மனிதாபிமானத்தின் மருத்துவ முகம்!

மனிதாபிமானத்தின் மருத்துவ முகம்!
Updated on
2 min read

ரூ.20-க்கு மருத்துவம் செய்து மகத்தான சேவைபுரிந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன்

ஒரு மருத்துவரின் இறுதி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பேர் கூடுவார்களா? கோவை மக்கள் மருத்துவர் வி.பாலசுப்பிரமணியனுக்குச் செலுத்திய அஞ்சலி இந்தியாவையே நெகிழ்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

யார் இந்த பாலசுப்பிரமணியன்? மக்களுக்கு அப்படி என்ன அவர் மீது ஒரு அன்பும் மரியாதையும்? கோவை சித்தாபுதூர், பாலாஜி நகர் மெயின் ரோட்டில் 10-க்கு 10 சதுர அடி வாடகைக் கட்டிடத்தில் மருத்துவ மையம் நடத்திவந்தவர் வி.பாலசுப்பிரமணியன். எளிய பின்னணி கொண்டவர். 1951-ல் கம்பம் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். குடும்பத்தில் இவர்தான் முதல் மருத்துவர். சித்தர்கள் மரபு மீது மிகுந்த பற்று கொண்டவர். அதன் வழி மருத்துவத்தைச் சேவையாகப் பின்பற்றிவந்ததாகச் சொல்கிறார்கள். கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பொது மருத்துவராகப் பணியாற்றியவர், பின்னர் மருத்துவக் கண்காணிப்பாளராக பதவி வகித்து ஓய்வுபெற்றார். பணி ஓய்வுக்குப் பின்பு தன் வீட்டிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் குறிப்பிட்ட இடத்தில் மருத்துவ மையத்தைத் தொடங்கினார்.

ரூ.2-க்குச் சிகிச்சை

உண்மையில் நம்பவே முடியாத சேவை இவருடையது. ஆரம்பத்தில் ரூ.2-க்கு வைத்தியம் பார்த்து ஊசி, மருந்து மாத்திரைகள் அளித்துவந்துள்ளார். குறைந்த கட்டணத்தில் பரிவுடன் சிகிச்சை அளித்த பாலசுப்பிரமணியன் ஏழை மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரது சிகிச்சையில் விரைவாகக் குணமடைந்த நோயாளிகள் அவரைப் பற்றித் தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவிக்க வெளியூர்களிலிருந்தெல்லாம் நோயாளிகள் இங்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது 250 முதல் 300 பேருக்கு மருத்துவம் பார்த்துவந்துள்ளார் பாலசுப்பிரமணியன்.

தன்னை நாடி வருபவர்களுக்கு தனது அலைபேசி எண்ணைக் கொடுத்துவிடுவார். தங்களுக்கோ தங்கள் உறவினர்களுக்கோ உடல்நிலை சரியில்லை என்று அழைத்துப் பேசுபவர்களிடம், முழுமையாக விசாரித்து இன்ன மருந்தை வாங்கி சாப்பிடுமாறு சொல்வார். அவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருந்தால், ஒரு தாளில் மருந்தின் பெயரை ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி எழுதவைத்து அந்த மருந்தை வாங்கி உட்கொள்ளுமாறு சொல்வது வழக்கம். குணமாகவில்லை என்றால் தனது மருத்துவ மையத்துக்கு நேரில் வருமாறு அழைப்பார்.

மருத்துவ மையம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்களாகவே பார்த்துத்தான் மருத்துவக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். “இத்தனை சிறிய தொகை வாங்குவது சரியல்ல. சில்லறையும் கிடைப்பதில்லை” என்று கட்டணத்தை ரூ.10 ஆக மாற்றியிருக்கிறார்கள். இந்தக் ‘கட்டண உயர்வு’க்கேற்ப மருந்து மாத்திரைகளையும் கூடுதலாகத் தர ஆரம்பித்துள்ளார் பாலசுப்பிரமணியன். சில ஆண்டுகளுக்கு முன்னரே இது ரூ.20 ஆக உயர்ந்திருக்கிறது காலச் சூழலுக்கேற்ப. “இவ்வளவு குறைச்சலாக கட்டணம் வாங்குகிறீர்களே டாக்டர்… கட்டுபடியாகுமா?” என்று கேட்ட நோயாளிகளுக்கெல்லாம் பாலசுப்பிரமணியன் அளித்த பதில்: “பெரிசா பணத்தை வாங்கி என்ன செய்யப்போறேன்?” என்பதுதான். இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், முதியோர்கள், குழந்தைகளுக்கு கட்டணமில்லா மருத்துவச் சேவையையே பாலசுப்பிரமணியன் அளித்துவந்தார் என்பது.

கட்டணமில்லாச் சான்றிதழ்

கோவையில் இவரது மருத்துவ மையத்துக்கு அருகில்தான் மின் மயானம் உள்ளது. அங்கே மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் உடலை எரிக்க முடியாது. இறந்தவரின் உறவுக்காரர்கள் மருத்துவர்களிடம் மருத்துவச் சான்றிதழ் பெற பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அன்றாடம் தன்னைப் பார்க்க வரும் ஏராளமான கூட்டத்தின் நடுவே இப்படிச் சான்றிதழ் தேவையோடு வருபவர்களையும் கவனித்து, விசாரித்து முறையாக அவர்களுக்குச் சான்றிதழ் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் பாலசுப்பிரமணியன். பொதுவாக இதற்கென அவர் கட்டணம் வாங்கியதில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் அவர் காலமானார். அந்தச் செய்தி வந்த அடுத்த நிமிஷம் அவரது வீட்டின் முன்னும் மருத்துவ மையத்தின் முன்னும் பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. பலர் மருத்துவ மையத்தின் வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினர். தங்கள் துக்கத்தை வார்த்தைகளால் வடித்த 'கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்' நகரின் பெரும்பான்மைச் சுவர்களை நிறைத்தன. இறுதி யாத்திரை ரதத்தைத் தாங்கள் கொண்டுவந்த மலர் மாலைகளால் மக்களே அலங்கரித்தனர். அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களுக்கும் எங்கெங்கிருந்தோ வந்து டீக்கடைக்காரர்கள் காசு வாங்காமல் டீயை விநியோகித்தனர். இன்னொரு பக்கம் ஒரு பிரிவினர் தண்ணீர் போத்தல்களை விநியோகித்தனர். கிட்டத்தட்ட நெருக்கமான உறவினர் ஒருவரின் துக்கத்துக்கு வந்ததுபோலத்தான் இருந்தது மக்களின் மனநிலை.

தன் அப்பாவைப் பற்றிக் கூறுகையில் "யார் என்ன படித்திருந்தாலும்; எந்தத் துறையில் பணிபுரிந்தாலும் தன்னை நாடிவரும் அடித்தட்டு மக்களுக்கு தேவையானதைத் தன்னால் இயன்ற அளவு செய்ய வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன் என்பதைத்தான் அப்பா அடிக்கடி சொல்வார்!" என்றார் அவரது மகள் ப்ரியா.

இது பாலசுப்பிரமணியனின் பிள்ளைகளுக்கு மட்டுமான செய்தி அல்ல!

- கா.சு.வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in