

தாமரையின் ஆதிக்கம்: 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 282 தொகுதிகளை வென்று ஆட்சியமைத்தது. இந்தத் தேர்தலில் பாஜக வென்றதன் மூலம், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்தியப் பிரதமரானார்.
மோடியின் ஆட்சி மீது கடுமையான அதிருப்தியும் விமர்சனங்களும் வெளிப்பட்டாலும் 2019 மக்களவைத் தேர்தலில் முன்பைவிடக் கூடுதலாக 303 தொகுதிகளில் வென்று இரண்டாம் முறையாகத் தேஜகூ ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி இரண்டாம் முறையாகப் பிரதமரானார்.
நாடு முழுவதும் பாஜகவின் இந்துத்துவக் கொள்கையும் ஆதிக்கம் பெற்றுவருகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், மாட்டிறைச்சிக்கு எதிரான பசு குண்டர்கள், வரலாற்று நூல்களை மாற்றி எழுதுதல் என கலாச்சாரத் தளங்களில் இந்துத்துவத்தின் ஊடுருவல் பல தீவிர எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயில் தடம் பதித்த இந்தியா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2013இல் அனுப்பிய மங்கள்யான் விண்கலம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாகச் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து, செவ்வாய்க் கோளின் ஒளிப்படங்களை அனுப்பியது.
மிகக் குறைந்த செலவில் (ரூ.450 கோடி) செவ்வாய்க்கு விண்கலனை வெற்றிகரமாகச் செலுத்திய நாடு என்னும் பெருமை இந்தியாவுக்குக் கிடைத்தது. நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது விண்கலமான சந்திரயான் 2, 2019 ஜூலை 22 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், இந்த விண்கலம் நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் இலக்கை அடையத் தவறியது.
மதிப்பிழந்த ரொக்கப் பணம்: ‘கறுப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்னும் வாக்குறுதியை முதன்மையாக வைத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. 2016 நவம்பர் 8 அன்று இரவு 8 மணிக்கு நேரலையில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் அனைத்தும் உடனடியாக மதிப்பிழப்பதாக அறிவித்தார்.
இந்த உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாமல் போவதால், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்கள் மூலம் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் பொருளாதாரத்தை விட்டு வெளியேறும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கான நிதியாதாரம் தடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியது.
ஆனால், இந்த அதிரடி நடவடிக்கையால் நாடு முழுவதும் சிறுவியாபாரிகள் பெருத்த நஷ்டமடைந்தனர், மக்கள் அவதிப்பட்டனர். தம்மிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு முன்பும் தினசரித் தேவைக்குப் பணம் எடுக்க ஏடிஎம்களிலும் நெடிய வரிசைகளில் மக்கள் காத்திருக்க நேரிட்டது.
ஒற்றை வரிவிதிப்பு முறை: ஒரே நாடு.. ஒரே வரிவிதிப்பு முறை என்னும் முழக்கத்துடன் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை 2017 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொருட்கள் - சேவைகள் மீது மாநில அரசுகள் விதித்துவந்த வரிகளும் மறைமுக வரிகளும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
0%, 5%, 12%, 18%, 28% ஆகிய ஐந்து வரி அடுக்குகளில் அனைத்து பொருட்கள், சேவைகள் மீதான மறைமுக வரிகள் உள்ளடக்கப்பட்டன. பெட்ரோலியப் பொருட்கள், மதுபானங்கள், மின்சாரம் ஆகியவை மட்டும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு உட்படுத்தப்படாமல் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே தொடர்கின்றன.
உலுக்கும் பாலியல் வன்முறைகள்: கடந்த பத்தாண்டுகளில் பாலியல் வன்புணர்வு, பாலியல் குற்றங்கள் இந்தியாவில் பன்மடங்கு அதிகரித்துள்ளன. டெல்லியில் 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி, ஓட்டுநர் உள்ளிட்ட ஆறு பேரால் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
‘நிர்பயா’ என்றழைக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்கு நீதி வேண்டி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து குற்றவாளிகள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு, ஐவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. ஒருவர் 18 வயதை நிறைவுசெய்யாததால் குறைந்தபட்ச சிறைத் தண்டனையுடன் விடுவிக்கப்பட்டார்.
பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறவர் 18 வயதுக்குக் கீழானவராக இருந்தாலும், அவர் 18 வயதைக் கடந்தவராகவே நடத்தப்பட வேண்டும் என்பது உட்பட பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் நிகழ்வதற்கு நிர்பயா சம்பவம் காரணமானது.
ஆனாலும் உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் தலித் பெண், காஷ்மீரின் கத்வா பகுதியில் எட்டு வயதுச் சிறுமி எனப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
அந்தஸ்தை இழந்த காஷ்மீர்: ஜம்மு