

இந்தியச் சிறைகளில் ஏறக்குறைய 77% சிறைவாசிகள் விசாரணைக் கைதிகளாக இருக்கிறார்கள் என்ற தகவலைத் தாங்கி வெளிவந்திருக்கிறது சமீபத்தில் வெளியான இந்திய நீதி அறிக்கை.
நீதித் துறை சீர்திருத்தம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையானது, தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் இந்தியச் சிறைகளைப் பற்றிய புள்ளிவிவரங்கள்-2021ஐ அடிப்படையாகக்கொண்டு, நீதித் துறையின் விசாரணை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் தேக்க நிலையை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தியத் தலைநகரான டெல்லியில் உள்ள சிறைகளில், பத்தில் ஒன்பது பேர் விசாரணைக் கைதிகளாக இருக்கிறார்கள். கடந்த 2021 டிசம்பர் நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைகளில் கொள்ளளவைக் காட்டிலும் அதிக சிறைவாசிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இந்திய நீதி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்னால் 2010இல் 2.4 லட்சமாக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை, 2021இல் 4.3 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 11,490 பேர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக இருக்கிறார்கள். மூன்று ஆண்டிலிருந்து ஐந்தாண்டுகள் வரையில் சிறையிலிருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 24,003.
இந்தத் தகவல்கள் அனைத்தும், குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் உள்ள நடைமுறைகளைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. அதிலும் குறிப்பாக, விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களில் பெரும் பகுதி வழக்குச் செலவுகளுக்கு வழியற்றவர்களாக இருப்பதாலேயே பிணையில் வெளிவரும் வாய்ப்புகளைப் பெற இயலாமல் உள்ளனர் என்பது துரதிர்ஷ்டம்.
இந்திய அளவில் பட்டியலினத்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 16.6% ஆக இருக்கும்நிலையில், தடுப்புக்காவலில் உள்ளவர்களில் பட்டியலினத்தவர்களின் விகிதாச்சாரம் சுமார் 23% வரையிலும் இருக்கிறது. பிணையில் வெளிவருவதற்குச் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வதற்கான பொருளாதார வசதிகளை அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பதே இதற்கான முதன்மைக் காரணம்.
தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள சிறைவாசிகளில் பட்டியலினத்தவர்களின் விகிதாச்சாரம் 30% ஆக இருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் அவர்களது எண்ணிக்கை 20% ஆக இருக்கும்நிலையில், சிறைவாசிகளின் எண்ணிக்கையில் அவர்கள் அதிகளவில் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் பிணை முயற்சிகளுக்கான வாய்ப்புகளின்மையே. தமிழ்நாட்டில் தடுப்புக்காவலில் இருப்பவர்களில் பட்டியலினத்தவர்களின் விகிதாச்சாரம் 37% ஆக உள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில்தான் பட்டியலினத்தவர்களின் மக்கள்தொகைக்கும் சிறைவாசிகளில் அவர்களின் விகிதாச்சாரத்துக்கும் பொருந்தாத்தன்மை நிலவுகிறது. குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் பட்டியலினத்தவர்கள் இலவச சட்ட உதவிகளைப் பெறுவதை உறுதிப்படுத்துவதன் தேவையையே இது எடுத்துக்காட்டுகிறது.
பிரிட்டன் பிணைச் சட்டங்களை உதாரணம் காட்டி இந்தியாவிலும் அப்படியொரு சட்டத்துக்கான தேவையிருப்பதை அண்மையில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது; பிணை மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கீழமை நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியது. பிணை நடைமுறைகள் குறித்து நாடாளுமன்றம் விரைந்து சட்டமியற்ற வேண்டிய தேவையையே தற்போது வெளிவந்திருக்கும் இந்திய நீதி அறிக்கையின் தகவல்களும் உணர்த்துகின்றன.