்கள். லட்சக்கணக்கான வாசகர்களின் கரங்களைப் பற்றியபடி உற்சாக நடைபோடும்போது, ஒன்பது ஆண்டுகள் படுஉற்சாகமாக பறந்தோடிப் போனதில் வியப்பேதுமில்லை!

ஒவ்வொரு வருடமும் நிறைவடையும்போது, அடுத்து வரும் வருடத்தில், குறிப்பாக ஒரு சமூக நோக்கத்தைக் கையிலெடுத்து, அதற்கென சிறப்புக் கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரிப்பதோடு - பயனுள்ள நேரடி நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஊட்டுவதும் ‘இந்து தமிழ் திசை'யின் வழக்கம்.

மாறிவரும் காலச்சூழலில் நாம் அனைவருமே அவசர கவனம் செலுத்தித் தீர்வுதேட வேண்டிய முக்கியமான சிக்கல், ‘டிஜிட்டல் அடிக்‌ஷன்' என்னும் அபாய கலாச்சாரம். அறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான பொழுதுபோக்கிற்கும் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டிய இணையத் தொழில்நுட்பம், இன்று இளைய தலைமுறையின் வாழ்க்கைமுறையை திசைதிருப்பிச் சீரழிக்கும் சூறாவளியாக மாறிவரும் அவலத்தை என்னவென்று சொல்வது!

இந்த நச்சுக் கலாச்சாரத்திலிருந்து நம் குழந்தைகளை மீட்டெடுக்க எத்தனையோ யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனாலும், ரசனையும் அறிவும் சார்ந்த வாசிப்புப் பழக்கத்தை நம் இளைஞர்களிடம் ஏற்படுத்துவதைப் போன்ற சிறந்த சிகிச்சை வேறொன்றும் இல்லை என்று ‘இந்து தமிழ் திசை' குழுவினர் உறுதியாக நம்புகிறோம்.

உடம்பில் ஏறிவிட்ட நச்சுத்தனமான போதையிலிருந்து மீட்பதற்கான முதலுதவிக்கு இளநீர் ஓர் அருமருந்து என்று மருத்துவர்கள் சொல்வார்கள். அதுபோலத்தான், நம் தாய்மொழியாம் தமிழின் சுவையை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தி... அவர்களுக்குள் வாசிப்பு ரசனையை வளர்த்து...

தமிழ் அமுதின் சுவையில் அவர்களை நாம் மூழ்கடிக்கத் தொடங்கிவிட்டால்... அல்லும் பகலும் ஆழ்ந்திருக்கும் அலைபேசியின் கண்கூசும் திரையின் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு, அச்சுக் காகிதத்தின் இனிய மணத்தில் திளைத்து, உள்ளத்தைத் தீண்டும் வாசிப்பின் இன்பத்தை கட்டாயம் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

எனவே, ‘டிஜிட்டல் போதை'யின் ஆபத்தை விளக்கும் சிறப்பான கட்டுரைகளை வெளியிடுவதுடன், அத்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு நேரடி நிகழ்வுகளை நடத்துவதை இந்த பத்தாம் ஆண்டின் முக்கியக் கடமையாக நாங்கள் எடுத்துக்கொண்டுள்ளோம்.

கூட்டுப் பொறுப்பாக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் வீட்டுப் பிள்ளைகள் மத்தியில் தமிழ் வாசிப்புப் பழக்கம் குறித்து முடிந்தவரை எடுத்துச் சொல்வதுதான். அதற்குத் துணையாக இளைஞர்களைக் கட்டியிழுக்கும் வகையில் நாங்களும் குறிப்பிடத்தக்க கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுவோம்.

உண்மையான உலகத்தோடு உரையாடவே நேரமற்று, குனிந்த தலை நிமிராது அலைபேசிக்குள் ஆழ்ந்துகிடக்கும் நம் வீட்டுப் பிள்ளைகளை கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நடமாடவைக்க, இன்று நாம் எடுப்போம் ஒரு புது சபதம்.

தமிழால் என்றும் இணைந்திருப்போம்.

அன்புடன்,

கே.அசோகன், ஆசிரியர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x