Published : 20 Nov 2016 12:29 PM
Last Updated : 20 Nov 2016 12:29 PM

தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எனது கடமை! - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேட்டி

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 2015 ஜனவரியில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து இலங்கை அதிபரானார் மைத்ரிபால சிறிசேனா. சிறந்த நிர்வாகம், அதிபரின் அதிகாரக் குறைப்பு, தமிழர்களுடன் நல்லிணக்கம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மூலம் வெற்றிபெற்றவர் அவர். அவரது வெற்றி, இலங்கைக்குப் புதிய தொடக்கத்தைத் தரும் என்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏற்கெனவே இருக்கும் சவால்களுடன் புதிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். சீர்திருத்தச் செயல்திட்டத்துடன் இயங்கிவந்தாலும், அவரது தலைமையிலான, இலங்கை சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவு, இலங்கையின் முதல் தேசியக் கூட்டணி அரசில் ஏற்பட்டிருக்கும் முரண்கள், வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் என்று பல்வேறு சவால்கள் அவர் முன்னே இருக்கின்றன.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய இந்த அணி, மாற்றத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகப் பேசினீர்கள். அதைப் பற்றித் தற்போது என்ன நினைக்கிறீர்கள்? ஒரு அதிபராக உங்கள் மிகப் பெரிய வெற்றியாக எதைக் கருதுகிறீர்கள்?

நான் அதிபராகி 22 மாதங்களாகிவிட்டன. இதுவரையிலான எனது செயல்பாடுகளில் எனக்குத் திருப்தி உண்டு. அதற்குக் காரணங்களும் உண்டு. முதலில், அரசியல் சட்டத்தின் 19-வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் நான் வெற்றியடைந்திருக்கிறேன். ராஜபக்ச ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட 18-வது திருத்தச் சட்டத்தின் மூலம், அதிபருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கும் சட்டங்களைத் திரும்பப் பெறுவது இந்தச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

சுதந்திரமான ஆணையங்கள் நிறுவப்பட்டது இன்னொரு காரணம். மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள், மக்களின் சுதந்திரம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்வது அவசியமானது. இந்த உரிமைகள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்திருக்கிறேன். ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவது, கடத்தப்படுவது போன்ற சம்பவங்களோ அவர்களுக்கு அச்சுறுத்தல்களோ இல்லை. இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற ஊடகவியலாளர்களும்கூட இப்போது நாடு திரும்பியிருக்கிறார்கள்.

மக்கள் என்னை அதிபராக்கியபோது, அவர்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைக் கேட்கவில்லை. சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழத் தகுந்த சமுதாயத்தைத்தான் கேட்டனர். மக்களுக்கு அதைக் கொடுத்திருக்கிறேன். படித்த, அறிவார்த்தமான மக்களைக் கொண்ட ஒரு முன்னேறிய சமூகத்துக்கே இவை வழங்கப்பட வேண்டும். அறிவார்த்தமான மக்களால்தான் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பொறுப்புடன் பயன்படுத்திக்கொள்ள முடியும். நேர்மையான சிந்தனை இல்லாதவர்களால் இவற்றின் மதிப்பை உணர முடியாது. அவர்கள் இந்த உரிமைகளால் மகிழ்ச்சியடைவதில்லை. சமூகத்தைத் தவறாக வழிநடத்தவே சுதந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். மேற்கத்திய சமூகங்களுக்கு இந்த உரிமைகள் கொடுக்கப்பட்டால், அவர்கள் அவற்றை அனுபவித்து வாழ்வார்கள். அவர்களது அறிவுசார் திறன்கள் அப்படி! அறிவுத் திறன்களில் ஒருகாலத்தில் நாமும் மேற்கத்திய நாடுகளின் மக்களைவிட முன்னேறியிருந்தவர்கள்தானே! மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், ஜனநாயக உரிமைகள், சுதந்திரம் என்று மக்களுக்கு நாங்கள் வழங்கியிருக்கும் உரிமைகளை மக்கள் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ‘போரின்போது ஆணைகள் பிறப்பித்தவர்கள் சர்வதேச நீதிமன்றங்களுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்; அவர்களுக்கு மரண தண்டனைகூடக் கிடைக்கலாம்; மின்சார நாற்காலியில் அவர்கள் அமர வேண்டியிருக்கும்’ என்றெல்லாம் ஒரு பயம் இருந்தது. ஒருபுறம், இலங்கை மீதான தங்களின் பார்வையையே மாற்றிக்கொள்ளும் அளவுக்கு, எனது செயல்பாடுகளில் சர்வதேசச் சமுதாயத்துக்கு நல்ல திருப்தியை உருவாக்கியிருக்கும் அதேசமயம், மறுபுறம் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான அச்சுறுத்தல் சூழலையும் அகற்றியிருக்கிறேன். மின்சார நாற்காலியைப் பற்றி இன்று யாரும் பேச வேண்டியதில்லை. எங்கள் உள்நாட்டு விஷயங்களில் சர்வதேச நீதிபதிகள் விசாரணை நடத்துவது தொடர்பான எந்த யோசனையையும் ஏற்க முடியாது என்று சர்வதேசச் சமுதாயத்துக்குச் சொல்லிவிட்டேன். இந்தக் காலகட்டத்தில் நான் சாதித்த மகத்தான இன்னொரு வெற்றி இது!

தனது ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் மீதமிருந்த நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே தேர்தல் நடத்தினார். இதற்கு இரண்டு காரணங்கள். ஒரு அதிபராக அவரால் இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியவில்லை. முதலாவது, இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகள். இரண்டாவது, இலங்கை அப்போது கடன் சுமையில் இருந்தது. இலங்கையின் தேசியக் கடன் 9,000 பில்லியன் ரூபாயாக இருந்தது. இப்போது இந்த இரு பிரச்சினைகளையும் வெற்றிகரமாகக் கையாண்டுவருகிறோம்.

பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த என்ன செய்திருக்கிறீர்கள்?

இலங்கை ஒரு கலப்புப் பொருளாதார நாடு என்றே நான் நம்புகிறேன். முதலாவதாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளின் அதிகரிப்பு. தற்போது முதலீட்டாளர்களை வரவேற்கும் வகையில் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறோம். வரி, விடுமுறை உட்பட பல்வேறு சலுகைகளை அவர்களுக்கு வழங்குகிறோம். இரண்டாவது, சரிந்துகொண்டிருந்த ஏற்றுமதியைத் தூக்கி நிறுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.

எங்கள் நாடு அடிப்படையில் ஒரு விவசாய நாடு. ஆகையால், உள்நாட்டுத் தயாரிப்பின் அடிப்படையில் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டத்துக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம்.

பொருளாதாரம் பற்றிப் பேசுகிறீர்கள். உங்கள் அறையில் கார்ல் மார்க்ஸின் படம் இருப்பதாகப் படித்திருக்கிறேன். வலதுசாரிக் கொள்கைகள் கொண்ட கட்சியாகக் கருதப்படும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தற்போது கூட்டணியில் இருக்கிறீர்கள். இடதுசாரிப் பின்னணி கொண்டவர் என்ற முறையில், உங்கள் அரசு விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தைப் பாதுகாப்பதுடன், பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது எப்படி என்று நினைக்கிறீர்கள்?

இரண்டு பெரிய கட்சிகளின் பரஸ்பர ஒப்புதலுடன் இயங்கும் அரசு இது. கண்ணோட்டம், கொள்கை ஆகியவற்றில் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒற்றுமையும், மாற்றுக் கருத்துகளும் உண்டு. தற்போது நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், 50 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் போன்றவை அல்ல. உலகம், வேகமாக மாறிவருகிறது. கலப்புப் பொருளாதாரம்தான் நாட்டுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். சமூக ஜனநாயகம்தான் எனது பார்வை. இரண்டு முக்கியக் கட்சிகளும், பரஸ்பர சமன்பாட்டை ஏற்றுக்கொண்டுவிட்டோம். எங்களுக்குப் பெரிய அளவிலான முதலீடுகள் தேவை. அதுபோன்ற முதலீடுகள் இல்லாமல் பொருளாதார நெருக்கடியிலிருந்து எங்களால் வெளியே வர முடியாது. அதேசமயம், சமூக நலனையும் மானியங்களையும் மேம்படுத்துவதும் முக்கியமானது. சந்தைப் பொருளாதாரத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுவது ஏழைகள்தான். எளிய மக்களுக்காக, சமூக நலனையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

இந்த நோக்கத்தில் இரு கட்சிகள் இடையிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. எதுவானாலும் அமர்ந்து பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்கள் அரசு பலம் மிக்கது. அரசு கவிழ்க்கப்படலாம் என்று சிலர் நம்புகிறார்கள். அது பகல் கனவு.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்துக்கு நீங்கள் அடிக்கடி செல்கிறீர்கள். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்கள் சிலவற்றை விடுவித்ததுடன், வீடிழந்த மக்களுக்கான புதிய வீடுகளையும் திறந்துவைக்கிறீர்கள். ராணுவமயமாதல், அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது போன்ற தீர்க்கப்படாத பிரச்சினைகளுடன், நல்லிணக்க முயற்சிகள் விஷயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் கவலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நல்லிணக்கம் என்பது சில நாட்களில் செய்து முடிக்கக் கூடிய விஷயம் அல்ல. காலனி அரசிடமிருந்து 1948-ல் சுதந்திரம் பெற்றோம். முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1947-ல் நடந்தது. தொடக்க காலத்தில், ஒரு தேசியத் தலைவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்வது என்பது ஒரு அதிசய மாகப் பார்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கோ அல்லது வடக்குப் பகுதிக்கோ தலைவர்கள் எளிதில் செல்ல மாட்டார் கள். பதவிக்கு வந்த 22 மாதங்களில் யாழ்ப்பாணத்துக்கு 11 முறை சென்றிருக்கிறேன். இதுபோல் வேறு எந்தத் தலைவரும் இதற்கு முன்னர் வடக்குப் பிராந்தியத்துக்கு அடிக்கடி சென்றதில்லை. வடக்குப் பிராந்தியத்தின் தமிழ்த் தலைவர்களுடன் மட்டுமல்ல, தமிழ் மக்களுடனும் கலந்துரையாடுவதும், அவர்களது கருத்துகளை நேரடியாகக் கேட்டறிவதும் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன.

வடக்குப் பிராந்தியத்தில், மிக அதிகமான மக்கள் கிட்டத்தட்ட 90% பேர் எனக்கு வாக்களித்தனர். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு காண முடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எனது பொறுப்பு மட்டுமல்ல, கடமையும்கூட. தமிழர்களுக்காக அதிக எண்ணிக்கையிலான வீடுகளை உருவாக்கிவருகிறோம். வீடுகள் கட்டுவதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியைப் பெறுகிறோம். அதேசமயம், போரின்போது ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை, அவற்றின் உரிமையாளர்களுக்குப் படிப்படியாகத் திருப்பி அளித்துவருகிறோம்.

புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதைப் பொறுத்த வரை - சமூகங்களுக்கு இடையே சமரசத்தைப் பலப்படுத் தும் வகையிலான அரசியல் சட்டத்தையே உருவாக்க நினைக்கிறோம். தெற்குப் பகுதியில் உள்ள சிங்கள - புத்த மதத்தினரும் திருப்தியடையும் வகையில் இந்த விஷயங்கள் செய்து முடிக்கப்பட வேண்டியிருக்கிறது. தெற்குப் பகுதி மக்கள் சில விஷயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித் தால், வெற்றிகரமான சமரசத் திட்டங்களைச் செய்துவிட முடியாது. எனவே, சமரசம் தொடர்பான எங்கள் முயற்சிகள் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பிற சமூகத்தினரால் கட்டாயம் ஏற்கப்படவும் வேண்டும். இது எளிதான வேலை அல்ல. ஆனால், சவால் மிக்க இந்தப் பணியை நாம் செய்தாக வேண்டும். இலங்கையில் மீண்டும் மோதல்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளை நாம் அனுமதிக்கக் கூடாது.

வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிப் பேசினீர்கள். பொறுப்புக்கூறல் இல்லாமல் சமரசத்தை மேற்கொள்ள முடியுமா? உள்நாட்டு நீதி அமைப்புகள் மீது அத்தனை நம்பிக்கை இல்லாத தமிழர்களிடம் - ‘உள்நாட்டு விசாரணை நியாயமாக நடக்கும்’ என்று சொல்லி, எப்படி உங்களால் நம்பச் செய்ய முடியும்?

நீதியமைப்பின் தரத்தையும், அதன் சுதந்திரத் தன்மை யையும், பாரபட்சமற்ற தன்மையையும் மேம்படுத்தி யிருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, இலங்கையின் நீதித் துறை பலவீனமாக இருந்தது. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைமை நீதிபதியாக நாங்கள் நியமித்ததற்கு முக்கியக் காரணம், அவர்களிடம் நீதி அமைப்புகள் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான்.

எனக்கு முன்னால் ஆட்சியில் இருந்த தலைவர்கள், எந்த மாதிரியான தீர்ப்பளிக்க வேண்டும் என்று நீதிபதிகளுக்குத் தொலைபேசி மூலம் உத்தரவிடுவது உண்டு. சிலர் மீதான முக்கியமான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டிருக்கின்றன. நாங்கள் நீதித் துறையில் தலையிடுவதில்லை. நீதித் துறையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதில்லை. நீதித் துறையின் தரம், சுதந்திரத்தன்மை, பாரபட்சத் தன்மையை மேம்படுத்திவருகிறோம். வெளிநாடுகளைச் சேர்ந்த நீதித் துறை நிபுணர்களிடம் நாங்கள் அறிவுரை பெற முடியும். அதேசமயம், அரசியல் சட்ட விதிமுறைகளின்படி, எங்கள் நீதித் துறை செயல்பாட்டிலோ, வழக்குகள் நடத்துவதிலோ வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பது சாத்தியமில்லை. வடக்குப் பிராந்திய மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெறும் வகையிலான நீதி அமைப்பை நாங்கள்தான் உருவாக்க வேண்டும்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் அரசியல் சட்டச் சீர்திருத்தத்தில், கூட்டாட்சி தொடர்பாக தமிழர்களிடமிருந்து கோரிக்கை உள்ளது. அதைப் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றும் என்று கருதுகிறீர்களா? தெற்குப் பகுதியைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் ஒற்றையாட்சி அரசியல் சட்டம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேசமயம், அரசியல் சட்டத்தை ஒற்றையாட்சி என்றோ, கூட்டாட்சி என்றோ குறிப்பிட வேண்டாம் என்று அரசியல் சட்ட நிபுணர்கள் சிலர் கருதுகிறார்கள்…

கூட்டாட்சி எனும் வார்த்தை தெற்குப் பகுதி மக்களை அச்சமடையச் செய்கிறது. வடக்குப் பகுதி மக்கள் ‘ஒற்றையாட்சி’ எனும் வார்த்தையைக் கண்டு அஞ்சுகிறார்கள். நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு வழிமுறையைக் கண்டுபிடிப்பதே. அதிகாரப் பகிர்வைப் புரிந்துகொள்ள முதிர்ச்சித் தன்மை தேவை. வடக்கிலோ தெற்கிலோ தீவிரவாத சக்திகளை நம்மால் திருப்திப்படுத்த முடியாது. பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க அவர்களுக்கு நன்மை தரத்தக்க விஷயங்களை நாம் அவசியம் செய்ய வேண்டும்.

இலங்கை சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகள் பற்றி…

என்னால் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தங்களோ, தலையீடுகளோ கட்சிக்குள் இல்லை. எங்கள் திட்டங்களில் இடையூறு ஏற்படுத்துவதும், அவற்றைக் குலைப்பதும்தான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம். அரசின் திட்டங்கள் வெற்றி பெறும்போது, அது எதிர்க்கட்சிகளின் தோல்வியாக ஆகிவிடுகிறது. கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிரச்சினைகளுக்கு எங்களால் தீர்வு காண முடியும்.

இந்தியா - இலங்கை இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடுகளின் அடிப்படையில், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் துரிதப்படுத்துவது சரி என்று கருதுகிறீர்களா? இலங்கையில் கணிசமானவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே...

பழங்காலத்திலிருந்தே இந்தியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையில் ஏராளமான ஒற்றுமைகள், கலாச்சாரங்கள் உண்டு. எந்த நாட்டுக்கும் பாதகம் தரும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

இந்தியாவும் இலங்கையும் புதிய பொருளாதார ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்ற யோசனை கடந்த 10-15 ஆண்டுகளாக உண்டு. இது தொடர்பான ஆய்வுகளும் பேச்சுவார்த்தைகளும் வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்து நடந்துவந்தன. இரு தரப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டிவிடுவோம். அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும். நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும். எதையும் நாங்கள் ரகசியமாகச் செய்யவில்லை. மக்களுக்கு வெளிப்படையான, பொறுப்பு மிக்க அரசாக இருக்கிறோம்.

உள்நாட்டு எதிர்ப்புகளுக்கு மத்தியில், சீனத் துறைமுக நகரத் திட்டத்துக்கான பணிகள் உங்கள் ஆட்சியில் தொடங்கின. சீனா தொடர்பான உங்கள் அரசின் கொள்கை, ராஜபக்ச அரசின் கொள்கையிலிருந்து எவ்விதம் வேறுபட்டது?

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் கையழுத்திடப்பட்டபோது, அது அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாக இருந்தது. இதுபோன்ற எந்த ஒப்பந்தத்தையும் அதற்கு முன் இருந்த அரசுகள் ஏற்படுத்திக்கொண்டதில்லை. எங்கள் அரசில் அந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட சில உட்பிரிவுகளில் நாங்கள் திருத்தங்கள் செய்தோம். இதுபோன்ற ஒப்பந்தத்தில், தேசியப் பாதுகாப்பின் முக்கியத்துவமும், பிராந்தியப் பாதுகாப்பின் முக்கியத்துவமும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

சீனாவும் சரி, இந்தியாவும் சரி, இரண்டு நாடுகளும் எங்களுக்கு நல்ல நண்பர்கள். இரண்டு நாடுகளுடனான இலங்கையின் உறவு பழங்காலத்திலிருந்து தொடர்கிறது. எனவே, இதுபோன்ற ஒப்பந்தங்கள் சரியான புரிதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற ஒப்பந்தங்கள் எங்கள் நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக இருக்கக் கூடாது.

பொருத்தமில்லாத உட்பிரிவுகளை நீக்கி, இரு தரப்புக்கும் சிறந்ததாக இந்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கு எனது அரசால், சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது. முந்தைய அரசு இதுபோன்ற ஒப்பந்தங்களை ரகசியமாகக் கையாண்டது. ஆனால், நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகிறோம்.

முந்தைய அதிபரின் குடும்பத்தினர் தொடர்புடைய மிக முக்கியமான சில வழக்குகளின் விசாரணை விரைவாக நடத்தப்படவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஏன் அப்படிக் கருதுகிறீர்கள்?

கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். முற்றிலும் ஊழல்மயமான ஆட்சியைத் தோற்கடித்து, மக்கள் எனக்குப் பெரும்பான்மையை வழங்கியிருக்கிறார்கள். என்னிடம் சில விஷயங்களை எதிர்பார்த்துத்தான் மக்கள் என்னை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். ஊழலற்ற, நல்ல நிர்வாகம் வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். நல்ல நிர்வாகம் என்பது, செல்வாக்கு மிக்கவர்களைத் தப்பிக்க விட்டுவிட்டு, சாமானிய மக்களைத் தண்டிப்பது அல்ல. அதனால்தான், ‘அரசியல் நோக்கத்துடன் செயல்படாதீர்கள்’ என்று விசாரணை அமைப்புகளிடம் நான் சொல்ல வேண்டி வந்தது. இந்த (விசாரணை) ஆணையங்களின் உறுப்பினர்கள் திறமை வாய்ந்தவர்கள். சுதந்திரமாகவும், பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுகிறார்கள். கீழ் நிலையில் உள்ளவர்களும் அதேபோல் நடந்துகொள்ள வேண்டும். சில பிரச்சினைகள் இருந்ததால்தான் அப்படி ஒரு கருத்தை நான் சொல்ல வேண்டிவந்தது. எனது நடவடிக்கைகளின் மூலம் விசாரணையைச் சரியான திசையில் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். எனக்கென்று தனிப்பட்ட நோக்கங்கள் கிடையாது. எனது நாடுதான் எனது நோக்கம்!

ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புடைய வாசிம் தாஜுதீன் கொலை வழக்கு, துபாய் வங்கியில் செலுத்தப்பட்டிருக்கும் பணம், ‘அவந்த் கார்டே’ நிறுவன விசாரணை போன்றவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள்...

இதுபோன்ற விசாரணைகளில் அழுத்தம் கொடுக்கப் படுவது அல்லது தாமதப்படுத்தப்படுவது என் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. இப்படியான அழுத்தங்கள் தொடர்பாக எனக்குச் சந்தேகங்கள் உண்டு. அதனால்தான் நான் வெளிப்படையாகப் பேசுகிறேன்.

வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எங்கள் அரசு சர்வதேச உறவுகளில் புதிய பக்கத்தைத் திறந்துவைத்திருக்கிறது. நான் பொறுப்பேற்பதற்கு முன்னர் சர்வதேசச் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத நாடாக இருந்தது இலங்கை. தற்போது உலகின் எல்லா நாடுகளும் எங்கள் நண்பர்கள் என்று நம்புகிறேன். சர்வதேசச் சமுதாயத்திடமிருந்து நான் பெற்றிருக்கும் ஆதரவு எனது வெற்றி என்று கருதுகிறேன். இது எங்கள் நாட்டின் வெற்றி; மக்களின் வெற்றி மட்டுமல்ல, எனது தனிப்பட்ட வெற்றியும் கூட. இன்றைய சூழலில், சர்வதேசச் சமுதாயத்தில் எதிரிகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் எந்த ஒரு நாடும் வளர்ச்சியடைய முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, இத்தனை ஆண்டுகளாக நாங்கள் பெருமையுடன் கருதிவந்த இந்தியாவுடனான உறவும்கூடப் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது இவை அனைத்தும் மேம்பட்டிருக்கின்றன.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x