Published : 13 Sep 2022 07:10 AM
Last Updated : 13 Sep 2022 07:10 AM

முஸ்லிம் உள் இடஒதுக்கீடு: சட்ட மறுசீரமைப்பு நடக்குமா?

முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு கோரி, இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் குரல் எழுப்பியது; அது மிகவும் சன்னமாகவும் வலிமையற்றதாகவும் இருந்தது.

ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கான இளைஞர் அமைப்பு 1995இல் வீரியமாகவும் அழுத்தமாகவும் இடஒதுக்கீட்டுக்காகக் குரலெழுப்பியபோது, தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளான தி.மு.க.வும் - அ.தி.மு.க.வும் அதைப் பரிசீலிக்க முன்வந்தன.

2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தது அ.தி.மு.க. மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, 2007 செப்டம்பர் 15 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடாக 3.5%-ஐ முஸ்லிம்களுக்கும், 3.5%-ஐக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கியது.

இதைச் செயல்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஜனார்த்தனம் ஆணையத்துக்கு அரசு உத்தரவிட்டது. முன்னதாக 1982இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அம்பா சங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு, இடஒதுக்கீடு தொடர்பாக அரசுக்குச் சில பரிந்துரைகளை வழங்கியிருந்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என ஜனார்த்தனம் ஆணையம் பரிந்துரைத்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு: ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் மறைந்த முதல்வர் ராஜசேகர் ரெட்டி முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினார். ஆந்திரத்தில் ஏற்கெனவே 46% இடஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில், முஸ்லிம்களுக்கென 5% தனி இடஒதுக்கீடு அளித்தால், மொத்த இடஒதுக்கீடு 51%ஆக உயரும்.

அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாக அமையும் என்றும், புள்ளிவிவரங்களும் சரியாக இருக்காது என்று கோரியும் 5% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் இடஒதுக்கீட்டை ரத்துசெய்து உத்தரவிட்டது. பிறகு புதிய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், 1982 அம்பா சங்கர் அறிக்கையின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, 2007இல் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு எந்தளவுக்குச் சரியாக இருக்கும் என்ற கேள்வி உள்ளது. கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 3.5% இடஒதுக்கீட்டை ஆராய்ந்த கல்வியாளர்கள், கிறிஸ்தவச் சமூகம் இழப்பைச் சந்திக்கக் கூடும் என்பதால், தங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூறி, உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், முஸ்லிம் தலைவர்களோ, தங்களுக்கு வழங்கப்பட்ட 3.5% உள் இடஒதுக்கீடு குறித்த சரியான புரிதல் இல்லாமல், முஸ்லிம்களுக்குச் சிறப்புக்குரிய காரியத்தைச் செய்துகொடுத்ததுபோல் அரசியல் செய்துவிட்டனர். முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நலன்களைப் பற்றிச் சிந்திக்காமல், தங்கள் கட்சிக்கான அரசியல் லாபம் குறித்துச் சிந்தித்ததன் விளைவால் இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டது.

தேவை மறுசீரமைப்பு: 2007இல் முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே குளறுபடிகள் தொடங்கிவிட்டன. வேலைவாய்ப்பு சுழற்சிமுறையைக் காரணம்காட்டி, முஸ்லிம்கள் மொத்தமாக ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, இஸ்லாமியக் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்ததைத் தொடர்ந்து, அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியைச் சந்தித்து முறையிடப்பட்டது.

ஆகவே, தனி இடஒதுக்கீட்டைக் கண்காணிக்கத் தலைமைச் செயலாளர் தலைமையில் எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழு 2011 ஜனவரி 29 அன்று அமைக்கப்பட்டது. அதன்பின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, இக்குழு தொடரவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், இந்தப் பிரச்சினை குறித்துச் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் பேசினார். “உள் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஆனால், இன்று வரை அரசுப் பணியில் தேர்வானவர்களின் விவரம் குறித்துக் கேட்டால், அரசுத் தரப்பில் எந்தப் பதிலும் தரப்படவில்லை. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், காயிதே மில்லத்தின் பேரனும் கல்வியாளருமான எம்.ஜி.தாவூத்மியாகான் முதல்வருக்கு 2022 செப்டம்பர் 1 அன்று எழுதிய கடிதத்தில், ‘சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ உருவாக்கப்பட்ட உள் இடஒதுக்கீடு சட்டத்தால், முஸ்லிம் சமூகத்துக்கு இழப்புகளே அதிகம்.

ஆகவே, அரசின் தூய்மையான நோக்கம் நிறைவேறும் வகையில் 3.5% இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை மறுசீரமைப்பு செய்யுங்கள்’ எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்திய அளவில் அரசுப் பணிகளில் 3.2%, கல்வி, சுகாதாரத் துறைகளில் 3.5%-க்கும் மேலாகவும் முஸ்லிம்கள் உள்ளனர் என்று நீதிபதி சச்சார் அறிக்கை கூறுகிறது. தனி இடஒதுக்கீடு ஆணையில் உள்ள ‘நியமனங்கள் அல்லது பதவிகள் என்கிற வாசகம்’, சுழற்சிமுறை போன்றவற்றைக் கடந்து, முஸ்லிம்களுக்கு 2%-க்கும் குறைவாகவே இடஒதுக்கீடு கிடைத்துவருகிறது என்பதைத் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் விளம்பரங்கள், தேர்வாணையம் வாயிலாகத் தேர்வானவர்கள் குறித்த பட்டியலைப் பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.

இழந்த வேலைவாய்ப்பு: பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் 3.5%-ஐ ஒதுக்குவதற்குப் பதிலாக பொதுப் பட்டியலான 31% இடஒதுக்கீட்டில், தகுதி அடிப்படையில் தேர்வானவர்களையும் இணைத்து நியமனம் செய்யப்படுவதால், அத்தொகுப்பிலிருந்து கூடுதலாகக் கிடைத்த பணிகளும் கிடைப்பதில்லை.

நிலுவையில் 100 நியமனங்கள் உள்ள இடத்தில் 3.5% அடிப்படையில் 3 பேர் மட்டுமே நியமிக்கப்படுவர். 0.5 இருப்பில் இருக்கும். அடுத்த நியமனத்தின்போது அது ‘கேரி பார்வேர்டு’ முறையில் சேர்க்கப்பட்டு, 100 பேர் நியமனத்தில் 4 பேரை முஸ்லிமாக நியமிக்க வேண்டும்.

ஒரு நியமனத்தில் நிலுவையைச் சரிசெய்ய முடியாமல் போனால், அடுத்த நியமனத்தில் விடுபட்டதைச் சேர்த்து, அதே சமூகத்து ஆட்களை நியமிக்க வேண்டும் என்பது நீதிமன்ற வழிகாட்டுதலாகும். இப்படி எந்த விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படாமலேயே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது.

இச்சட்டத்தினால், 20 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பணிகளை முஸ்லிம்கள் இழந்திருக்கக்கூடும் என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். சில கல்வி நிலையங்களில் முஸ்லிம்கள் நுழைய முடியாத சூழல் இருந்தது. அங்கு அவர்கள் சேர முடிவது மட்டுமே இந்தத் தனி இடஒதுக்கீட்டால் கிடைத்தது.

அண்மையில், தெலங்கானாவில் நடந்த பா.ஜ.க. தேசியக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சிறுபான்மை இன மக்களின் கல்வி-பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பல திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே 69% இடஒதுக்கீட்டைப் பின்பற்றும் மாநிலம் தமிழகம். சமூகநீதி அடிப்படையில் ஆட்சியமைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநிலங்களுக்கும் இந்த மாதிரியை எடுத்துச் செல்லும் வகையில், முஸ்லிம்களுக்காக வழங்கப்படும் உள் இடஒதுகீட்டுச் சட்டத்தில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

- புதுமடம் ஜாபர் அலி

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

To Read in English: Internal quota for Muslims: Will law be redesigned?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x