

தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான 40 லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் ‘Children of Heaven’ திரைப்படத்தை ஒரே நாளில் பார்த்த அதிசயம் செப்டம்பர் 1 அன்று நிகழ்ந்தது. ஈரானைச் சேர்ந்த மஜித் மஜிதி இயக்கி, 1997இல் வெளிவந்த படம்தான் ‘Children of Heaven’.
விருத்தாசலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600 மாணவிகளோடு, நாற்பதுக்கும் அதிகமான ஆசிரியர்களோடு நானும் இப்படத்தைப் பார்த்தேன். தமிழ் சினிமாவை மட்டும் பார்த்துப் பழகியவர்கள் இப்படத்தைப் பார்க்கும்போது தூங்கிவிடுவார்கள் என்ற என் நம்பிக்கை பொய்த்துப்போனது.
600 மாணவிகளும் ஆசிரியர்களும் படத்தோடு ஒன்றியிருந்ததைப் பார்த்தேன். ‘ஷு’ தான் படத்தின் கதைநாயகன் என்பதை அவர்கள் நம்பினார்கள். அலியும் ஸாஹ்ராவும் சொட்டுநீர்ப் பாசனம்போல மாணவிகளின் கண்களின் வழியாக அவர்கள் மனதில், சிந்தனையில் இறங்கிக்கொண்டிருந்தார்கள் என்பதை அந்த இடத்தின் அமைதி உறுதிசெய்தது. படத்தைப் பார்ப்பதற்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை.
அரசின் முன்னெடுப்பு: உலகின் சிறந்த படங்களில் ஒன்றான ‘Children of Heaven’ திரைப்படத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்க வேண்டும் என்று நினைத்ததற்கும், அதைச் சாத்தியப்படுத்திக் காட்டியதற்கும் பள்ளிக் கல்வித் துறையைப் பாராட்டலாம். இது நல்ல முன்னெடுப்பு.
படத்திற்கான இணைப்பை, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அனுப்பியிருந்தது. படத்தைத் தலைமை ஆசிரியர்கள் முதல் நாளே பார்க்க வேண்டும். திரையிடுவதற்கு முன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் திரைப்படம் குறித்துப் பேச வேண்டும்.
பள்ளிக்கு அருகில் வாழும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என யார் இருந்தாலும் அவர்களை அழைத்துவந்து திரைப்படம் குறித்துக் கட்டாயம் பேசவைக்க வேண்டும் என்பது அரசாணை. படம் முடிந்ததும், படம் குறித்துத் தங்களுடைய கருத்துகளை மாணவர்கள் எழுதித்தர வேண்டும், அவர்களைப் பேச வைக்க வேண்டும் என்பது உத்தரவு.
ஒவ்வொரு மாதத் திரையிடலின்போதும் திரைப்படங்கள் குறித்து மாணவ - மாணவியர் பேசிய பேச்சுகளையும் எழுதித் தரும் கட்டுரைகளையும் அடிப்படையாகக்கொண்டு ஒன்றிய அளவில், மாவட்ட, மாநில அளவில் ஒரு ஆண்டுக்கு 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக நாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்கிறது அரசாணை.
முன்னெடுப்பின் வெற்றி: தமிழ்நாடு அரசும் பள்ளிக் கல்வித் துறையும் பெரும் சாதனையை நிகழ்த்திவிட்டன. இனி மாதந்தோறும் ஒவ்வொரு திரைப்படம் திரையிடப்படும்போதும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அரசாணை எழுத்தாளர்களுக்கான அரிய கௌரவம்.
கவிதை, கதை, கட்டுரை எழுதுகிற, நுண்கலைகளில், விளையாட்டில், அறிவியல் துறையில், ஆங்கில மொழி, தமிழ் மொழித் திறனில், கணினி மொழித் திறனில் சிறந்து விளங்குகிற, அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்குகிற மாணவ - மாணவிகளை ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுத்து, 20 பேர் கல்விச் சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்ற தமிழக அரசின் ஆணை உண்மையிலேயே ஆச்சரியமூட்டுவது.
கல்வி என்பது மதிப்பெண் மட்டுமே அல்ல, பல்துறை சார்ந்த அறிவுதான் என்பதை, கல்வி இணைச் செயல்பாடுகளின் வழியே அதை நிறைவேற்ற முடியும் என்பதை தமிழ்நாடு அரசும் பள்ளிக் கல்வித் துறையும் உணர்ந்து, செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
- இமையம், ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com