

வரலாற்றைத் திருத்திய கீழடி: இந்திய வரலாற்றை முற்றிலும் மறுவாசிப்புக்கு உட்படுத்துவதற்கான கட்டாயத்தை மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைத் தமிழினத்தின் வரலாற்று எச்சங்கள் உருவாக்கின. வைகைக் கரையில் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்தன.
தமிழக அகழாய்வுகளில் இதுவே மிகப்பெரிய அளவில் நடைபெற்ற ஒன்று. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகளும் சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் அதிகளவில் இங்கு கிடைத்திருக்கின்றன.
‘தமிழி' எனப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பல ஓடுகளும் கண்டறியப்பட்டன. தொல்லியல், வரலாறு சார்ந்த பேரார்வத்தைத் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், தமிழ் நாகரிகம் குறித்த ஆவலை உலகெங்கிலும் கீழடி தட்டியெழுப்பியது. இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்படும் காலம் வெகுதூரம் இல்லை என்பதற்கான முன்னறிவிப்பாகக் கீழடி அகழாய்வு விளங்குகிறது.
தமிழகம் திரண்ட போராட்டம்: 2017 போராட்டத்தின் ஆண்டாகத் தொடங்கியது. ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகச் சென்னை மெரினாவில் இளைஞர்கள் பற்ற வைத்த போராட்டத் தீ உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டப் போராட்டத்தை மாநில அரசு தொடங்கியது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அப்போதைய அரசு, டெல்லி சென்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒப்புதலுடன் திரும்பியது. ஆனால், முழுமையான சட்டத் திருத்தம் வேண்டும் என மெரினாவில் இளைஞர்கள் எதிர்க்குரல் கொடுக்க,போராட்டத்தைக் காவல் துறை முடிவுக்குக் கொண்டுவந்தவிதம் ஒரு கறையாகத் தமிழக வரலாற்றில் பதிவானது.
காவிரி இறுதித் தீர்ப்பு: தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. 1990இல் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்ட இறுதி உத்தரவைக் கர்நாடகம் செயல்படுத்தாத நிலையில், அதை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது தமிழகம்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என 2006இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேரளம் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசின் சட்டப் போராட்டத்தால் 2014இல் மீண்டும் அதை உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
இயற்கைப் பேரழிவு?: தானே (2011), நீலம் (2012) மடி (2013), வார்தா (2016), ஒக்கி (2017), கஜா (2018) ஃபனி (2019) எனக் கடந்த 12 ஆண்டுகளில் சிறிதும் பெரிதுமாகப் பல புயல்கள் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டிருக்கின்றன.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றாக முந்தைய காலங்களைவிடப் புயல்கள் தீவிரமடைந்திருப்பதும் புயல்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்திருப்பதும் மக்களின் வாழ்விலும், அரசாங்கத்தின் பல நிலைகளிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.
இயற்கைப் பேரிடர் என்பதைத் தாண்டி மோசமான உள்கட்டமைப்பு, அரசு நிர்வாகச் சீர்கேடுகள் போன்ற காரணங்களால் சென்னைப் பெருவெள்ளம் போன்ற பேரிடர்களும் நிகழ்கின்றன.
போராட்ட முன்மாதிரி: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 2011 செப்டம்பரில் தொடங்கிய போராட்டம், சமரசமற்ற சமகால மக்கள் போராட்டத்துக்கான முன்மாதிரியை இந்தியாவுக்கு உணர்த்தியது. 1,000 நாட்களுக்கும் மேலாகப் போராடிய மக்களைக் காவல் துறை கொண்டு ஒடுக்கியது அரசு.
அணு உலை முற்றுகையை அறிவித்து, கடற்கரை வழியே பேரணியாக வந்த இடிந்தகரை மக்களைக் காவல் துறை அடித்து நொறுக்கியது. போராட்டக்காரர்கள் மீது குண்டர் சட்டம், தேசத் துரோக வழக்குகள் பாய்ந்தன. ஆனால், எதிர்ப்புகளால் கூடங்குளம் அணு உலையின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
பலி கொண்ட ஸ்டெர்லைட்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராகவும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் நடைபெற்றுவந்த போராட்டம் 100ஆவது நாளை எட்டியதால், பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப் போராட்டக் குழுவினர் முடிவெடுத்தனர்.
இந்தப் பேரணிக்குத் தடை விதித்து, 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது. தடையை மீறி 2018 மே 22 அன்று பேரணி சென்ற மக்கள் மீது, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். தமிழக வரலாற்றில் விடுதலைக்கு முன்பும் பின்னரும் நடைபெற்ற போராட்டங்களில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவே முதன்முறை.
கூட்டு மனசாட்சிக்கு ஒரு கேள்வி: தேசிய அளவில் சமூக நீதியை முன்னெடுத்த தமிழ்நாட்டுக்குக் களங்கமாகக் கடந்த பத்தாண்டுகளில் பரவலாகியிருக்கின்றன சாதி ஆவணப் படுகொலைகள். பட்டியல் இனத்தவரை மற்ற சாதியினர் திருமணம் செய்துகொள்ளும்போது சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்க முடியாத குடும்பத்தினர் கொலை செய்யும் நிலைக்கும் சென்றுவிடுகின்றனர்.
இந்தப் போக்கு தமிழ்நாட்டின் கூட்டு மனசாட்சியைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையில் ‘நாடகக் காதல்’ என அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகத் திரைப்படங்கள் வெளியாகும் சூழலும் எழுந்திருக்கிறது.
ஒரு மறைவும் தீராத சர்ச்சைகளும்: 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ஜெயலலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக 2016 செப்டம்பர் 22 அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி இரவு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஜெயலலிதாவின் மரணத்தை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது, அதிமுக இரட்டைத் தலைமை விவகாரம் என இன்று வரை தொடர்கின்றன சர்ச்சைகள்.
கருணாநிதி மறைவு: தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த மு.கருணாநிதியின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாக வரலாற்றில் பதிவானது. அரசியல், இலக்கியம், திரைப்படம், நாடகம், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் அழியாதத் தடம்பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர்.
கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, திமுக தலைவராகப் பொறுப்பேற்ற அவரது மகன் மு.க.ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தமிழக முதல்வரானார்.
நீட் எதிர்ப்பு: 2 பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூர் மாணவி அனிதாவின் (17) மருத்துவப் படிப்புக் கனவு, நீட் தேர்வால் கலைந்துபோனது. நீட் தேர்வை எதிர்த்து அனிதா நடத்திய சட்டப் போராட்டம் தோல்வியில் முடிந்ததால், மனமுடைந்த அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
நீட்டுக்கு எதிராகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இப்போதும் நுழைவுத்தேர்வுக்கு முன்பாகவும், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்திலும் தற்கொலைகள் தொடர்வது வேதனை.
தொகுப்பு: சு.அருண் பிரசாத்