

பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956 இன் பிரிவு 2 (F), பல்கலைக்கழகம் என்றால் என்ன என்று வரையறுக்கிறது.
பல்கலைக்கழகம் என்பது மத்திய (அரசு) சட்டம் அல்லது மாகாணச் சட்டம் அல்லது மாநிலச் சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினாலோ அல்லது அதன் கீழாகவோ நிறுவப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட கல்வி நிறுவனம்.
இந்தச் சட்டத்தில் உள்ள ஏற்பாட்டின்படி யுஜிசியால் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களையும் இது உள்ளடக்குகிறது.
யுஜிசி சட்டத்தின் பிரிவு 22 மத்திய அரசு, மாகாண அரசு, மாநில அரசு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம், அல்லது இந்தச் சட்டப் பிரிவின் 3 இன்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஆகியவை மட்டுமே மாணவர்களுக்குப் பட்டம் வழங்கும் உரிமையைப் பெற்றவை.
மேற்கூறிய அளவுகோல்களை நிறைவேற்றாத எந்த நிறுவனமும் மாணவர்களுக்குப் பட்டம் வழங்குவதை யுஜிசியின் பிரிவு 23 தடை செய்கிறது. இந்த அளவுகோல்களை நிறைவேற்றாமல் மாணவர்களுக்குச் சட்டப்படி செல்லுபடி ஆகாத பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களே போலிப் பல்கலைக்கழகங்கள் ஆகும்.
போலிப் பல்கலைக்கழகங்களை யுஜிசி எப்படிக் கண்டறிகிறது?: அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வழியாகவும் மாணவர்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மூலமாகவும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் குறிப்புகளிலிருந்தும் நீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்தும் போலிப் பல்கலைக்கழகங்கள் யுஜிசியின் கவனத்துக்கு வருகின்றன.
யுஜிசியின் முறைகேடு தடுப்புப் பிரிவு (Anti Malpractice Cell) 1996 மே 30இலிருந்து இயங்கிவருகிறது. யுஜிசி சட்டத்துக்கு எதிராக இருக்கும் அல்லது செயல்படும் அங்கீகாரம் பெறாத போலிப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் இந்தப் பிரிவுதான் கையாள்கிறது. போலியான, அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்களைத் தடுப்பதற்கு முறைகேடு தடுப்புப் பிரிவு மத்திய, மாநில அரசுகளின் வெவ்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறது.
மேலும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளை யுஜிசி சட்டத்தை மீறும் கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைவிடுக்கிறது. யுஜிசி சட்டத்துக்குப் புறம்பாக ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் மாணவர்களுக்குப் பட்டம் வழங்குவது தெரியவந்தால், உடனடியாக அது குறித்து யுஜிசிக்குப் புகாரளிக்க வேண்டும் என்று மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
போலிப் பல்கலைக்கழகங்களாக அடையாளப்படுத் தப்பட்ட நிறுவனங்களை யுஜிசி என்ன செய்யும்?: செல்லாத பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கும் அங்கீகரிக்கப்படாத போலிப் பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்பு/எச்சரிக்கை அறிக்கையை யுஜிசி அனுப்பும்.
போலிப் பல்கலைக்கழகம் என்று அடையாளப்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஊடகங்களிலும் பொதுமக்களுக்கான அறிவிப்புகளாகவும் வெளியிடும். தமது அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் போலிப் பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள், கல்வித் துறைச் செயலர்கள், முதன்மைச் செயலர்கள் ஆகியோருக்கு யுஜிசியிடமிருந்து கடிதங்கள் அனுப்பப்படும்.
அதிகாரபூர்வ இணையதளங்களில் தகவல்: யுஜிசி இதுபோல் நாடு முழுவதிலும் உள்ள போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை அவ்வப்போது வெளியிடுகிறது. 2021இல் வெளியிடப்பட்ட பட்டியலில் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
யுஜிசியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://www.ugc.ac.in/page/Fake-Universities.aspx) போலிப் பல்கலைக்கழகங்கள்/கல்வி நிறுவனங்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும். மாணவர்களும் பொதுமக்களும் இவற்றைக் கண்டு தெளிவுபெறலாம். இந்தியாவில் இயங்கும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் யுஜிசி அல்லது அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகிய இரண்டு ஒழுங்காற்று அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.
பல்கலைக்கழகம் என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் எந்தவொரு கல்வி நிறுவனமும் யுஜிசியிடம் பதிவுசெய்திருக்க வேண்டும். யுஜிசியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும். அதேபோல் தொழில்நுட்ப, பொறியியல், மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும்.
மாற்றப்பட்ட இலச்சினைகள், குழப்பும் பெயர்கள்: சில போலிப் பல்கலைக்கழகங்களின் இணையதளங்களில் பல்கலைக்கழக ஒழுங்காற்று அமைப்புகளின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட இலச்சினை இடம்பெற்றிருக்கும். சில போலிப் பல்கலைக்கழகங்களின் பெயர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் குழப்பிக்கொள்ளக்கூடிய வகையில் அவற்றின் பெயரை ஒத்ததாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக டெல்லியில் இயங்கிவரும் ‘Indian Institution of Science and Engineering' என்னும் கல்வி நிறுவனம் போலிப் பல்கலைக்கழகம் என்று இந்த ஆண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் ‘IndianInstitute of Science' என்னும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. இதுபோன்ற போலிப் பல்கலைக்கழகங்கள் தமக்கென்று தனித்த வளாகங்கள், வகுப்பறைகள், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர் சேர்க்கையுடன் இயங்கிவருகின்றன.
இவை மாணவர்களிடம் பெரும் கட்டணம் வாங்கிக்கொண்டு பட்டமளிக்கின்றன. ஆனால், அந்தப் பட்டங்களால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. கொல்கத்தாவில் இயங்கிவரும் போலிப் பல்கலைக்கழகமான ‘Indian Institute of Alternative Medicine' ஆண்டுக்கு ரூ.25,000 கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, மருத்துவத்துக்கான எம்.பி.பி.எஸ். பட்டத்தை வழங்குகிறது.
மாணவர்கள் செய்ய வேண்டியவை: ஒரு மாணவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் சேரப்போகிறார் என்றால், அந்தக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறதா என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக்கழகம் யுஜிசி இணையதளத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக, கல்வி நிறுவன இணையதளங்களில் இடம்பெற்றிருக்கும் தேசியத் தரச்சான்றுகள் சரியானவையா என்பதை அந்தந்த தரச்சான்றுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இவற்றின் மூலமாக ஒரு பல்கலைக்கழகம் போலியானதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் யுஜிசியிடமிருந்து தகவலைக் கேட்டுப் பெறலாம். இதையெல்லாம் தாண்டி, ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு, அது போலியானது என்று ஒரு மாணவருக்குத் தெரியவந்தால், அவர் அந்த நிறுவனம் உண்மைக்குப் புறம்பான தகவலை தனக்கு அளித்திருப்பதற்கான சான்றுடன் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019இன்கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
தொகுப்பு: கோபால்